கொஞ்சம் மானர்ஸ் கத்துக்கங்க மக்களே! வாழ்க்கை தேன் போல் இனிக்க அது மிகவும் முக்கியம்!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன்னளவில் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறது.
கொஞ்சம் மானர்ஸ் கத்துக்கங்க மக்களே! வாழ்க்கை தேன் போல் இனிக்க அது மிகவும் முக்கியம்!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன்னளவில் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறது. தன்னை சுற்றி இன்னொரு உலகம் இயங்குகிறது என்றே சிலருக்கு மறந்துவிடும். அந்த அளவுக்கு சுயமோகம் தலைக்கேறிய காலகட்டமாக ஆகிவிட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் இருப்பு என்பது அனர்த்தம். அல்லது தங்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைப்பவர்கள் அடுத்தவரை சமயத்துக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொண்டு வேண்டாத சமயத்தில் விட்டெறிந்துவிடுவார்கள். பொய்மையும் கயமையும் ஏமாற்றமும் சூழ்ந்த இந்த மனித வாழ்க்கையில் மனிதர்கள் மேலும் மேலும் தற்குறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். சில மனிதர்களும் சில சம்பவங்களும் அதில் கிடைக்கும் அனுபவங்களையும் பாடமாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து நம் வாழ்க்கையில் தெளிவை நோக்கிப் பயணப்படுவதே வாழ்வதை எளிமைப்படுத்தும்.

பொது இடங்களிலில் சத்தமாக ஃபோனில் சிலர் பேசுவார்கள். அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரங்கால் தொலைபேசியில் பேசுவதைப் போல அவர்களின் அலறல் போன்ற குரல் பலசமயம் அடுத்தவர்களை அச்சுறுத்தும். வீட்டு விஷயம் முதல் நாட்டு விஷயம் வரை அவர்கள் தங்கள் சொந்தக் கதை சோகக் கதையை உரக்க பேசி முடிப்பதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடும். சங்கீதம் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை, இங்கிதம் தெரிந்திருக்க வேண்டும். சில இளம் பெண்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஃபோனில் பேசுகிறார்களா அல்லது உதடுகளை சும்மாவேனும் அசைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியாது. சத்தமே இல்லாமல் செல்ஃபோனில் பேசுவது எப்படி எனும் கலை அறிந்தவர்கள் அவர்கள். அந்தளவுக்கு நாகரிகமாகப் பேசாவிட்டாலும் அடுத்தவர் காது ஜவ்வைக் கிழிக்காமல் சற்று மென்மையாகப் பேசலாமே? அல்லது வீடு வரும் வரை அந்த உரையாடல் காத்திருக்கலாம் என்றால் பொறுமையாக சாவகாசமாக ஏன் சத்தமாகக் கூட பேசி மகிழுங்கள்.

வங்கி முதல் வாக்கிங் போவது வரை சிலருக்கு அடுத்தவரை குறுக்கிடுவதில் அலாதி சுகம். எங்கேர்ந்து சார் வரீங்க என்று ஆரம்பிப்பார்கள். நம் கையில் செய்தித்தாள் இருந்தால் ஒரு நிமிஷம் தரீங்களா என்று பதிலை எதிர்ப்பார்க்காமல் பறித்துக் கொள்வார்கள். ரயிலில் போகும்போது நம்மிடம் புத்தகம் இருந்தால் அபேஸ்தான். தாகத்துக்குத் தானே கேட்கிறார்கள் என்று நம் கையில் உள்ள பாட்டிலை கொடுத்தால் ஒரு சொட்டு கூட நமக்கு வைக்காமல் முழுவதையும் குடித்து வைப்பார்கள். இன்னும் சிலர் என் ஃபோனில் சார்ஜ் போச்சு அர்ஜெண்டுக்கு ஒரு கால் பேசிக்கறேன். மிஸ்டு கால் கூட தர மாட்டார்கள். நேரடியாகப் பேசத் தொடங்கு நம் பிபி அதிகளவு ஏறியபின் தான் மனமிறங்கித் திருப்பித் தருவார்கள். மறக்காமல் அவர்கள் பேசிய நம்பரை அழித்துவிட்டுத்தான் தருவார்கள். இப்படி வெளியே சொல்ல முடிகிற, சொல்ல முடியாத எரிச்சல்களை எல்லாம் தினந்தோறும் கூசாமல் அடுத்தவர்களுக்குத் தந்துவிட்டு தன்போக்கில் அவர்கள் ஜாலியாக போய்விடுவார்கள். நம்மைப் பற்றி நமக்கே தெரியாமல் புறம் பேசுவார்கள். நமக்குத் தான் மண்டைக்குள் நமநமவென்று வெகு நேரம் ஏதோ செய்யும். இதுபோன்ற ஆசாமிகளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு பர்லாங்கு தூரம் எட்டியிருப்பதே மன அமைதிக்கு ஒரு எளிய வழி.

சிலர் டிப்ஸ் தருவதையே வாழ்க்கை தர்மமாக கடைபிடித்து வருவார்கள். நம்மைக் கண்டுவிட்டால் போதும், அவர்களின் அன்றைய பொழுதுபோக்கு சாட்சாத் நாமேதான், என்ன சார் இவ்வளவு டல்லா இருக்கீங்க? இப்படி கருத்துப் போயிட்டீங்க? உடம்பு இவ்வளவு இளைச்சிருக்கே உங்களுக்கு சுகர் வந்திருக்கும்னு நினைக்கறேன்...உடனே போய் செக் பண்ணுங்க என்பார்கள். அல்லது அய்யோ ஒரேடியா வெயிட் போட்டுட்டீங்க உங்களுக்கு ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது...இல்லையில்லை உங்களுக்கு கேன்சர் அபாயம் இருக்குன்னு வேணும்னா இந்தப் புத்தகத்துல இருக்கற அறிகுறிகளைப் படிச்சுப் பாருங்க என்று சொல்லி வேண்டாத அறிவுரைகளை எல்லாம் நம் தலையில் கட்டி, கிட்டத்தட்ட அரை நோயாளிகளாக நம்மை மாற்றிய பின் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். தாங்கள் படித்ததையோ பின்பற்றியதையோ அடுத்தவர் மீது திணிக்கும் நபர்களை அடுத்த முறை கண்டால் அவர்களை நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். ஏன் இப்படி ஆயிட்டீங்க முகத்துல பரு மாதிரி ஏதோ இருக்கே, என்று நீங்கள் ஆரம்பித்தால் போதும் ஆசாமி எஸ்கேப் ஆகிவிடும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தின் ஒட்டுமொத்த துயரத்தையும் தன் தலைமீது சுமந்து வலம் வருவார்கள். அவர்கள் பிரச்னையை நம்மிடம் சொல்லி அதற்கு தீர்வு கேட்பார்கள். நாமும் பாவம் என்று பச்சாதப்பட்டு ஏதாவது சொன்னால் உங்களுக்கு என் வலி தெரியாது அப்படி எல்லாம் செய்தால் சரிவராது என்று மேலும் தங்கள் பிரச்னையை கூறுவார்கள். நாமும் இப்படி பண்ணுங்க இது தான் தீர்வு என்றெல்லாம் சொல்லியும் அவர்களை அத்தனை எளிதாக சமாதானம் செய்ய முடியாது. உண்மையில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். உங்களையும் ஏதோ ஒருவகையில் துயரெனும் பள்ளத்தாக்கில் தள்ளிவிட நினைப்பவர்கள். நான் இப்படி அழுதுட்டு இருக்கேன், அவன் மட்டும் எப்படி சந்தோஷமாயிருக்கான் என்று சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் நம்மைப் பார்த்து பொருமிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உஷாராக இருந்து அவர்களிடமிருந்து விலகி இருப்பதே மேல். உண்மையிலேயே உங்கள் உதவியோ அறிவுரையோ தேவைப்படுபவர்கள் நீங்கள் சொல்வதை ஒருகட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். எனவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கப் பார்ப்பது நம்முடைய அமைதியான மனநிலையைத்தான். 

நம்மில் சிலர் திடீரென்று ஒரு பீடத்தில் நின்று கொண்டு அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று பெரும்பான்மையான நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்போம். நமக்கு சொந்தமாக ஒரு குடும்பம் இருக்கிறது பிள்ளைகள் உள்ளார்கள் என்றெல்லாம் மறந்து அடுத்தவர் நலனில் மகிழ்ச்சி கொள்பவர்கள் நாம். ஆனால் ஒரு உண்மை நமக்குத் தெரியாது. நம்மிடம் ஆதாயம் கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அது கிடைத்ததும் நம்மிடம் ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் ஓடிப் போவார்கள். கடைசியில் குடும்பமும் விலகி, நம்மை அண்டிப் பிழைத்தவர்கள் ஒருவரும் இல்லாமல் நாம் மட்டுமே தனிமையில் நிற்போம். வேறென்ன செய்வது? உதவ மறுப்பது பாவம் இல்லையா என்று தோன்றுகிறதா? அவர்கள் துன்பத்திலிருந்து எப்படி விடுதலை அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா? நம்மை நம்பி வந்துவிட்டார்கள் நாமே கைவிட்டால் எப்படி என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?  இந்த உலகத்தை திருத்த அல்லது அறிவுரை கூட நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருமுறை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குக் கிடைக்கும் பதிலை வைத்து நீங்கள் மேற்படி விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒருபோதும் பயத்தாலும், சந்தேகத்தாலும், கெட்ட எண்ணங்களாலும் சூழப்பட்ட ஒருவரை உங்களால் மாற்ற இயலாது. அதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம்.

எதையாவது ஆழ்ந்து சிந்திக்கலாம் என்றால் அப்போதுதான் ஒரு மெசேஜ் உள்ளேன் ஐயா என்று செல்ஃபோன் வடிவத்தில் தன் இருப்பை மீட்டுருவாக்கம் செய்யும். கண நேரம் கூட அந்த ஃபோனை பிரிந்திருக்க முடியாமல் கையில் சங்கு சக்கரம் தரித்த பெருமாள்களைப் போல ஒட்டுமொத்த சமூகமே செல்லடிமைகளாக மெள்ள மாறிக் கொண்டிருக்கிறது. பாத்ரூம் முதல் பாடை வரை செல்ஃபோனில் ஆதிக்கம் சற்று அதிகம்தான். எனக்கு தெரிந்தவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவர் மிகவும் வருத்தப்பட்டது வாணி ராணி முடிவதற்குள் இறந்து போகிறோமே என்றுதான். அந்தளவுக்கு தொலைக்காட்சியும் அலைபேசியும் லேப்டாப்பும் வாழ்வின் அந்திம காலம் வரை நீக்கமற நிறைந்துவிட்டது. கிருஷ்ணா ராமா கோவிந்தா என்ற காலம் எல்லாம் போய், பெரிசுகளுக்கும் சீரியல், வாட்ஸப், பேஸ்புக் காலமாகிவிட்டது. இந்த கருவிகள் எல்லாம் தேவைதான். அத்யாவசியம் தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? எதை எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கிருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

இந்த மின்மயமான வாழ்க்கையில் சிலருக்கு சினிமா ஆறுதல், சிலருக்கு அரசியல் இன்னும் சிலருக்கு ஆன்மிகம். அவரவர் புத்திக்கும் அனுபவத்திற்கும் ஆசைக்கும் ஏற்ப தங்களுக்கு தேவையானதை ஒன்றையோ அல்லது அத்தனையும் சேர்த்து ஒரு பாதையை தேர்ந்தெடுப்பார்கள். இதில் என்ன பிரச்னை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்குத் தேவை வழிகாட்டி. வழிகாட்டி என்று ஒருவரை நினைத்துவிட்டால் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றத் தொடங்குவார்கள். அவன் தான் தலைவன். அவன் தான் நடிகன். அவர் தான் குரு என்று தங்களை ஒட்டுமொத்தமாக ஒரு தனி மனிதருக்கு சமர்ப்பணம் செய்துவிடுவார்கள்.

பேஸ்புக் முதல் பேஸ் டு பேஸ் வரை அந்த மனிதரைப் பற்றி யாரேனும் குறை சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அடிதடியில் இறங்கக் கூடத் தயங்க மாட்டார்கள். இது தேவையா என்று கேட்டால் ரசனை தவறா, அவர் போல நான் ஒருநாள் ஆவேன் என்பார்கள். ஒருவரைப் போல நீங்கள் ஆவதற்கு அல்ல நீங்கள். உங்களைப் போல இருக்கவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். ரோல்மாடல்களாக சிலரை நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதிலே விழுந்து கிடப்பதுதான் தவறு. தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பெயர் ஏன் அப்படி ஆனது? யோசித்துள்ளீர்களா? இலக்கியம் முதல் இயல்பு வாழ்க்கை வரை உங்களுக்கு முதல் ஹீரோ நீங்கள் தான். தன்னை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொள்பவர்கள் நிச்சயமாக பிறரையும் நேசிப்பார்கள். ஆனால் தலைவா என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தொலைத்துக் கொண்டால் யார் மீது தவறு? தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாத அளவுக்கு தனி மனித வழிபாட்டில் சுயம் தொலைத்தவர்களின் மயக்கம் தீருவதற்குள் அவர்கள் ஆயுள் முடிந்திருக்கும். இத்தகைய காலவிரையச் செயல்களில் ஈடுபடாமல் தன்னுள் இருக்கும் ஒளியை கண்டு அடைய வேண்டியது தான் இந்த வாழ்க்கையின் இந்த இருப்பின் அர்த்தம். அவரவர் வேலை அவரவர் வாழ்க்கை அவரவர் பாடு என்று பறந்து கொண்டிருப்பார்கள். நம்முடைய நிதானமும் பொறுமையையும் அமைதியும் மட்டுமே நமக்கான விளக்கு. புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை ஒளிரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com