முழு படிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’!

ஒற்றுமை, பாசம், உதவும் தன்மை , போன்ற குணாதிசயங்கள் உள்ளவராக இருப்பது நமக்கும், அவர்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையைச் செய்யும்.
முழு படிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’!

ஒற்றுமை, பாசம், உதவும் தன்மை , போன்ற குணாதிசயங்கள் உள்ளவராக இருப்பது நமக்கும், அவர்களுக்கும், சமுதாயத்துக்கும் நன்மையைச் செய்யும். இவை இல்லாததும், கூடவே இவை இல்லை என்ற புரிதலும் இல்லா விட்டால், நேர்வது பதட்டம், கோபம், மனச் சோர்வு, தற்கொலை முடிவுகள் போன்றவையாகும். இதன் மற்றொரு  பிரதிபலிப்பு மனக்கசப்பு, சண்டை, ஏற்றத்தாழ்வு எனப் பல நிகழும்.

இந்தியாவில் சமீபப் புள்ளி விவரத்தின் படி மனநலம் மற்றும் அதைச் சார்ந்த ஒழுங்கின்மை, ஆயிரம் நபர்களில் குறைந்த பட்சம் 9.5 நபர்களுக்கு மனநோய் இருப்பதாகவும், அதிக பட்சமாக ஆயிரத்தில் 102 நபர்களுக்கு மனநல குறைபாடுகள் இருக்கக்கூடும் என்கிறது. இந்தப் பட்டியலில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, மனச்சோர்வு, ஸ்கிஜோஃப்ரீனியா, போதை அடிமை என்று பலவற்று உள்ளன. இதைச் சீர்திருத்த வழிகளை அமைத்துச் செய்வது தேவையாகும். நாம் வாழும் நகரத்தை ‘ஸ்மார்ட்’டாக ஆக்கி வரும்போது நம் நலனை நன்றாக்குவதின் வழியைத் தேடி அமைப்பதும் ‘ஸ்மார்ட்’ தான்!

சரி, எல்லோருக்கும் சம அளவில் மனதிடம் அளிப்பது சாத்தியமா? கண்டிப்பாக இது முடியும் என்று உறுதியாகச் சொல்லலாம்! குறைந்த செலவில் எல்லோரும் சமமாக உபயோகிக்கக் கூடியதாக ஏதேனும் வழி இருக்கிறதா? ஒரு வழி இருக்கிறது, அதைச் சுலபமாக அமைக்கலாம். இதோ, அதன் விவரிப்பு.

இது ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’ / ஸோஷியல்-எமோஷனல் லர்னிங் (Social-Emotional Learning) என்ற முறை. இதைப் பள்ளியின் தொடக்கத்திலிருந்தே ஆரம்பித்தால் அதன் பலன், வளரும் பிள்ளைகளின் வளர்ச்சியில் தெரியும். இதை, பிறகு செய்தாலும் நன்மையே! கல்லூரிகளிலும் வேலை செய்வோருக்கும் இந்தத் திறன்களை பயிலச் செய்ததில், பலன் தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதற்கு  தனியாகச் செலவு செய்ய வேண்டி வரும்.

சமூக-உணர்வுகளின் கற்றலை வெளிநாட்டில் பல பள்ளிக்கூடங்களில் செய்து வருவதால், அதன் பயனை பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன: படிப்பு, குணங்கள், மற்றவரிடம் பழகுதல், தன்னைக் காத்தல் எல்லாம் சீரடைந்தது. சமூகநீதி நிலவியது. பொறுப்பான நபர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்று காணப்பட்டது.

அப்படி என்ன இருக்கிறது இந்த ‘சமூக-உணர்வுகளின் கற்றலில்’ என்பதைப் பார்ப்போம்.

‘சமூக-உணர்வுகளின் கற்றல்’: புரிந்து கொள்வோம்

சமூக-உணர்வுகளை கற்றுக் கொள்வதால்,  செய்திறனும் மனோபாவமும் மேம்படும். இதன் இன்னொரு வடிவத்தை ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்று மேல்நாட்டு ஆராச்சியாரான டேனியல் கோல்மேன் விவரித்தார். இதன் அடிக்கல்லை அதற்கு முன்னதாக ‘வர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஸேஷன் (WHO)’ நாட்டி, இதற்கு, ‘வாழ்க்கைத் திறன் கல்வி’ (life skills) என்று பெயர் சூட்டினார்கள். இதில், முடிவு செய்யும் திறன்கள்,  உணர்வு வண்ணங்கள் திறன்கள், தன்னாட்சித் திறன்கள், மற்றவருடன் சகவாசத் திறன்கள் எனப் பட்டியலிட்டார்கள். திறன்கள் யாவும், வீட்டிலிருந்து வளரத் தொடங்குகிறது. இவற்றைப் பள்ளிக்கூடங்களில் மேம்படுத்தப் பல வாய்ப்புகள் உள்ளன.

மற்றவர்களுடன் பழகுதல், உணர்வுகளின் கற்றல், தன்னைப் பற்றி அறிதல், உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு வெளிப்படுத்துவது,  மற்றவர்களுடன் பழகுவது, நம் உடலின் பரிச்சயம், முடிவு எடுப்பது, பிரச்சனைகளைச் சீர் செய்வது என்று பல திறன்கள் இதில் அடங்கி இருக்கிறது. இந்தத் திறன்களின் கலவை, நம் மனப்பாங்கு, கோட்பாடுகள், முக்கியமான கருத்துகள், நடத்தை முறைகள், செயல்படும் விதங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றன.

அதனால் தான் ஒவ்வொரு திறனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. ஒன்றுக்கொன்று பின்னி இருப்பதால் எந்தத் திறனும் பெரிது, சிறிது என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து ‘வர்ல்ட் ஹெல்த் ஆர்கனைஸேஷன்’ நலன் பற்றி குறிப்பது நன்றாகவே பொருந்தும்! அவர்கள் வர்ணிப்பது: நலன் என்றால், வெறும் நோய் அற்ற நிலை அல்ல. நம் உடல் நலம், மனவளம், சமூக இடைவினைகள் எல்லாமே நலன் என்றதினுள் அடங்கும். நலன் முழுமையானது என்பதால், ஒன்றை விட்டு ஒன்று இருக்க இயலாது: ஒன்று இல்லாவிட்டால், மற்றவற்றிலும் குறைபாடுகள் வந்து விடும் .

முழு நலனைப் பற்றி நம் முன்னோர்களும், பயிற்றுநர்களும் சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் திரும்ப திரும்ப வலியுறுத்துவது, கற்றலில் யோசிப்பும், கூர்மையான கவனம் செலுத்துவதற்கான சூழல் இருக்க வேண்டும் என்று. இதை எல்லாம் ஒன்றாக்குவது  மேற் சொன்ன ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’.

அப்படி இல்லாமல், பள்ளியில், பாடத்தை மட்டும் கற்றால், அறிவு வளரும். ஆனால் கற்றதை செயல் படுத்துவது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திறன்கள், மனப் பக்குவம் எல்லாவற்றிலும் குறைபாடுகள் நிலவக் கூடும். ஆராய்ச்சி செய்து, வாழ்க்கை சாதிப்பில் படிப்பை விட இந்தத் திறன்களின் பங்குதான் அதிகம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்.

இதைத் தான் நாமும் சமீப காலத்தில் காண்கிறோம்: கல்லூரியிலும், வேலை அலுவலகங்களிலும், பிறருடன் கூடி வேலை செய்வது, ப்ராஜெக்ட் செய்வது கடினமாகிறது, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததாலும் கருத்து வேறுபாடுகள் நேர்கிறது, பெரும்பாலானோர் டென்ஷனில் மூழ்கி இருக்கிறார்கள் என்று. இவை, திறன்களின் குறைபாட்டினால் தான். இதைச் சுதாரிக்க, பயிற்சியாளரை அழைத்து பள்ளிகளில், நிறுவனங்களில் பயிற்சி கொடுப்பதும் உண்டு.

அதற்குப் பதிலாக, பள்ளி ஆரம்பத்திலேயே இந்தத் திறன்களை வகுப்புகளில் கற்றலுடன் புகுத்தி விட்டால் செலவின்றி முழுமையான வளர்ச்சி அடைவார்கள்.

தற்போதைய சூழலில், பள்ளிக்கூடங்களில் ‘சமூக- உணர்வுகள் கற்பது’ என்பதற்கான பயிற்சி, குறிப்பாக் கோபம், புகை பிடிப்பு, தைரியமாக இருப்பது இவற்றை மையமாக வைத்து வகுப்புக்களுக்குப் பிறகு எடுக்கப்படுகின்றன.

இன்னொரு விதம், ‘சமூக-உணர்வுகள் கற்றல்’ திறன்களைப் பாடம் சொல்லித் தரும் முறையிலேயே சேற்றுக் கொள்வது. இதைப் பல்வேறு வகையில் செய்யும் முறைகள் உள்ளன. குறிப்பாகக் கூடிப் படிப்பதின் வகைகளான ‘கோலாப்ரெட்டிவ் லர்னிங்’ (collaborative learning), ‘கோவாப்ரேடிவ் லர்னிங்’ (cooperative learning), ‘ரேஸிப்ரோக்கல் லர்னிங்’ (reciprocal learning). இந்த மூன்றிலும், ஆசிரியர் பாடங்களை கற்றுக் தரும் முறையை மாற்றி வகுப்பார்கள். ஆசிரியர் பயிற்சியாளராக இருப்பார்; மாணவர்களை ஒருவருக்கொருவர் ‘கூட்டு கற்பிக்கும் குழு’வாக அமைப்பார்கள். குழுவில் படிப்பது, சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்வது, மற்றவருக்கு உதவுவது, என்ற பொறுப்பு மாணவரிடமே இருக்கும். அதாவது மேற்கூறிய யோசிப்பு-உணர்வு-சமூக திறன்கள் உபயோகிக்க,நேர் விளைவாக ஒவ்வொன்றும் மேம்படும்!

இப்படிச் செய்வதற்கு மிக அவசியமானது: படிக்கும் பள்ளிக்கூடத்தின், மற்றும் வகுப்புகளின் சுற்றம்-சூழல், அனுபவங்கள். மேலும், பாரபட்சமின்றி ஆசிரியர்கள் செயல் பட்டால் அதுவும் மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கும்.

இந்த மாதிரியான சூழலில் வளரும் மாணவர்களுக்கு அறிவுடன் பொறுப்பும், அக்கறையும் திடமாகும். அவர்களின் படிப்புத் திறன், வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்தும். பிள்ளைகள் தங்களைத் தானே மதித்துக் கொள்வார்கள். இதனாலேயே தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி யோசித்து நன்றாகச் செயல் படுவார்கள். இந்தக் கற்றலின் தன்மையினாலேயே வளர்ச்சி கூடி, சமூக நீதி ஏற்பட்டு,  பிரத்தியேகமாக திறன்களைக் கற்றுத் தரத் தேவை இல்லாததாதல், செலவுகள் குறையும்.

‘சமூக - உணர்வுளின் கற்றல்’: வெவ்வேறு கண்ணோட்டம்

சமுதாய உணர்வுகள் கற்பதால் பல நலன்கள் உள்ளன. இந்த ஊக்குவிக்கும் கருவியால் கற்பதினால், மற்றவருடன் பழகுவதும் கற்றலும் மேம்பட, குறிக்கோள்களை அடைந்து, வளர்ச்சி அடைகின்றோம். செலவுகளைக் குறைகிறது, சமூகநீதி நிலவுகிறது.

சொல்லப் போனால், வகுப்பறைகள் முழுமையாக ஆர்வம் காட்டி, மற்றவர்களுடன் சேர்ந்து சிந்தித்து, விடைகளைக் காணும் இடமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் பல கோணங்களிருந்து புரிந்து கொள்வதால் கற்றலில் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். இப்படி வகுப்புகள் ஆதரவாக இருந்தால், திறன்கள் வளர்ப்பதோடு ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் காட்டுவார்கள்.

இந்த கற்றலில் அடங்குவது:

வளர்ச்சியின் கண்ணோட்டத்திலிருந்து ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’

வளர்ச்சிக்கும் கற்றலுக்கும் பல பொருத்தங்கள் உண்டு. இரண்டும் இயற்கையாக வளர்வதே. கற்றுக் கொண்டிருந்தால் வளர்ச்சி் கூடிக்கொண்டே போகும். அதற்கு, அறிவு + சமூக + உணர்வுகளுக்குப் பாடங்களில் சம பங்களித்தால், பல விதங்களில் ஊக்குவிக்கத் தூண்டுதலாகி, வளர்ச்சியை மேம்படுத்தும்.

இந்த ‘சமூக-உணர்வுகளின் கற்றல்’ திறன் என்பதில் பல திறன்கள் அடங்கியுள்ளதால் இதனால் முழு நலனை (உடல்+மனம்+சமூக) அடைவோம். வாழ்வின் எந்த நிலையை எடுத்துக்கொண்டாலும் யோசிப்பு-உணர்வு-சமூக என மூன்று திறன்களின் பங்களிப்பும் இருக்கிறது. மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் தர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், மூன்றும் இருக்கும் இடத்தில், ஆற்றுமையுடன் செயல் படுவார்கள்.

இதன் பிரதிபலிப்பு அவரவரின் தைரியத்தில், படைப்பாற்றலில், மற்றும் அறிவில் தெரிய வர, மேலும் தேடி கண்டுபிடித்து, புரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது. இது போல் நாம் எல்லோரும் செய்து பல தருணங்களில் திருப்தி அடைந்து இருக்கின்றோம்.

மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை, வளரும் பருவத்தில், பிள்ளைகளைப் பெரியவர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிடியில் பிடித்து வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, வழிகாட்டியாக இருந்து சுதந்திரம் தர வேண்டும். அப்பொழுது தான் நமக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கையைத் தெரிவிப்போம். இதுவே ஊக்குவிக்கும். விளைவாக, அவர்களுக்கும் எந்த சூழலையும் எதிர்கொண்டு சரி செய்யும் திறன்கள் வளரும். குறிப்பாக, யோசிக்கும் திறன்கள் வளர வாய்ப்பாகிறது.

அதே போல், மற்றவர்களுடன் பழகுவதற்கான திறன்களைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தச் சமூக சூழ்நிலை தேவைப்படுகின்றது. உலகின் மிகப் பிரபலமான ஆய்வாளரான லெவ் வைகாட்ஸ்கீ இதைத் தெளிவாக விவரித்திருக்கிறார். சமூக வட்டாரங்களில் ஒருவருக்குத் தெரியாததை, அதை அறிந்த மற்றொருவர் புரிய வைக்கும் வாய்ப்புகள் அமைந்திடும். புரிந்து கொள்ளும் வரை, நிழல் போல் கூடவே இருந்து, புரிந்து விட்டதும் விலகி விடுவார்கள். இங்குச் கூச்சப்படத் தேவையே இல்லை.

வகுப்பின் சிற்பி

வைகாட்ஸ்கீ சொல்வதை வகுப்புகளில் செயல்படுத்த முடியும். மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, அவர்களுள் உள்ள திறன்களை வெளியே கொண்டு வருவதற்கு, மேலும் கற்றுக்கொள்ள சூழலை அமைப்பது தேவை. இதில் தானாக ‘சமூக-உணர்வுளின் கற்றல்’ அமைந்துவிடும்.

இப்படிச் செய்தாலும் கூட, எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காமலும் போகலாம், அதற்குக் காரணங்கள் உண்டு. ஒரு விதத்தில் இது சமுதாய நிதர்சனம் என்றே விவரிக்கலாம்.

சிலர், தங்களைப் பற்றி கேள்விப் படுவதை உள் வாங்கிக் கொண்டு, அதன் படியே செயல் படுவார்கள். இது எப்படி சாத்தியம்? ஒரு சிற்பி தனக்குத் தோன்றுவதை செதுக்கி அப்படியே சிலையாக்குவார். அதே போல், வளரும் பிள்ளைகளுக்கு அவர்களைப் பற்றி வீட்டுப் பெரியவர்களோ, பள்ளி/ ட்யூஷன் ஆசிரியர்களோ அவர்களைப் பற்றி சொல்கின்றதை அப்படியே நம்பி,  ‘ஓகோ இவர்கள் சொல்வது போல் தான் நான்’ என்று எண்ணி செயல் படுவார்கள். இந்த ‘பிக்மெலியின் எஃபக்ட்’ (Pygmalion effect) வளரும் காலகட்டங்களில், குறிப்பாக ஆசிரியர்கள் ‘எனக்குத் தெரியும், உங்களுக்கு முடியும்’ என்றால், அது அப்படியே பதிந்து, ஊக்குவிக்கும். அதுவே ‘முட்டாள்’ என்று அழைத்தால் தன்னை அப்படியே செதுக்கிக் கொள்வார்கள். சொல்லினால் பாதிப்பாகிறது. இப்படிச் செய்து விட்டால் இவர்களின் சமூக-உணர்வு திறன்கள் குன்றி இருக்கும்.

வகுப்பு ஆசிரியர்களின் பங்களிப்பு

உணர்வுகளின் கற்றல்  நிலவுவதற்கு அந்தச் சூழலில் உள்ளவர்களின் பங்களிப்பு முக்கியமானது. சொற்களினால் வளரும் பிள்ளைகள் எந்த அளவிற்கு ஆழமாக பாதிக்கப் படுகின்றன என்று அறிய வேண்டும்.

மாறாக, சொல்பவரின் சமுதாய-உணர்வு ஆழமாக இருந்தால், அவர்களின் சொல்லிலிருந்து ஊக்குவிக்கப் பட்டு, தங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வளர, சுய மதிப்பீடு நன்றாக இருக்க வாய்ப்பாகிறது. இதை, சமுதாய உணர்வைப் பள்ளிக்கூடத்தில் புகட்டும் விதம் எனலாம்.

வகுப்புகளில் எல்லோருக்கும் சம பங்கு அளித்து, ஒருவரின் கருத்தை மற்றவர்கள் கேட்பது என்று வகுத்தாலே அது சம உரிமை பெற்று, திறன்கள் வளர்கிற இடமாகும்.

சமூக-உணர்வின் கற்றலின் இடையூறுகள்

மாற மாட்டேன் என்ற மனப்பான்மையும், தன் புத்தியின் கூர்மை பற்றிய தவறான அபிப்பிராயமும் இடையூறாகும்.  கருத்து தெரிவித்ததிலும், புகழ்வதற்கும் இடம் உண்டு.

கருத்தைத் தெரிவிக்கும் போது, அவர்களின் புத்திக் கூர்மையை குறித்து ‘நீ புத்திசாலி அதனால்தான் முடிந்தது’ என்ற தெரிவிக்கக் கூடும்.  கேட்பவரும் தாங்கள் புத்திசாலி என்பதால் மட்டும் செய்ய முடிந்தது என்று நம்புவார்கள். இந்த அபிப்பிராயத்திற்கு எந்தப் பங்கமும் வராதிருக்க, தனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே செய்வார்கள். இப்படி இருப்போர், ‘மாற்றமில்லாத நுண்ணறிவு/புத்திசாலித்தனம்’ என்று சொல்லலாம். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் எழும் சந்தேகங்களை கேட்க அஞ்சுவார்கள். எங்கே கேட்டால் அவர்கள் புத்திசாலி இல்லை என்று எடை போட்டு விடுவார்களோ என்பதற்காகவே மொளனம் சாதிப்பார்கள். சற்று சரிந்தாலும், தாங்க முடியாமல் போகும். அச்சம் அதிகரித்து கோழையாக இருப்பார்கள். இந்த மாற்றமில்லாத நுண்ணறிவு ஆவதற்கு மற்றவர்கள் கருத்தை தெரிவிக்கும் விதம் பொறுப்பாகும்.

இடையூற்றுக்கு வெளிச்சம்

அதற்குப் பதிலாக, வேலையைக் குறித்து தகவல்களை விவரித்தால், செய்ததில் எது நன்றாக அமைந்தது என்றும், எதை மேம்படுத்த வேண்டும் என்றும் வித்தியாசம் புரிய வரும். அவர்களின் செய்த முறையைக் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் அதுவே ஊக்குவிக்கும்.

இதில் இன்னொரு நலனும் உண்டு. செய்வோருக்கு, தன் உழைப்பின் மீது நம்பிக்கை, உழைத்தால் சாதிக்கலாம் என்ற எண்ணம் வலுவாகும். இந்தக் கண்ணோட்டம் கொள்பவர்கள் தங்களுடைய புத்திசாலித்தனம் ‘வளையக்கூடிய நுண்ணறிவு’ என்பதாகப் பார்ப்பார்கள். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முயற்சிப்பார்கள், தோல்வியைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

தங்களின் கடுமையான உழைப்பின் மீதும், திறமை மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிச் செய்வதினால் திறன்களைக் கற்றுக்கொள்வது, அந்தச் சூழ்நிலையால் இயங்கும். இவர்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவர்களாக இல்லா விட்டால் கூட வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பார்கள்.

கருத்து தெரிவித்தல்

சமூக-உணர்வுத் திறன் இல்லாதது கருத்து தெரிவிப்பில் தெரியும். புகழ்ந்து, கருத்து தெரிவிப்பில் வேற்றுமை அமையலாம். ஒரு உதாரணத்திற்கு, நன்றாகச் செய்தால் ‘சபாஷ்’ என்கிறோம். ஒற்றை வார்த்தைப் புகழில் தகவல் அதிகம் இல்லாததால் உதவியற்றவையாகும். இந்த சபாஷ் எதற்கு, தன்னைப் பற்றி என்ன குறிக்கின்றது என்பதை யூகிக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த சபாஷ் கிடைத்தால் மட்டுமே தங்களின் வேலைச் சரியாக இருந்தது என்று எண்ணிக் கொள்வார்கள். இதையும் தன் புத்திசாலித்தனத்தினால் தான் பெற முடிகிறது என்று முடிவு செய்வார்கள். மாற்றமில்லாத நுண்ணறிவு ரகத்திற்குள் இருந்து விடுவார்கள்.

அதற்குப் பதிலாக நம் கருத்தை, எது நன்றாக அமைந்திருக்கிறது என்பதை விவரித்து அத்துடன் பிழையை பற்றிய தகவல்களை பகிர்ந்து சொன்னால், உபயோகமாகும். இப்படிச் செய்தால், அணுகுவதற்கான வழிமுறைகளைப் புரிந்து, திருத்திக் கொள்வார்கள்.

யார் கருத்தை தெரிவித்தாலும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். கருத்து தெரிவிக்கையில், மற்றவருடன் ஒப்பிட்டுச் சொல்லும் போது, ஒருவரின் உழைப்பைத் தாழ்த்தி மற்றவரை உயர வைக்கிறோம். தாழ்த்தப்பட்டவர் தன் உழைப்பைக் குறைப்பார். பொறாமை வளர இடமாகிறது, கருத்தை உதறி விடுவார்.

அதே போல், ஓர் சிலரை மட்டும் சிலாகித்து, புகழ்வதால் பாரபட்சம் காட்டுவதாகும். இப்படிச் செய்தால், கண்டிப்பாக மனக்கவலை பலவீனமாக்கும். இவர்களின் சுயமதிப்பீட்டை குறைப்பதால், திறன்களைக் கற்பது அவசியம்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் இப்படிச் செய்தால் பாதிப்பு செய்து பிறகுச் சரியும் செய்வதாகும். ‘குழந்தையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது’? அதனால் தான் பெரியவர்களின் பங்கு மிக முக்கியம்.

இதிலிருந்து மிக தெளிவாகத் தெரிவது, கருத்துக்களைத் தெரிவிக்கும் விதங்களில்  சமூக-உணர்வுகளின் கற்றல் அடங்கி உள்ளது. அதைக் கவனமாக செய்வது நம் அணுகுமுறையில் இருக்கின்றன. செய்யாமல் போனால், காலம், பணம், குணம் மூன்றும் வீணாகும்.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ உருவாக்க வழிமுறைகள்

ஒன்று கூடி படித்தலில், கற்றலை மேம்படுத்த முடியும். ஆராய்ந்து, சந்தேகத்தைப் போக்கி, ஒருவரை ஒருவர் ஊக்க வைப்பது செயலில் செய்ய முடியும். இப்படி கூட்டுப் படிப்பில் மற்றவரிடம் கேள்வி கேட்கும் விதம், பதிலளிப்பது, புரிதலை உருவாக்குவது எல்லாம் திறனை வளர்க்கச் சாதகமாகும். கற்பவர்கள் கற்றுக்கொள்ள, சொல்லித் தரும் வாய்ப்புகள் அமையும். கொடுத்த வேலையை முடிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு, பாசம், வெளிப்படையாகும்! இங்கிருந்து நம்பிக்கை மேலோங்க சுயமதிப்பீடு அதிகரிக்கும். இவை ஒவ்வொன்றும் சமூக-உணர்வுகளின் கற்றல்.

இதில் மிக உன்னதமானது, கற்றல் என்பது அவரவர்களுக்குத் தனிப்பட்டது என்று இருந்தாலும் இங்கு ஒரு கூட்டு முயற்சியாக அமைகிறது. இந்தக் கூட்டணியில் ஆசிரியரின் பங்களிப்பும் இருக்கும். மாணவர்களுடன் ஆசிரியரும் கேள்விகளை சேர்ந்து அலசி ஆராய்ந்து, பதில் தேடுவார்கள். வளரும் பிள்ளைகள் ஆசிரியரின் அணுகுமுறையில் பல வற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றன.

ஊக்கமளித்தல், கற்றலை மேற்க் கொள்ளச் செய்கிறது. கூட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருப்பதால் பல கண்ணோட்டங்களில் ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சமூக உணர்வுகள் கற்பதின் நுணுக்கங்களில் இவையெல்லாம் அடங்கி உள்ளது.

சமூக உணர்வுகள் கற்பிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று விதங்கள் உள்ளன. இவை கூட்டுமுயற்சிப் பயிற்சி (Collaborative Learning), கூட்டுக் கற்கை (Cooperative learning), இருபுறமும் பரிமாறுதல் (Reciprocal Learning). மூன்றிலுமே, ஆராய்ந்து, கூட்டில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கு முறைகள் பல இருக்கின்றன. மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால், ஒவ்வொருவரின் சமூக திறன்கள், உணர்வுகள், அணுகுமுறை எல்லாம் உபயோகிக்கத் தேவையாகும். பல ஆராய்ச்சிகளில் இந்த மூன்றினால் சமூக உணர்வுகள் கற்பதின் எல்லா நுணுக்கங்களிலும் தானாக பயின்று, மேம்படுத்த முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லப்படுகிறது.

முழு நலனும் திறன்களும்

‘வரும் முன் காக்க’ என்பதைக் கேட்டதுண்டு. நம் உடல், மனம், சமூக நலம், முழு நலனை மேம்படுவதிற்கான வாய்ப்புகள் சமூக-உணர்வுகள் கற்பதில் அடங்கியுள்ளது. லாபகரமாகவும் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாமலும் செய்து விடும்! திறன்களை, பாடதிடங்களையும், நடத்துவதையும், கருத்து தெரிவிப்பதையும் மேற் சொன்ன முறையில் அமைத்தால் நேரும்.

கற்றுக் கொள்ளும் போதே, தன் கட்டுப்பாட்டில் தான் நலன் மேம்படுதல் இருக்கிறது என்பது புரிய வரும். வளர வளர, நலன்களை ஒரு முழு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பார்கள். நம் உடல் மன நலன் குறைந்தால் மற்ற திறன்கள் நமக்கு என்ன தெரிவிக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும் பக்குவம் வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகிறது. அதைப் புரிந்து கொள்ளவே சமூக-உணர்வு திறன்களை மையமாக்க வேண்டும்.

(சமூக-உணர்வு திறன்களை கற்றாவிட்டால்) செலவினங்கள்

சமூக உணர்வுகள் கற்பதை பாடத்திலும், பாடம் நடத்துவதிலும், பள்ளியின் சூழலிலும் செய்து வந்தால், திறன்கள் இன்னும் தரம் பெற வாய்ப்பாகும். இதற்கென்று தனி ஒருவரை கற்றுத் தர நியமிக்கவோ அல்ல வகுப்புகளுக்குப் பின்பு நேரம் ஒதுக்கி வைக்கவோ தேவைப் படாது. நேரத்தையும், பணச் செலவுகளையும் தவிர்க்கலாம். நேரம் தேவைப்படுவது, இந்தத் திறன்களை பாடத்தை நடத்துவதிலும், பாடத்திட்டங்களிலும் நுழைக்க, ஆசிரியர் கலந்து ஆலோசித்து, திட்டங்கள் தீட்டுவதற்கே.

இப்படிச் செய்தால், முதல் சொன்ன மனநோய் உள்ளோரின் ஆய்வின் எண்ணைக் குறைக்கலாம். இல்லையேல் சிகிச்சைக்கு செலவு கூடுவது தான் மிஞ்சும்.

ஒரு வேளைப் பாடத்தில் புகட்டவில்லை எனில், இதற்கென்று ப்ரத்யேகமாக தனிப் பாடம் நடத்தி வரவேண்டியது தான்.

சமூக உணர்வுகள் கற்பதை, எப்படிச் செய்தாலும் பாடத்தின் மேல் ஆர்வம் கூடுவதாக, குணாதிசயங்கள் மேம்படுவதாக, பல மன நலப் பிரச்சினையை சீர் செய்வதாக ஆராய்ச்சிகள் தெக்குத் தெளிவாக காட்டுகின்றன.

சமூகநீதியும் சமூக-உணர்வுகள் கற்பதும்

சமூக-உணர்வுகள் கற்பதின் மூலம் எல்லோருக்கும் சம மேடை உண்டாகிறது. சமூக உணர்வுகள் கற்பதில் யாருக்கும் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் பிள்ளைகள் செயல் படுவார்கள். பள்ளிக்கூடம் என்றால் அதில் சமூகநீதியின் பாதை அமைய வேண்டும். சமூக-உணர்வு திறன்களை பாடத்துடன் இணங்கிப்  புகட்ட இதைச் செய்ய முடிகிறது.

வளரும் பருவத்திலிருந்தே இந்த பரந்த மனப்பான்மை பயில ஆரம்பித்தால், ஏற்றத்-தாழ்வு வித்தியாசங்களை அழிக்கும் கருவியாகும். இதனால், மற்றவர்களை ஈன கண்ணோட்த்துடன் பார்ப்பதும் இல்லாமல் போவதற்காக அறிய வாய்ப்பாகிறது.

மேல் சொன்ன கூட்டுப் படிப்பினாலும் இந்த நீதிமுறையை அமல் படுத்த முடியும். பள்ளிக்குள் நிகழும் இந்த நிலை வெளியிலும் பரவ, சமூகத்துக்கும் உதவ, அதன் விளைவு சம உரிமை, சம வாய்ப்பு!

இதில் முக்கிய பங்கு பள்ளியின் செயல்படும் ஒவ்வொருக்கும் உண்டு. அவரவர், தன் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து தங்களின் சமூக-உணர்வைப் பக்குவத்துடன் வெளிப்படுத்தினால், வளரும் பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டாக இருப்பார்கள். இதன் விளைவாக, பள்ளியின் ஆரம்பத்திலிருந்து மாற்றம் ஆரம்பிக்கும்.

எப்படியெல்லாம் செய்யலாம்

பயிற்சி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பில் சமூக-உணர்வு திறன்களை புகட்டி, பயிற்சி அளிக்கலாம்.

முதலில் பல மாதங்கள் பயிற்சி தேவையாகும்.

போகப் போக அவ்வப்போது புத்தறிவு பயிற்சி அமைத்துக் கற்றலை, செய்முறையை, மேம்படுத்தலாம்.

வெற்றி காணும் முயற்சிகளை வரிசைப் படுத்தி, பகிர்ந்து கொள்வதென்று செய்வது.

பெற்றோருக்கும் இதைப் புரிய வைக்கப் பிரத்தியேகமான பயிற்சி கொடுத்தல்

அவர்களை ஆசிரியர்களுடனும் இணைத்துப் பயிற்சி தர, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பமாகும்.

பள்ளிகளில் கொளன்ஸிலராக இருக்கும் ஸோஷியல் வர்கர், ஸைக்காலிஜிஸ்ட், இதைப் புகட்டும் விதத்தில் பணியாற்ற வேண்டும்.

பெற்றோர், பள்ளியின் பக்கத்தில் உள்ளவர்களையும் சேர்த்துக் கொள்வது.

அரசாங்கம்

மனநலத்தில் ‘வரும் முன் காப்போம்’ என்ற பிரிவில் முழு நலன் என்ற பட்டியலில் ‘சமூக உணர்வுகள் கற்பது’ திட்டத்தை அமல்படுத்துவது.

சமூக உணர்வுகள் உபாதைகளால் அவதிப் படுவோரின் எண்ணிக்கை எடுத்து அதன் விளைவுகளை விவரித்துப் பதிவு செய்தல்.

பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகத்திலும் சமூக- உணர்வுகள் கற்றல் அமலாகும் வரை, இதைப் புரிந்து சிகிச்சை அளிக்க இந்தப் பயிற்சி பெற்றவர்களை ஆலோசகராக அமைப்பது நலனை கூடச் செய்யும்.

சமூக-உணர்வுகள் கற்றல் வரவு செலவை, அதனால் வரக்கூடிய நன்மை, அதிலிருந்து செலவு குறைவின் கணக்கீடு அவசியமாகும்.

கல்விதிட்டத்தில்

கல்வி திட்டத்தில் பிள்ளைகள் நர்சரி வகுப்பிலிருந்து பாட திட்டங்களைச் சமுதாய உணர்வுகள் சேர்ந்து கற்பதாக அமைப்பது.

கூட்டாகப் படிப்பதை, ஆசிரியர், மனநலம் படிக்கும் மாணவர்களுக்குப் பாட திட்டமாக அமைப்பது.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ குழு

ஆசிரியர், பெற்றோர், மற்ற ஊழியர்கள் மற்றும் மனநல நிபுணர் சேர்ந்த ஒரு குழு அமைக்க வேண்டும்.

பள்ளியின் நிலவரம், கூடுதலாகச் செய்ய வேண்டியதைக் கவனித்து செயலில் கொண்டு வருவது.

வருடா வருடம் சமூக உணர்வுகள் கற்றலின் விளைவை ஆய்வு செய்வது.

படிப்பில் முன்னேற்றம், பள்ளிக்கு வருவது, ஒற்றுமை, உதுவும் மனப்பான்மை, நடத்தை மற்றும் உணர்வுகளின் தேர்ச்சி.

பள்ளிகளில் பயிலுவதை வீட்டிலும் சமுதாயத்திலும் பரவப் பயிற்சி முகாம்களை அமைத்துச் செய்து வருவது.

பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில், அக்கம் பக்கத்தில் மாறும் சமூகநீதி நிலமையைச் சீர் செய்ய வழி செய்வது.

ஆசிரியர்கள் தமக்குள் ‘கற்றல் குழு’ அமைத்துக் கொள்ளலாம். ஒருவருக்கு ஒருவர் தாங்கள் செய்வதைப் பகிர்வதற்கு இது ஒரு இணைக்கும் மேடையாகும்.

வகுப்பில்

சகமாணவர்கள் ஒருங்கிணைந்து செயல் படத் திட்டங்களை தீட்ட வேண்டும்.

பள்ளியில் சாப்பிடும்போது, விளையாடும்போது அங்கெல்லாம் திறன்கள் வெளியாவதைக் கவனித்து, எதில் குறை தெரிகிறதோ அவற்றைப் பாடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

‘மாணவரின் ஒத்துழைப்புக் குழு’ என்று குழுக்களை அமைப்பது, முழு நலனை மேம்படுத்தச் செய்வதற்கு.

எதிர்காலத்தில்

முழு வளர்ச்சி தேவையானது. சமூக உணர்வுகள் கற்பதால் இது சாத்தியமாகும். நம் இந்தியர்களுக்கு இது புதியதே அல்ல. நம் குருகுலங்களில் இப்படித் தான் அமைந்திருந்தது. அன்றாட பாட திட்டங்களுடன் தினசரி தேவைகளைச் செய்து கொள்வது, மற்றவருடன் சேர்ந்து பயிலுவது, செய்து, மற்றவரிடமிருந்து கற்பது எல்லாம் நிலவியது. அங்கிருந்து வெகு தூரம் சென்று விட்டதால் சின்ன சின்ன அடிகளை வைத்துத் திரும்ப இந்த முறையை ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது.

‘சமூக-உணர்வுகள் கற்றல்’ பயின்றால், உறவுகள் மேம்பட்டு, ஒத்துழைப்பு, ஒற்றுமை அதிகரிக்கும்.  பள்ளிகளில் இதைப் பயில எல்லோரின் நலன்கள் கூட, ‘வரும் முன் காப்போம்’ அமலுக்குக் கொண்டு வர முடிகிறது. இதனால் நலன் மேம்பட, செலவுகள் குறையும், சமூகநீதி நிலை உயரும். செயல்படுத்தத் தயக்கமே தேவையில்லை! விடிவெள்ளி தோன்ற சமூக-உணர்வுகள் கற்றல் ஒரு வழியாகும் !’

மாலதி சுவாமிநாதன் / malathiswami@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com