இந்தக் கால இளைஞர்கள் சிலரிடம் இல்லாதது இதுதான்!

சமீப காலமாக என்னை ஆலோசிக்க வரும் இருபது வயதுடையவர்களிடம் ஒரு போக்கை பார்த்து வருகிறேன்.
இந்தக் கால இளைஞர்கள் சிலரிடம் இல்லாதது இதுதான்!

சமீப காலமாக என்னை ஆலோசிக்க வரும் இருபது வயதுடையவர்களிடம் ஒரு போக்கை பார்த்து வருகிறேன். இவர்கள் ஒவ்வொருவரும் பல ஆற்றல்கள் உள்ளவர்களே. ஆலோசிக்க வந்த காரணங்கள் என்னை சிந்தனை செய்ய வைத்தது. மூன்று நபர்கள் பற்றி விவரிக்கிறேன், நீங்களே பாருங்கள்:

இந்த நபர், உயரமான ஓட்ட பந்தைய வீரர். என்னிடம் வந்ததோ, தனக்கு தன்னம்பிக்கை இல்லை என்று. எதிலும் கூர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை, தலைவலி வந்து விடுகிறதாம்.

இன்னொருவர், படிப்பில் சிறந்தவள். சோர்வு அதிகரிப்பில், மதிப்பெண்கள் சரிந்து போய்க் கொண்டிருக்கிறது என்றாள். எழுதினால், கை வலிக்கத் தொடங்கி விடுகிறதாம். இதனால் ரெக்கார்ட் முடிக்க முடியவில்லை, தனக்கு கேவலமாக இருக்கிறது என்றாள்.

மற்றொருவர், படிப்பு எல்லாம் சரியாக போய்க் கொண்டு இருந்தாலும், முடிக்க முடியுமா என்ற கேள்வி மனதில் எழுவதால், படிப்பை நிறுத்தி விடலாம் என்றே எண்ணம். கோபம் பொங்கி வர, கண்ணீரும் கொட்டுமாம்.

அவர்களில் ஒரு ஒற்றுமையைப் பார்த்தேன். எல்லோரும் தன் வயதிற்கு ஏற்றார் போல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டு இருந்தார்கள். வெளி உலகப் பார்வைக்கு எல்லாம் நன்றாக இருப்பது போல் தான் தோன்றியது. எங்கிருந்து இந்தக் கலக்கங்கள், எதிர்மறை எண்ணங்கள்?

இதில் ஊக்கமூட்டும் விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களுடைய சூழ்நிலையைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததே! டாக்டர்,  அவர்களிடம், சிந்தனை-உணர்ச்சி-மனம் போராட்டம் இருந்தால் அது உடலில் உபாதையாகக் காட்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு ஒரு சபாஷ் தரவேண்டும், பலர் நம்புவதில்லை! இதைப் புரிந்து சரி செய்ய சில காலம் ஆகலாம் என்பதை ஏற்று, டாக்டர் சொன்னதை மதித்து, என்னிடம் வந்தார்கள்.

மேலும் பேசி ஆராய்ந்து பார்த்ததில் இன்னொரு ஒற்றுமை தென்பட்டது.  அனைவருக்குமே, அவர்களுக்காக யோசிப்பது அவர்களின் பெற்றோர்கள். குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில பெற்றோர் அவர்களுக்கு படிக்கும் நேரம் வரை நிர்ணயித்து கொடுத்தார்கள். எந்தவிதமான கவனக்குறைவு இல்லாமல் இருக்க, அவர்களே அனைத்தையும் பார்த்துச் செய்து கொடுத்தார்கள். அதாவது, எதைப் படிக்க வேண்டும், எங்கு படிப்பது என்பது முதல் தீர்மானிப்பது, எல்லாவற்றையும் கண்டுபிடித்துத் தேர்வு செய்து கொடுப்பது, எப்படி செய்யலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.

இங்கு விவரித்தவர்களின் பெற்றொரும் தெளிவாக இப்படி எல்லாம் செய்தோம் என்றார்கள். அவர்களைப் பொருத்த வரை குழந்தைகளை (!) கண்காணிப்பது தேவை என்றார்கள். பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டே இருக்காவிட்டால், படிப்பும் சரியாக இருக்காது, மற்ற கெட்ட பழக்கங்கள் வந்து சேர்ந்துவிடும் என்று அஞ்சினார்கள். தானே இவர்களுக்காக யோசித்தால், இந்த இன்னல்களைத் தவிர்த்துவிடலாம் என்று நம்பினார்கள். இதனால், ஓய்வு நேரம், பொழுது கழிக்கும் வழிகள், முடிந்த வரை நண்பர்களையும் தேர்வு செய்தார்கள். எந்தவித பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்பதுப் பார்த்து கொண்டார்கள். இந்த ‘என்னிடம் விட்டு விடு’ தெரிந்து, சில நண்பர்கள் இவர்களுக்கு ‘அம்மா பிள்ளை’ என்று பெயரும் சூட்டினார்கள்.

இப்படி செய்வது, நல்ல பராமரிப்பு என்று பெற்றோர் எண்ணினார்கள். செய்த ஒவ்வொரு முயற்சியும் நல்ல எண்ணத்துடன் தான் செய்தார்கள். ஆனால் இது போல் பார்த்து-பார்த்துச் செய்வதின் விளைவு, வளர்ந்து வருவோருக்கு ‘சிக்கல் தீர்த்தல்’ (Problem Solving) அதாவது பிரச்னைகளுக்கு விடை கண்டறிதல் திறன் வளர வாய்ப்பு இல்லாமல் இருந்து விடுகின்றது. நம் அன்றாட வாழ்க்கைக்கு ‘சிக்கல் தீர்த்தல்’ மிகத் தேவையான திறன். இது இல்லாவிட்டால், தன்னம்பிக்கை வளராது. தானே தீர்மானம் செய்ய வேண்டிய சூழ்நிலை என்றால் பயம் வந்து தலை வலி போன்ற உபாதையாக வெளிப்படலாம்.

இது வரையில் பெற்றோர் சொல்லுக்கும், முடிவுக்கும் கட்டுப்பட்டிருந்தவர்கள், ஏற்றுக் கொண்டவர்கள், சூழ்நிலை காரணமாக தானாக யோசிக்க வேண்டிய நிலையில்,  குழம்பிப் போய், ஸ்தம்பித்துப் போனார்கள். ஓர் சிலர், இதற்குச் சம்மந்தமே இல்லாமல், குடும்ப வழக்கத்தின் நேர் எதிரானப் பழக்கங்களை தேர்ந்தெடுத்தார்கள். அதிலொன்றான டேட்டூ (tattoo) போட்டுக் கொள்வது பிரபலமாக உள்ளது.
 

புரியாப் புதிர்

ஒரு வினோதமான பகிர்ந்தலும் இருந்தது. பெற்றோர்கள், வளர்ந்து வரும் இவர்கள் அடைய வேண்டிய குறிக்கோளை, உயர்த்தி கொண்டே போனார்கள். இதை அடைய ஒரு சுலபமான வழியையும் (தூண்டுகோலை) செய்து கொடுத்தார்கள். அதிக மதிப்பெண் கிடைத்தால், பிடித்த பொருள் வாங்கித் தருவதாக ஒரு உத்திரவாதம். பெற்றோர் தாங்கள் காட்டும் அக்கறைக்கும், செலவழிக்கும் பணத்திற்கும் அதிக மதிப்பெண்ணை எடுத்தால் போதும் என்று இருந்தார்கள்.

இது, ஆங்கிலத்தில் ‘carrot and stick policy’ (காரட் அண்ட ஸ்டிக் பாலிசி) என சொல்லப்படும். அதாவது  குச்சி முனையில் கேரட்டை கட்டி வைத்து, அதைக் காட்டி, இதைச் செய், கேரட் கிடைக்கும் என்று விரட்டுவார். நாமும் அதை அடைய ஒடிகொண்டு இருப்போம்! மதிப்பெண் பெற்றால் கேரட் (லஞ்ச பொருட்கள்). இதைச் செய், அப்போது தருவேன் என்றாலே அது லஞ்சம் தான்.

மதிப்பெண் மேல் மட்டும் கவனம் இருந்ததால் தங்களின் திறன்களை வளர்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே நிலவியது. மேலே விவரித்தவர்கள் தனக்கு என்று ஒரு முடிவை எடுக்கத் தெரியாமல் தத்தளித்துக் குழம்பிப் போனார்கள். அவர்கள் மனதின் கவலை தலைவலியாகவும், எழுத கஷ்டமாகவும் தோன்றியது.

உணர்ச்சிவசப்பட்ட இணைப்பு

ஒரு விதத்தில், இங்கு குறித்த வருவோர், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' போன்ற ‘சந்தோஷ்’கள். பெற்றோர்கள், ‘அபியும், நானும்’ அப்பா போன்றவர்களாக. பெற்றோர் சொன்னதை ஏற்றுக் கொண்டாலும் தங்கள் விருப்பத்ததடன் இணையாததால் தங்களை ஊக்கப்படுத்தி கொள்வதில் தவிப்பு உணர்ந்தார்கள். தனக்காக இவ்வளவு செய்யும் பெற்றோர் சொன்னதை நிராகரிப்பதில் குற்ற உணர்வும் குறுகுறுப்பும்.

இப்படி இருப்பதால், வளர்ந்து வருவோருக்கு சின்ன விஷயத்திலும் முடிவு எடுப்பது சவாலாக தோன்றி விடுகிறது. தானாக சிந்தித்தால் சரியாக இருக்குமா? பதில் கிடைத்தால், பிரச்னைக்கு ஏற்றதாக அமையுமா? என்று சந்தேகமே. ஒரு வேளை, பெற்றோர்கள் திரும்ப, திரும்ப தங்களை அறியாமல், ‘உனக்குத் தெரியாது’, ‘உனக்கு இதில் எல்லாம் என்ன அனுபவம் இருக்கு’? ‘நான் செய்கிறேன், அப்பொழுது தான் சரியாக வரும்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்ல, வளரும் பருவத்தில் அவர்கள் மனதில்  வாங்கி கொள்வது, ‘என்னால் இதை எல்லாம் செய்ய முடியாது’,‘செய்ய தெரியாது’ உறுதி மொழியாகிறது.

இதே போல், அவர்களுக்கு எது பொருத்தம் என்று பார்ப்பதோடு எதனால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் படிப்பு தேர்வாயிற்று. இங்கு விவரித்த ‘கை வலிக்கிறது’ என்பவர், கணக்கு விரும்பி. ஆனால் சேர்ந்ததோ மருத்துவம் (பெற்றோர் இருவருமே மருத்துவர், அவர்களின் பெரிய நர்ஸிங் ஹோமை எதிர்காலத்தில் நடத்த).

படிப்பை விடலாம் என யோசித்தவர், எக்கனாமிக்ஸ் படிக்க ஆர்வம், படித்திருந்ததோ இன்ஜினியரிங். பெற்றோருக்கு எக்கனாமிக்ஸால் எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பிக்கையில்லை.

இதனால் படிப்பில், மனம், உணர்ச்சி இரண்டும் ஒன்றுபடுத்த முடியாததால், தங்களுக்குள் எழுந்துள்ள கேள்விகளை முடிவு செய்யவும் முடியாததால் குழப்பம் அடைந்தாற்கள், மனம் தளர்ந்து, தாழ்வு மனப்பான்மை போல உணர தொடங்கினார்கள்.

தங்களுக்கு பிடித்தம் இல்லாமல் இருக்க, மறு மொழி சொல்லாததால், உடல் இதை வேறு தோரணங்களில் காட்டியது. இவர்கள் ஆலோசனைக்கு வந்தார்கள், பலருக்கு வருவதற்கு கூச்சம், பயம்; இப்படி ஆலோசிக்கலாம் என்று தெரியாமலும் இருக்கலாம்.

மனப்பாடமும் நோட்ஸும்

பல மேல் படிப்பு இடங்களுக்கு தங்களின் வளர்ச்சியின் பாதை மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விளம்பரப்படுத்துவது. இதனால், தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று இருக்க, அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் குறிக்கோளானது.

இத்துடன், பாடத்தின் எல்லா நுணுக்கங்களை நோட்ஸாக தயாரித்துத் தருவதால், மனப்பாடம்  பண்ண சௌகரியமாகி விடுகிறது. மதிப்பெண் கிடைக்கும் என்பதால் இதையே செய்தார்கள். இத்துடன், பரிட்சைக்கு வரக் கூடும் கேள்வியையும் க்வஸ்டியன் பாங்க்காக (question bank) கொடுத்து விடுவதால் வர போகும் கேள்விகளுக்கு மட்டும் தயாரானார்கள், சுலபமாக மார்க் வாங்க முடிந்தது. இந்த 100% என்ற முத்திரை தப்பாமல் இருக்க, சில இடங்களில், அடித்தாவது மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்தினார்கள்.

மற்றவர்களே நமக்காக யோசிப்பதால் நமது ஆராயும் திறன் முடங்கிப் போய் விடுகிறது. இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது காலத்தின் போக்கு.

மாற்ற வேண்டுமே

அவர்களுக்காக இல்லாமல், அவர்களுடன் யோசித்தால் தானாகவே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர் தேர்வு செய்யும் முறைகளை பகிர்ந்து கொண்டால், அதன் நுணுக்கங்கள் புரிய வரும். படிப்புடன் தினசரி வாழ்க்கையிலும் முடிவு எடுக்கக்கூடிய  வாய்ப்புகள் தாராளமாக தரலாம்.

முடிவு செய்யும் விதத்தை தெளிவாக காண்பித்தால், செய்முறை புரிய வரும். தானாக யோசித்து, விஷயங்களை ஆராய அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன் வளரும். பிரச்சனையோ,தூண்டதல்களைகளோ தீர்க்க தேவையான வளங்களை உபயோகித்து, முடிவு செய்யும் திறன் வளர, மனோ பலமும் கூடும், உடல் நலனும்!

கல்விக்கூடங்களில் ‘சோஷியல் இமோஷனல் லேர்னிங்” (Social Emotional Learning, SEL) கற்றலில், பழக்கங்களில், இடைவினைகளில், கற்பிக்கும் கலைகளிலும் இருந்து விட்டால், வளரும் பருவத்தில் முடிவெடுப்பதுடன் அதன் துணை திறன்களும் பலமடையும்!

மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com