தந்தி அடிப்பது போல ‘குட்’ ‘சூப்பர்’ ‘நைஸ்’ என ஒரே வார்த்தையில் ஃபீட்பேக் கொடுப்பவரா நீங்கள்? சரிதானா அது?

நம் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால், அது, நாம் அனைவருமே எல்லாவற்றிற்கும் நம் அபிப்ராயத்தைத் தெரிவிப்பதாகும். கருத்துக்களைத் தெரிவிப்பதும், ஃபீட்பேக் கொடுப்பதும் இதில் அடங்கும். இவற்றை......
தந்தி அடிப்பது போல ‘குட்’ ‘சூப்பர்’ ‘நைஸ்’ என ஒரே வார்த்தையில் ஃபீட்பேக் கொடுப்பவரா நீங்கள்? சரிதானா அது?

நம் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால், அது, நாம் அனைவருமே எல்லாவற்றிற்கும் நம் அபிப்ராயத்தைத் தெரிவிப்பதாகும். கருத்துக்களைத் தெரிவிப்பதும், ஃபீட்பேக் கொடுப்பதும் இதில் அடங்கும். இவற்றை மற்றவரின் மேம்பாட்டுக்கு ஒரு கருவியாக உபயோகிக்க முடியும். 

யாரிடம் கருத்தை தெரிவிக்கிறோமோ, அதைச் சொல்கின்ற முறையில் சொன்னால், அவர்களை ஊக்கப்படுத்தி, எதைச் செய்து கொண்டு இருக்கிறார்களோ அதைக் கவனமாக செய்ய உதவிட முடியும். கருத்தைத் தெரிவிக்கும் விதத்தினாலேயே, அறிவு வளர வாய்ப்பை அமைத்து, கூடவே ஆற்றலும் பெருகச் செய்ய முடியும். மாறாக, ஃபீட்பேக் கொடுக்கும் விதத்தில் செய்பவரின் ஆர்வத்தைப் பூஜ்யமாக்கவும் முடியும்.

ஒற்றை வார்த்தை ஃபீட்பேக் பொதுவாக, கருத்து தெரிவிப்பவர் தந்தி அடிப்பது போலச் சுருக்கமாக, ஒரு வார்த்தையில் ஃபீட்பேக்கை சொல்லி நிறுத்திக் கொள்வதுண்டு. இதில், நாம் சொல்லும் “குட்”, “சபாஷ்”, “புவர்” ,”எக்ஸலென்ட்”, பேஸ்புக்கில் போடும் “லைக்” எல்லாம் அடங்கும். 

ஏன், எதற்கு “குட்”? எதைக் குறிக்கின்றது “புவர்”? எதை வைத்து “எக்ஸலென்ட்” தீர்மானிக்கப் பட்டது? எதனால் “லைக்” போட்டார்கள்? என்பது எல்லாவற்றையும் தாமே யூகித்துக் கொள்வதா?  

கருத்தைத் தெரிவித்தவர்கள், எதைக் குறித்து இப்படிச் சொன்னார்கள்? எதை யோசித்தார்கள் என்று எப்படித் தெரிய வரும்? இந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு என்னவென்று புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் தெரிவித்த ஃபீட்பேக்கோ, கருத்தோ என்ன தகவலை தெரிவிக்கிறது? 

கருத்து தெரிவிப்பதினால் வெவ்வேறு பாதிப்புகள், தாக்கங்கள் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் தான் நம்மால் கருத்து என்ற கருவியை பயனுள்ளதாக மாற்ற முடியும். 

இதற்காக, எங்கு, எதைச் செய்தால் பயனுள்ளதாக ஆக்க முடியும் என்றும், எவையெல்லாம் நேர் எதிராக நேரிடும் என்பதைப் இங்குப் பார்க்கலாமா?

செய்வதைக் குறித்து கருத்து தெரிவித்தல் நாம், ஒருவர் செய்ததை பார்த்தோ, படித்தோ நம் எண்ணத்தைத் தெரிவிப்பதுண்டு. இது, செய்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சொன்னால் அதை பீஃட்பேக் என்று கூறப்படும்.

பீஃட்பேக் உபயோகமாக இருக்க, கருத்து தெரிவிக்கும் பொழுது, செய்பவர் செய்து கொண்டு இருப்பதை மையமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள்
செய்ததில் எது சரியாக இருக்கின்றது என்று குறிப்பது மிக அவசியமாகும். வித்தியாசமாகச் செய்ததைத் தழுவிய தகவல்கள் பற்றிய ஃபீட்பேக் அளிப்பதால், ஊக்குவிக்கவும் செய்யும், தெளிவும் ஏற்படும்! நாம் அவர்கள் செய்வதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதும்  தெரிய வரும். மறுபடி அதைச் செய்யம் போது, அந்த வித்தியாசத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று முயல்வார்கள், வேறு புது மாற்றங்கள் கொண்டு வரவும் முயற்சி செய்வார்கள்.

அதே போல், அவர்கள்  செயல்படும் விதத்தைப் பற்றிய தகவலை எடுத்துச் சொல்வதாலும் அவர்கள் மேலும் தெளிவு அடைவார்கள். சிலாகிப்பதிலும், குறை காண்பதிலும் மட்டும் அல்ல. 

அவர்கள் இந்த முறை வேறு என்ன வெற்றி தரும் வழிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள் என்று எடுத்துச் சொல்வதும் அடங்கும். இப்படி ஃபீட்பேக் தெரிவிப்பது ஒரு சிறந்த கருவியாகிறது. அதனால் தான், ஃபீட்பேக் தெரிவிப்பதில் ஊக்கப் படுத்துவதும், மனந்தளர்வதும் இரண்டுமே அடங்கி உள்ளது என்று சொல்லலாம். இதைத் தெரிவிக்கும் விதத்திலும், தெரிவிப்பவர் காட்டும் அக்கறையிலும் இது வெளிப்படுகிறது.

ஃபீட்பேக்கினால் ஈடுபாட்டை இழக்க வைக்க முடியும்!

சில நிலைகளில், நாம் கருத்து தெரிவித்த விதத்தினால் செய்பவர் ஈடுபாட்டை இழக்கக் கூடும். சில நேரங்களில், நாம் செய்பவரை மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டே இருப்பதால் இது நேரிடலாம். இல்லையேல், கண் சிமிட்டாமல், மிகக் கூர்ந்தோ, மிகப் பக்கத்திலிருந்தோ அவர்களைக் கவனித்து, கருத்தை எடுத்துச் சொல்லும் பொழுதும் இப்படி ஆகலாம். 

இப்படி நிகழ்ந்தால், செய்பவருக்கு, நடுக்கமும் அச்சமும் கூடி விடுவதற்கான சந்தர்ப்பமாகலாம். இதனால் தடுமாற்றம் வரலாம். இதன் விளைவாக, தாம் செய்வதின் மீது சந்தேகம் சூழ்ந்து கொள்வதால், செய்வதை நிறுத்தியும் விட நேரிடலாம். இதனாலேயும், மிக நுண்ணிப்பாகவும், துல்லியமாகவும் கவனித்துச் சொல்லும் கருத்தை எடுத்துக் கொள்ள மனம் ஒப்பாமல் போகலாம்.

அதே போல், கருத்தைத் தெரிவிக்கும் பொழுது, அவர்களின் வேலையைப் பற்றி சார்ந்ததாக இல்லாமல் அவர்களின் குணாதிசயங்களை பற்றி விமர்சனம் செய்தால், அது வேறு திசையில் போகக் கூடும். அதாவது “நீ எப்பவும் ஸ்லோ”, “எது செஞ்சாலும், தப்பாகச் செய்யற” என்பதெல்லாம் நபரைக் குறிப்பதாகும். அதுவும் குறிப்பாகக் குறைபாடுகளை பற்றி இருப்பதால் அது மன வருத்தத்தைத் தரும். ஏனெனில், இந்த மாதிரியான ஃபீட்பேக்கில், செயலைப் பற்றி மட்டுமின்றி, செய்பவரையே நமக்குப் பிடிக்க வில்லை என்றே தோன்றி விடும்.

மற்றவருக்குக் கருத்து தெரிவிக்கும் பொழுது, “இதை நீ இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று சொல்லி விட்டால், ஒரு தடை போடுவது போல தோன்றி விடலாம். அதாவது, அவர்களை நம் எண்ணத்தின் படி செய்ய வேண்டிய நிலையில் கொண்டு வருவது போல் ஆகிவிடும். இதனால் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்க வேண்டி நேரிடும். இப்படிச் செய்வதில், அவர்களின் சுதந்திரம் தடைப் படுவதால் அடிமை சாயல் தோன்றிவிடும். இதன் விளைவாக, சிலர், சாவி கொடுத்த பொம்மை போல், சொன்னால் மட்டும் செய்வார்கள். மற்றவர்களோ, சுரம்  இல்லாமல் இயங்குவார்கள்.

சொல்லுவதை, மனக்கசப்பு இல்லாமல், மனம் புண்படாத விதத்திலும் தெரிவிக்க முடியும்.

பயனுள்ள வழிமுறைகள்

தகவல்கள் கிடைக்கும் மையங்களைப் பற்றி நமக்குத் தெரிந்ததை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்று நினைத்தால் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.

அவர்கள் செய்து வரும் வேலையின் பலன்களை மதிப்பிடும் விதம் ஏதேனும் இருக்கும். அதைப் பற்றின விவரங்களை அவர்களுக்கு விவரிக்கலாம். அப்பொழுது அவர்கள், தாங்கள் செய்வதை தாமாக சுதாரித்துக் கொண்டு, செய்யும் வழிகளை நன்றாக உருவாக்கிக் கொள்ள முடியும். 

அதாவது, வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக நாமே நாம் செய்வதற்கான கருத்தைக் கணித்து சரி செய்து கொள்ளலாம். தாமாகவே, செய்வதை உன்னிப்பாகக் கவனித்து, ஆராயும் முறையும் சமீப காலங்களில் பிரபலமாகி வருகிற ஒன்றே!

இப்படிப் பகிர்ந்து கொள்வதனால் திறமைகள் வலுப்பட்டு, தெரியாததைத் பற்றித் தெளிவு பெற்று, செய்வது நன்றாக அமையும்! 

நம் பாதையை பற்றிப் புரிந்து கொள்ள, நாம் ஒவ்வொரு கட்டத்திலும் சிந்திக்க வேண்டும். நாமே நமக்கு  ஃபீட்பேக் கொடுப்பதால், “நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன்?”, “எப்படி?”, “எந்த வழியை உபயோகிக்கிறேன்?”, “அடுத்து, என்ன செய்யலாம்?” என்பதற்குப் பதில் தெளிவாக இருக்கும். இப்படி இருந்து விட்டால், நம்மை நம் இலக்கின் அருகில் அழைத்துச் செல்லும். இதனுடன், அடுத்தவரின் ஃபீட்பேகும் நமக்கு உபயோகமாக இருக்கும்.

இது தான் நம் குறிக்கோள் என்று உறுதியாகத் தெரிந்து, கருத்துக்கள் வரும் தோரணையில், நாம் நோக்கத்தை எந்த அளவிற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்.

மெட்டா காக்நிஷன் (Meta cognition)

மெட்டா காக்நிஷன் (Meta cognition) என்பது, நாம் நமக்கு வரும் ஃபீட்பேக்கை புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் விதம் என்று சொல்லலாம்.

நமக்குக் கிடைக்கும் கருத்துக்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனை முறைகளைப் பற்றி நாமே ஆராய்ந்து, அதை மேலும் சிறப்பாக்க முடியும். அதாவது, நம் சிந்தனைகளை நாமே ஆராய்வதால், நமது குறைகள், புரியாத விஷயங்களை அடையாளம் கண்டு, நாமாக யோசித்து வழி செய்து கொள்வோம். நம்மை மேம்படுத்திக் கொள்ள, மேலும் உழைத்து, பாதையை வகுத்துக் கொள்வோம். இதனால், நேரத்தையும் நன்றாக உபயோகிப்போம். நாம் செய்வதை பார்த்து, அதன் உபயோகத்தையும், விளைவுகளையும் பார்த்து, மற்றவரும் பின்பற்றுவார்கள்!

ஃபீட்பேக் கொடுப்பதின் பயன், சொல்லின் வன்னத்திலும், தேர்ந்தெடுக்கும் வார்த்தையைப் பொருத்து இறுக்கு. இதிலிருந்தே, இது, எந்த அளவிற்கு மற்றவருக்கு உபயோகப் படும் என்பதும் நிர்ணயமாவதும் எனலாம்.

கருத்துச் சொல்வதின் மூலம் மற்றவர்களை எப்படி ஊக்கப் படுத்தி மேலும் வளரச் செய்யலாம், எப்படி உதவலாம் என்பதைப் பார்த்தோம். இதே போல் பிசக்கு சொல்லும் கருத்தினால் மற்றவர்களைக் கீழ்ப் படுத்தவும் முடியும். இனிமேல் எந்த விதத்தில் கருத்து தெரிவிப்பது, ஃபீட்பேக் கொடுப்பது என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com