வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!

நம் வீட்டில், உபயோகமாக இல்லாத பல்வேறு பழைய பொருட்களை பரணையில் வைப்பது பழக்கமே.  இங்கு நான் விவரிக்கப் போவது வீட்டின் “மேல்” பரணை என்பதோ அலுவலகத்தைச் சார்ந்ததோ அல்ல. நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளம்”
வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!


நம் வீட்டில், உபயோகமாக இல்லாத பல்வேறு பழைய பொருட்களை பரணையில் வைப்பது பழக்கமே.  இங்கு நான் விவரிக்கப் போவது வீட்டின் “மேல்” பரணை என்பதோ அலுவலகத்தைச் சார்ந்ததோ அல்ல. நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளம்” பற்றி கொஞ்சம் உரையாடலாம். 

நம் “தலை-மனம்-உள்ளத்தை”, வீட்டின் பரணையை போலவே இதையும் நாம் உபயோகிப்பதுண்டு. வித்தியாசம் என்னவென்றால், பல்வேறு பொருட்களை வைத்துக் கொள்ள இது இடம் செய்து கொண்டே போகும்! ஒரு விதத்தில், இப்படிச் சேகரித்து வைப்பது உதவி செய்யும். ஆனால், சில சமயம் இப்படிக் குவித்து வைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழும். அப்பொழுது, அந்த சேமிப்பிலிருந்து சிலவற்றைத் தூக்கி எறிய வேண்டியது மிகவும் அவசியம். 

உலகளவிலும் வருடத்திற்கு சில முறை இதே போல் வீட்டை முழுவதும் துப்புரவு செய்வது வழக்கம். சில வெளிநாடுகளில் குளிர் காலத்தை ஒட்டியும், சில கலாச்சாரங்களில் குறிப்பிட்ட மாதத்தில் என்றும் அமைந்திருக்கிறது. நம்முடைய நாட்டிலும் இதைப் போகி, ஹோலீ, விஷு, புது வருடப்பிறப்பு, எனப் பல பண்டிகைகளுடன் தழுவிய சடங்குகளாகச் செய்கிறோம்.

இடங்களை எப்படி அவ்வப் பொழுது சுத்தம் செய்கிறோமோ, அதே போல் நம்  தலை-மனம்-உள்ளம் ஆகிய சேமிப்பு இடங்களையும் சுத்தம் செய்ய முடியும். நம்முள்ளே ஓடிக் கொண்டிருக்கும் முன்னீடுபாடுகளை, உள் காயங்களை, வடுக்களை, கசப்பான அனுபவங்களை நம்முடைய மேல் மாடியில் வைத்துக் கொள்கிறோம். அவைகளை ஆராய்ந்து, வேண்டாததை அகற்றி விடுவது மனதுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

ஏன் இப்படிக் குவிந்து கிடைக்கிறது? நம் தலை-மனம்-உள்ளத்தில் கடந்த கால நிகழ்வுகளினாலோ, மற்றவர் சொன்ன சொல்லினாலோ இப்படி நடக்கலாம். அதாவது, அந்த கால கட்டத்தில் ஒன்று நடந்து விட்டது, அல்லது சொல்லி விட்டார்கள். நம்மைப் பாதித்தது, மறக்க முடியாததால், மனதில் வைத்துக் கொள்கிறோம். நடந்ததை மறுபடி நினைத்து நினைத்து, பத்திரப் படுத்தி கொள்கிறோம். அதை நினைவூட்டும் படி எதைச் சிந்தித்தாலும் அந்தச் சம்பவம் மீண்டும் உயிர் பெறுகிறது. நாம், அசை போட ஆரம்பிப்போம். நாளடைவில், இதுவே, நம்மை வாட்ட ஆரம்பிக்கும்.

மேல் மாடியில் இருப்பவை: சில உதாரணங்கள்

மனக் குவிப்புகள்  பல விதங்களில் இருக்கலாம்.  நாம் சந்தித்த தருணங்கள் எப்படி இருந்திருக்கலாம், அவைகளால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று சற்று பார்ப்போம்:

●    “அன்று அவர்கள் வாய் வைத்ததால் தான் என் வாழ்வே மாறி, வீணாகி விட்டது” என்று நாம் கணிக்கலாம்.

என்றோ நடந்ததை மையமாக வைத்து, அதுதான் நம்முடைய இன்றைய வாழ்வைத் தீர்மானிக்கிறது என்று நாம் நம்புகிறோம். கேட்ட வார்த்தைகளுக்கு அடிமையாகி விடுகிறோம்? இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அவர்கள் சொல் நம் வாழ்வை எப்படி மாற்ற முடியும்? அவர்களின் சொல்லுக்கோ, அவர்களுக்குக்கோ, அப்படி என்ன சக்தி உள்ளது? அந்தச் சொல்லினால் நம் முயற்சிகள் எப்படி செயலற்றதாக ஆக முடியும்?

●    நம்மை எல்லோர் முன்னிலும் அலட்சியப் படுத்தியது.

அதை நினைக்க நினைக்க, செய்தவரை  சும்மா விடக்கூடாது என்ற உறுதி மேலோங்கலாம்.

●    என்னைத் தாழ்த்தியவர்கள் தவித்தால், மனதுக்குக் குஷி (வெளியில் காட்டிக் கொள்ளாமல்).

நாம் பழி வாங்க நினைப்பது, அவர்கள் நடந்து கொண்டது இரண்டும் ஒற்றுப் போகிறது. இப்படிப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால், நாம் அவர்கள் சொல்லின் / செயலின் பிடியில் சிக்கிக் கொண்டோம் எனலாம். இப்படி நடப்பதற்குக் காரணம், நம்முடைய தன்நம்பிக்கை குறைந்து விட்டதாலும் அதனால் தோன்றிய பயத்தினாலும் ஆகலாம். பழி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு நம் குறைகளை சீர்திருத்தி, மனதை திடப் படுத்திக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.

●    அன்று சொன்னது இன்றும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதே வார்த்தைகள் நிரந்தரமான எதிரொலியாக நீடித்துக்  கொண்டே போவதால், மன அமைதி தொலையத் தான் செய்கிறது. இருந்தும் அந்த வார்த்தைகளை நம்மிடமே பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம். ஏன்?

மேல் மாடியில் வைத்ததால்

அன்று, மனம் தளர்ந்து போனதால் தடுமாறினோம்.  தர்மசங்கடமாக இருந்ததால் மனதைச் சுதாரித்து செயல்பட இயலவில்லை. வார்த்தைகள் மனதைப் பாதித்தது. அதற்குப் பிறகு சமாதானம் பெற என்ன தடுத்தது? இவை, நமக்குள் குமிறல்களாக இருந்து கொண்டே இருப்பதற்கு சில காரணங்கள்: 

●    அன்று நடந்தது நமக்குத் தலை குனிவாக ஆயிற்று. அதைச் சமாளிக்க திண்டாடினோம். வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம், இன்றும்!
●    நமக்கு ஏற்பட்டது இன்னும் யாருக்கெல்லாம் தெரியுமோ என்ற சஞ்சலம் வாட்டலாம். மற்றவரைச் சந்திக்க தயக்கம், வெட்கத்தினால் ஒளிந்து கொண்டு நமக்குள்ளேயே புழுங்கிக் கிடப்போம்.
●    இதைப் பற்றி யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? “நம்மை இன்னும் ஏளனமாகக் கருதிவிட்டால்…” என்ற அச்சம் தடுக்கலாம். பகிர்ந்து கொள்ளாததினால் குமுறல்கள் நமக்குள்ளேயே இருந்து விடுகிறது. 
●    “இவர்களை இப்படியே விட்டு வைக்கக் கூடாது. நலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும்.அவர்களுக்குப் பாடம் கற்பித்தால் தான் என்னுடைய ரணம் ஆறும்”.
●    “பழி வாங்க, சரியான வேளைக்குக் காத்திருப்பேன்…”
●    “நான் பின் தங்கி இருப்பதற்கு அவங்க தான் காரணம்" (தன் குறைபாடுகளை பார்க்காமல் மற்றவர் மேல் பழி போடுதல்).

இதன் விளைவாக நம் உடல்-மனநலம் சோர்ந்து போகிறது. உறவுகள் முறிகிறது, இதனால் எஞ்சி இருப்பவர்களிடமும் விட்டேத்தியாக இருக்கின்றோம். நியாயமா? 

அந்த நிகழ்ச்சி நடந்து வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகி இருக்கலாம். நடந்ததை ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தால் அதை விட்டுத் தாண்டி வர இயலாது. மேலும் தகவல்களை அடுக்கிக் கொண்டே போவோம். 

மேல் மாடியில் வைத்துக் கொள்வதை நியாயப் படுத்த: “எப்படி மறக்க முடியும்?”, “இப்படித் தான் சொன்னார்”, “என்னை மட்டும்...” என்று பல விதமான சுமைகளை ஏற்றிக் கொண்டே போவோம்.  உடைந்த டேப்ரெக்கார்டரை போல அதே சம்பவத்தை ரீவைன்ட் செய்வதால் ரணங்கள், மனவெறுப்பு அதிகரிக்கும்.

ரணங்கள் ஏற்பட்டது அவர்களினால் இருக்கலாம். ஆனால் அதை அதிகரித்தது யார் என்று ஆராய்ந்தாலே, நம் மேல் மாடியை சுத்தப் படுத்த தயாராகி விடுவோமோ?

யாருக்குப் பாதிப்பு?

அன்று நடந்ததை நம்மிடமே பொக்கிஷமாக வைத்துக் கொண்டுவிடுகிறோம். அவர்களின் சொல்லுக்கு வெற்றி மாலை சூட்டி, நம்மிடம் வைத்துக் கொள்கிறோம்.

இவைகளின் சுமை உணர முடிகிறது. இருந்தும் ஏன் அப்படியே விட்டு விடுகிறோம்? அதனால் வரும் அழுகை, மனபாரம், துவண்டு போவது, எரிச்சல் எல்லாம் திரும்ப திரும்ப அனுபவிக்க, பழக்கமாகி விடுகிறது என்பதாலா?

நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பதால் அதன் வீரியம் அதிகரித்து விடுகிறது. நாளடைவில், அது தோற்றத்தில் பெரிதாகி, மன வடுவாக மாறி விட நேரிடலாம். 

இந்த மேல் மாடி சேமிப்புகளையே யோசித்துக் கொண்டு இருந்தால், இதனால், கோபம் வரச் செய்யலாம், துவேஷமுமாக இருக்க நேரிடலாம், நம்மைப் பழிவாங்க தூண்டுவதும் ஆகும். இப்படிச் செய்வதால், “தலை-மனம்-உள்ளம்” எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அது நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மொத்தத்தில், வெறுப்பு, மனக்கசப்பு, தன்னிரக்கம் அதிகரித்து விடும்.

எச்சரிக்கை மணி

ஒன்று, இரண்டு என்று இல்லாமல் பலவற்றை இப்படி வைப்பதால் அதைத் தாங்க முடியாமல் நம் உடல் வலிகள் மூலமாக முதல் எச்சரிக்கை மணி அடிக்கும். 

இந்த வலிகளுக்கு டாக்டரை ஆலோசிப்போம். செய்யும் பரிசோதனைகளில் எல்லாம் “நார்மல்” என்று வரும். அப்படியும் நாம், மேல் மாடியைச் சுத்தம் செய்யாமல் இருந்து விட்டால், பதட்டம், துக்கம், கோபம், அழுகை, சாப்பிடப் பிடிக்காமல், தூக்கம் சரியாக இல்லாமல், சோர்வாகவே இருப்பது போல் தோன்றும். அடுத்த கட்டமாக மன உளைச்சலின் அறிகுறிகள் ஆரம்பமாகும். விளைவாக, சுயப் பச்சாதாபம் அதிகரிக்க, காலப் போக்கில் தன் மேல் வெறுப்பாக மாறக் கூடும்.

நமக்குத் தற்காப்பாக ஒன்றும் செய்து கொள்ளவில்லை என்று நம் மேல் கோபத்துடன், நம்மை நாமே தாழ்வாக பார்க்கவும் செய்வோம். ஆனால், நம்மை இந்தப் பரிதாப நிலையில் பார்க்கப் பிடிக்காததால், இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வுகள், கதாப்பாத்திரங்கள்-உணர்வுகளை எதிர்மறை எண்ணங்களுடன் பார்க்கத் தோன்றும்.

நாளடைவில் கூடவே நம்முடைய சில கொள்கைகளும் மங்கலாகித் தளர நேரிடலாம். உதாரணத்திற்கு, அதே வார்த்தைகளை, நிகழ்வுகளை நாம் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தால் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலோ, பார்த்தாலோ பொறாமை ஏற்படும். அவர்களைப் பழி வாங்கத் தோன்றும். நம்முடைய நல்ல குணங்கள் நழுவாரம்பிக்கும்.

நம் எண்ணங்கள் இப்படி இருந்தால், அவர்கள் சொன்னது சரி இல்லை, நியாயம் இல்லை என்று சொன்ன நாம், நமக்குள் குமுறி பொரிந்து அவர்களைப் பற்றி தாழ்வாக நினைப்பது, பேசுவது, சாபம் இடுவதுமாக இருந்தால், நம் கொள்கைகள் குலைந்து விட்டதை எப்படி நியாயப் படுத்த முடியும்?

மறுபடியும் அவர்களுக்கே வெற்றி! நம்மைத் தாழ்த்தி, வீழ்த்தி விட்டார்கள்!

ஏன் இந்த நிலைமைக்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கிறோம்? மன்னிக்க மனம் விடவில்லையா? இல்லை மறக்க நாம் தயாராக வில்லையா? “மன்னிக்க நான் என்ன மஹானா” என்ற எண்ணமா?

நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளத்தை” சுத்தம் செய்கிறோம் என்றால் அது யாருக்காக?  யாருக்குப் பாதிப்பு? நாம் நம்முடைய நலனுக்காகத்தான் செய்கிறோம் என்ற தெளிவு வந்துவிட்டால், “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்வது சாத்தியமாகும், சுலபமும் ஆகும்.

சுத்தம் செய்ய:

நம் “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்ய, கண்டிப்பாக நமக்கு மனதில் பலம் தேவை.  தாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்தால் தான் நமக்கு உறுதி வரும், நாமும் முயற்சிப்போம். மனோ தைரியம் உடன் இருந்தால் மன உறுதி கூடும். இந்த இரண்டுமே கைகோர்த்து கொண்டால், நமக்கு உபயோகமே! இல்லாததையும், தேவைக்கு மிகுதியான விஷயங்களையும், மனக்கசப்பை அதிகரிக்கும் முன்னீடுபாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, வெளியே எறிந்து விடத் தயாராவோம். செய்யவும் செய்வோம். 

மாற்றம் கொண்டு வரப்போகிறேன் என்ற எண்ணமே மாற்றத்தின் முதல் படி. மாற்றங்கள் கொண்டு வர எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோமோ அதைப் பொருத்து தான் மாற்றங்கள் ஏற்படும். எக்காரணத்திற்கோ நாம் ஆயத்தமாக இல்லை என்றால் நாம் ஜுவித்து இருந்தும் ஜுவன் இல்லாதது போல்.

நம் மேல் மாடியில் நம்மைத் துன்புறுத்துவதை சேகரித்து வைத்துக் கொண்டே வந்தால், வரும் சந்தர்ப்பங்களை பார்க்காமல் இருந்துவிட நேரிடலாம். வாய்ப்புகள் நம்மைக் கடந்து செல்வதையும் கண்டறிய மாட்டோம். 

நம் தலை-மனம்-உள்ளம் மூன்றையும் அவ்வப்பொழுது சுத்தப் படுத்திக் கொண்டால், புது வழிகள் தென்படும். ஒவ்வொரு அனுபவம், ஆச்சரியங்களிலிருந்து, திருப்பங்களிலிருந்து, துணிவான முயற்சிகளிலிருந்தே நமக்கு ஆழ்ந்த அறிவு, தாங்கும் தன்மை பிறக்கும். 

என்றோ நடந்ததை, நம்முடைய இன்றைய வாழ்வை நிர்ணயிக்க விடுகிறோம், உடல்-மனநலம் கெட! இதைப் புரிந்து கொண்டு, மாற்றத் தீர்மானிப்பதே, நலமாவதின் முதல் கட்டம்! சிந்திப்பீர்!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்    
malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com