என்றென்றும் ஜொலிக்கும் இளமையுடன் வலம் வர வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்!

மனித வாழ்க்கையில் பால்யம் அனைவருக்கும் பிடிக்கும். பதின் பருவம் முதிராத பருவம் எனினும் முத்தானது.
என்றென்றும் ஜொலிக்கும் இளமையுடன் வலம் வர வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்!

மனித வாழ்க்கையில் பால்யம் அனைவருக்கும் பிடிக்கும். பதின் பருவம் முதிராத பருவம் எனினும் முத்தானது. இனிக்கும் இளமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நாற்பதுக்கு பின்? அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்படத் தொடங்கும். இன்னும் சில காலத்தில் முதுமையடைவோம் என்ற அச்சத்தில் அதை முன்னதாகவே வரவழைத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் பலர். 

என்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது அல்லது கூடுமானவரை எனது முதுமையைத் தள்ளிப் போடுவேன் என்று நினைக்கத் தொடங்கினால் மன அழுத்தம்தான் ஏற்படும். அதனை வரவேற்கும் பக்குவம் கைகூடினால் தானே தாமதப்படுத்திக் கொள்ளும் என்பதுதான் இயற்கையின் விதி. இளமையை நீட்டிக்க இதோ சில வழிகள் :

இளமையை இழக்கிறோமோ என்று மனத்தில் சந்தேகத்தை விதைத்துக் கொள்ளாதீர்கள். இரவு பகல் போலவே வாழ்வில் இளமை முதுமை இரண்டும் முக்கியம். பக்குவப்பட வாழ்க்கை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. யாராவது உங்களிடம், 'என்ன வெயிட் போட்டு விட்டீர்கள், முடி நரைத்துவிட்டதே, இப்படி கறுத்துவீட்டீகளே? ஏன் சோர்வாக இருக்கீறீர்கள் உடல் நலமில்லையா? என்ன வெயிட் போட்டுவிட்டீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள். அதை நீங்கள் ஒருபோது தலையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. அவர்கள் போகிற போக்கில் கேட்டு வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், கேட்கப்பட்டவர்களுக்கு அது எத்தகைய மன அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏதோ அக்கறையாக இருக்கிறோம் என்பதை காண்பித்துக் கொள்ளவும் கூட இருக்கலாம்.

உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களே அதற்கொரு தீர்வையும் சொல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அதை அதில் உண்மை எது பொய் எது என பகுந்தாய்ந்து உங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்வதுதான். வயது ஏற ஏற நம்முடைய நிறம், உருவம் எல்லாமே மாற்றத்துக்கு உள்ளாகும். அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் இருப்பதுதான் அழகு. எல்லா காலத்திலும் யாரும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியாது. எனவே இதுபோன்ற கேள்விகளில் மன சஞ்சலம் அடையாமல் உங்கள் போக்கில் இருப்பதுதான் நல்லது.

ஜீரோ சைஸ் எல்லாம் தேவையில்லை ஆரோக்கியமே முக்கியம்

அழகாக இருப்பதென்றால் ஒல்லியாக இருப்பது என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். பருமனாக இருந்தால் வயது கூடுதலாகத் த்ரெஇயும், அழகு குறையும் எனக் குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது முக்கியம்தான். ஆனால், அது நீங்கள் ஜீரோ சைஸில் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காலையில் எழுந்து கொள்ளும் போது எப்படி உணர்கிறீர்கள். அந்த நாளை எதிர்கொள்ள உடலும் மனமும் தெம்புடன் உள்ளதா, உற்சாகத்துடன் இருக்க முடிகிறதா என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை உடல் சோர்வாக இருக்கும் போது அதை சரிப்படுத்த முயலுங்கள். என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் தீர்வை தேடுங்கள். முக்கியமாக சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் வேலை செய்து, மிகச் சரியான நேரத்தில் தூங்கச் சென்றால் இளமை ஒரு பூனைக்குட்டியைப் போல உங்கள் வசம் எப்போதும் இருக்கும்.

வயது என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது

சிலர் இளம் வயதிலேயே மிகவும் முதிர்ச்சியடைந்தவராக காணப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களும் அப்படித்தான் இருக்கும். நாற்பது வயதுக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அலுப்பும் சலிப்பும் அவர்களிடம் காணப்படும். இன்னும் சிலர் நாற்பது வயதிலிருந்தும் இருபது வயதினரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பார்கள். உயிர்த் துடிப்பும் உற்சாகமுமாக அவர்களின் வாழ்க்கை இன்பத்தின் ஒட்டுமொத்த ரேகைகளை கொண்டிருக்கும். வயது என்பதெல்லாம் சும்மா மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குத்தான் என்று நினைப்பார்கள் அவர்கள். மற்றபடி அவர்கள் தங்கள் மனத்திலோ புத்தியிலோ அதை ஏற்றிக் கொள்வதில்லை. 

ஒரு போதும் எதற்காகவும் கவலை கொள்ளாதீர்கள்

காலை ஒரு தொற்றுநோய். அது உங்களைத் தொற்றிவிட்டால் உங்கள் இருப்பை நிம்மதியிழக்கச் செய்துவிடும். நீங்கள் கவலைப்பட பட காலம் உங்களை மிக வேகமாக முதுமையடைய ஆயத்தப்படுத்திவிடும். வயது பற்றியே நினைக்காமல் என்ன வந்தாலும அதை துணிவாக எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாழ்ந்தீர்கள் எனில் அதுவே உற்சாக டானிக்காக செயல்பட்டு உங்கள் இளமைக்கு கியாரண்டி கொடுக்கும். 

ஹாபியில் ஈடுபடுங்கள் ஜாலியாக வாழுங்கள்

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றத் தெரிந்து கொண்டால் படு பிஸியாக உள்ள உங்களுக்கு வயதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க நேரம் எப்படி இருக்கும்? பதின் வயதில் செய்ய முடியாமல் போனவற்றை பட்டியல் இடுங்கள். வயலின் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேனே, இப்போது நிறைய நேரம் இருக்கிறது எனவே துணிந்து வகுப்புகளில் சேருங்கள். சில வருடங்களில் உங்கள் மனத்தை குளிர்விக்க நீங்களே வயலின் வாசிக்க முடியும். ஓவியம், மொழி, நடனம் என எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதை கற்றுக் கொள்ளுங்கள். வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனும் உண்மை உங்களுக்குப் புரியும்.

நீங்கள் பழகும் சுற்றம் எப்படியிருக்க வேண்டும்

எப்போதும் இளைஞர்கள் சூழ இருங்கள். அவர்களின் பேச்சும் உற்சாகமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்கள் உங்களை சீனியர் என்று உணர வைக்க முடியாத அளவிற்கு நீங்கள் அப்டேட்டாக இருந்தால் போதும், உங்களை விட மூத்தோர்களிடம் நட்பாக இருப்பது நல்லது. அவர்களுடன் பழகும் போது நீங்கள் தான் மிக இளமையானவர். உங்கள் வயதுள்ளோர் புலம்பல்காரர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து தூர விலகியே இருங்கள்.

உங்களை விட இளையவரோ, மூத்தவரோ அல்லது சம வயதினரோ சதா கவலையைச் சுமந்தபடியே இருப்பவர்கள், துயரத்துடன் காணப்படுவர்கள், எதிர்மறை சிந்தனையாளர்கள் ஆகியோரை விட்டு பத்து அடி தள்ளியே இருங்கள். அவர்கள் ஒரு குட்டைப் போல, தானும் சேறாகி தன்னுடன் பழகுபவர்களையும் சகதியாக்கிவிடுவார்கள். உங்கள் உற்சாகத்தைத் தக்க வைக்க வேண்டுமெனில் உங்கள் எண்ண அலைவரிசைக்கு ஒத்திசைவாக இருப்போரிடம் நட்பு பாராட்டுங்கள். 

இயற்கையான விஷயங்களுக்கு வரவேற்பு கொடுங்கள்

நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்னைகள் ஏற்படும், சிலருக்கு முடி நரைக்கத் தொடங்கும், உடல் முன்பு போல் இருப்பதில்லை. அடிக்கடி ஏதேனும் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். இதற்கெல்லாம் சோர்ந்து போய் இனி அவ்வளவுதான் என வயோதிகர் லிஸ்டில் நீங்களாக போய் சேர்ந்து கொள்ளாதீர்கள். இவையெல்லாம் இயல்பாக நடப்பதுதான் என்ற விழிப்புணர்வுடன் மலர்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாமே ஈஸியாக உங்களை கடந்து போகும். வாழ்க்கையை ரசிப்பதுபோல் உங்கள் உடலின் மாற்றங்களை ரசிக்கப் பழகுங்கள். வாக்கிங், உடற்பயிற்சி, யோகா, என சிலவற்றை தினமும் செய்து பழங்குங்கள். உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமும் துணிவும் வாழ்க்கை கொடுத்த பக்குவமும் உங்களை ஒரு முழுமையானவராக மாற்றியிருக்கும். அந்த பக்குவத்துடன் நடந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இனிக்கும்.

மனசை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்

குடும்பத்தில் பிரச்னையா அல்லது உடல் பிரச்னையா எதையும் மனத்துக்குள் பூட்டி வைத்து மருகிக் கொண்டிருக்காதீர்கள். அது மன அழுத்தம் ஏற்படுத்தி உங்களை சோர்வுக்குள்ளாக்கிவிடும். உங்கள் தோற்றத்திலும் சிறுகச் சிறுக சோகம் ஒட்டிக் கொள்ளும். உங்கள் செல்களும் உற்சாகம் இழந்து ஏனோ தானோவென்று இயங்கும். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் மனம் திறந்து பேசுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாய்விட்டு அட்டகாசமாகச் சிரியுங்கள்.

சிரித்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும், இளமையாக இருப்பவர்கள் பலரைப் பார்த்தால் தெரியும் அவர்கள் விட் அடித்து சிரித்துக் கொண்டும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிரும் இருப்பார்கள். அவர்களைச் சுற்றி சிரிப்பு ஒரு அலையாக ஒரு அரணாக அவர்கள் இளமையை காப்பாற்றிக் கொண்டிருக்கும். எனவே ஸ்மைல் ப்ளீஸ்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com