விதவிதமாய் தவறு செய்கிறீர்களா? கவலை வேண்டாம் திருத்திக் கொள்ளலாம் வாருங்கள்!

தவறு என்றாலே ஏனோ துச்சமாக, இழிவாகப் பார்க்கப்படுகிறது. ஒரு செயலைச் நாம் செய்யும்போது,
விதவிதமாய் தவறு செய்கிறீர்களா? கவலை வேண்டாம் திருத்திக் கொள்ளலாம் வாருங்கள்!

தவறு என்றாலே ஏனோ துச்சமாக, இழிவாகப் பார்க்கப்படுகிறது. ஒரு செயலைச் நாம் செய்யும்போது, சில சமயம் தவறுகள் நேரலாம். தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்ததும், நம்மை வெட்கம் சூழ்ந்து விடுகிறது. மற்றவர்கள் நாம் செய்த தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது குற்றவுணர்வும் குத்திக் காட்டும் போது கோபமும் ஏற்படுவது சகஜம்.

‘என்ன இப்படி?’, ‘பார்த்துச் செய்யக்கூடாதா?’, ‘எப்பவுமே இப்படியா?’ என்று அவர்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க, ஒரு அமைதியற்ற நிலை நமக்குள் தோன்றும். இப்படி நிகழ்வதால், அந்தத் தவறை சீர் தூக்கிப் பார்க்க நம் மனம் ஒப்பாது. நேர்ந்துவிட்டத் தவறை ஆராய்ந்து பார்க்கத் தவிர்ப்பதனால், மீண்டும் அதே போன்ற தவறுகளைச் செய்யலாம்,

முயற்சிகளின் இடையில் தவறுகள் ஏற்படுவது சகஜம் என்று அதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் அச்சமின்றி அணுகுவதால், செய்ததை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதால், அடுத்த நிலையை அடைய முடிகிறது. இவர்கள் தவறை பற்றி யோசித்து, ‘ஏன் இது நிகழ்ந்தது?’, ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று எண்ணுவதால் திருத்திக் கொண்டு முன்னேறுகிறார்கள். நேர்ந்த தவறுகளை தங்களுக்கு வந்த வாய்ப்பாகக் கருதி, செயல்படுகிறார்கள்.

தவறுகளை மதிப்பீடு இல்லாமல், துச்சமாகப் பார்ப்பதற்கு பதிலாக, அவை, ஏன் தோன்றுகிறது என்பதை அறிந்து கொண்டால் அது நம்மை மேம்படுத்த உதவும். தவறுகளின் வெவ்வேறு வகைகள் என்ன, அவற்றின் மூல காரணிகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் அவைகளை கண்டு கொண்டு சரி செய்ய உதவும். எட்வர்ட் ஃப்ரைசேன்யோ என்றவர் தவறுகளை, ஸ்ட்ரெச் (stretch) தவறு, ஆஹா மோமென்ட் (Aha moment), ஸ்லாப்பி (sloppy) தவறு, ஹை ஸ்டேக்ஸ் (high stakes) தவறு என்று பகுத்திருக்கிறார். இவற்றைப் பற்றின விவரங்களை மேற்கொண்டு பார்ப்போம். பிறகு, தவறுகளைப் பார்த்து அஞ்ச மாட்டோம், நம் வெற்றியை நிர்ணயிக்கும் யுக்தியாக உபயோகிப்போம்!

கூடுதலாக எட்டிச் செய்வது?

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. இதிலிருந்து, நம்முடைய தனித்துத்துவம் வெளிப்படையாகிறது. இவையே நம் அடையாளமாகும், வெற்றிகளைக் கொடுக்கும். அதற்காகவே இந்தத் திறன்களை மேம்படுத்தும் பலவிதமான முயற்சிகளை செய்வோம். ஈடுபாடு அதிகமிருந்தால், மேலும் மேலும் சவாலாக இருப்பதைச் செய்ய முயற்சிப்போம். சில சமயங்களில், தவறுகள் வரலாம். நமக்கு முடிந்த வரை, மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்து பார்ப்போம்.

முயற்சிக்கும் போது, ‘இப்படிச் செய்யவா?’, ‘அப்படியா?’ என்று செய்ய, சிலவற்றில் தவறுகள் ஏற்படும். அதற்காக, தவறுகள் வந்துவிடுமோ என்று அஞ்சினால், முயற்சிக்கவே மாட்டோம். ‘செய்து பார்ப்போமே’ என்று செய்தால் தான் நாம் செய்து கொண்டு இருப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். அப்பொழுது நிகழும் தவறுகள், இப்படி நம் திறன்களை சற்று இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதே ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்பது.

இது எப்படி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். நாம் ஒன்று செய்வதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகையில், தவறு நிகழ்ந்தால், வேறு உத்திகளை யோசிக்க வேண்டிவரும். இதைத் தொடர்ந்து செய்தால், நம்மால் எந்த அளவிற்கு முடிகிறதோ நாம் செய்வோம். அடுத்ததாக எப்படிச் செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் போது இப்படி-அப்படிச் செய்து பார்ப்போம். அப்போது, தவறுகள் நேரலாம். அதனால், நிறுத்தி விடலாமா என்ற யோசனை வரலாம். அந்த எண்ணத்தை நிராகரித்து விட்டு, முயற்சி செய்வோம்.

மேலும் செய்வதற்கு, பிறர் உதவியை நாடுவோம்.  இந்த நிலையை ‘ஜோன் ஆஃப் ப்ராக்ஸிமல் டிவலப்மென்ட்’ (Zone of proximal development, ZPD) என்று லெவ் வைகாட்ஸ்கீ (Lev Vygotsky) என்ற ஸோவியட் உளவியாளர் விவரித்தார். இந்த ZPD நிலையில், நமக்கு ஓர் அளவிற்குச் செய்ய வரும். அதற்கு மேல் செல்ல, மற்றவரின் உதவி தேவையாகும். இந்த, ஒரு நிலையில் நாமாகவும், மற்ற நிலைக்கு இன்னுருவர் உதவுவதே ZPD என்பது. நம்முடன் மேலும் நன்றாக இந்த விஷயத்தை அறிந்தவர் நமக்குக் கற்று தந்து, நமக்குப் புரியும் வரை கூட இருப்பார். நாமாகச் செய்ய முடிகிறது என்று தெரிந்ததுமே அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வார்கள்.

வைகாட்ஸ்கீயின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதால், சில குணங்களும் மேம்படுகின்றன. நமக்கு உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. உதவிக் கேட்க தைரியமும் மனோபலமும் தேவையாகிறதால், கூடவே வளரச் சந்தர்ப்பமாகி விடுகிறது. அது மட்டும் அல்லாமல், இவை எல்லாம் ஒன்றாகக் கூடி தவறுகளை சரி செய்யவும் வழி காட்டுகிறது.

இதில் முக்கியமான அம்சம், நாம் மற்றவர்களுடன் போட்டி இடாமல், நம்மைச் சீர்திருத்தி கொள்கிறோம் என்பதே. இதனாலேயே, நாம் அடுத்த முறையும் முயற்சிப்போம், தவறுகள் வந்தாலும், உதவிக் கேட்டு, அடுத்த நிலைக்குப் போக வழியைத் தேடுவோம். இப்படிச் செய்து வருவதால், ஒவ்வொரு முறையும் நம் தரத்தை உயர்த்திக் கொண்டு போவோம். இப்படி இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதினால் தான் ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்ற பெயர். ‘ஸ்ட்ரெச் தவறு’, ZPD, எல்லா வயதினருக்கும் பொருந்தும்!

உள்ளத்தில் திடீரென தோன்றும் ‘ஆஹா!’

சில சமயங்களில் நாம் ஒன்றைச் செய்து முடித்த பின் நாம் செய்ததை பார்த்ததும், திடீரென நமக்கு, ‘ஆஹா!’, நாமா செய்தோம் என்று தோன்றும். சில சமயங்களில், குறிப்பிட்ட ஒரு நிகழ்வினால், நாம் ஒன்றை நினைத்தாலும் வெறொன்றை செய்துவிடுவோம், அது சரியாக இல்லாமல் போகும் போது ‘ஆஹா, தவறல்லவா!’ என்று உணர்வோம்.

உதாரணத்திற்கு, நாம் ஒருவருக்குப் பாடத்தை விளக்கித் தெளிவாக்கியதும், அவர்கள் இதற்காக நம்மை நாடவில்லை என்று திடீரென உணர்வோம், ‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ என்று தோன்றும். அவர்களுக்கு இது தேவையா என்பதை கூர்மையாகக் கவனிக்காததால் நேர்கிறது.

‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ நம்முடைய கவனக்குறைவினாலும் நேரலாம். நமக்குத் தெரிந்த ஒருவரைக் கைப்பேசியில் அழைத்துப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறோம். வாழ்த்தின மறுகணம் அன்றைக்கோ அவர்களின் திருமண நாள் என்று நினைவுக்கு வர, ‘ஆஹா!’ எனத் தோன்றும்.

இன்னொரு உதாரணம், ஒரு மீட்டிங் முடிந்ததும் ‘ஆஹா நாம் எப்பொழுதும் மற்றவரை ஒதுக்கி விட்டு இருவரை மட்டும் மிகத் திறமைசாலி என்று புகழ்கிறோமே’ என்று. ஒரு முறை அவர்களின் திறமையை உணர்ந்த பிறகு அவர்களின் பங்களிப்பு மட்டுமே கணக்குகள் எடுத்துக் கொள்வது என்று இருந்து விடுவதால் இந்த ஆஹா தவறு நேர்கிறது. ஓரளவிற்குப் பார்த்தபின், புரிந்த கொண்டபின், முழுமையாகப் பார்க்காமல், தீர யோசிக்காமல், இவ்வளவுதான், இப்படித்தான் என்று எண்ணிவிடுவது தான் இதற்குக் காரணம். கண்டிப்பாக நாம் கவனத்தை சுதாரித்துக் கொள்ள வழிகளை அமைக்க வேண்டும். இல்லையேல், மேலும் மேலும் ‘ஆஹா!’ தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஈடுபாடற்ற காரியம் 

சில நேரம், ஒரு காரியத்தைச் செய்கையில் நம் கவனம் சிதறும். இதனால், செய்யும் வேலையில் தவறுகள் வர நேரிடும். இது தான் ‘ஸ்லாப்பி தவறு’. இப்படி ஆவதற்குக் காரணங்கள்: எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் செய்வதால்; ஒரு எந்திரம் போல் செய்து கொண்டே போனால்; அவசரப்பட்டு செய்வதால்; ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்வதால் என்று பல. சில சமயங்களில், பல மணி நேரம் அதையே செய்து கொண்டு இருந்தாலும் நிகழலாம். ‘ஸ்லாப்பி’ தவறுகள் நம் உடல்-மனத்திற்கு நாம் செய்வது சரியாக இல்லை, மாற்றிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன. சில சமயங்களில், நமக்கு ஓய்வு தேவை என்பதை நமக்கு ‘ஸ்லாப்பி தவறு’ புரியச் செய்கிறது. சொல்வதை மதித்து, மாற்றி அமைத்தால் நன்று.

‘ஸ்லாப்பி’, நம் வழிகளை எப்படி சீர் செய்தால் நன்றாக அமையும் என்று ஆராய ஓர் வாய்ப்பாகிறது. சற்று சிந்தித்தால், நமக்கே புரிய வரும், நமக்குத் தேவை வேறு விதமாகச் செய்வதா, இல்லை உதவி தேவையா, இல்லை ஓய்வு தேவையா என்று. அதே போல், நாம் ஒன்றைச் செய்யும் போது எது அதனுடன் ஜோடி சேர்வதில்லை என்றும் அறிந்து கொள்வோம். உதாரணத்திற்கு, நம் வேலையுடன், டிவி பார்ப்பது ஒப்புவதா இல்லையா என்று. நாம் உடற்பயிற்சி செய்தால் அதன் பின்னர் வேலையை நன்றாகச் செய்கிறோம் என்று உணர்ந்தால், அது உடற்பயிற்சியின் நேரத்தை நிர்ணயிப்பதற்கு உதவும்.

நம் மூளை நாற்பத்தைந்து நிமிடத்திற்குக் தான் முழு கவனம் செலுத்தும். அதற்குப் பிறகு அதற்கு ஓய்வு தேவை. இந்த ஓய்வு எதற்கென்றால், இதுவரை வந்த தகவல்களை பத்திரப்படுத்தி வைக்கவே. அதனால்தான் கல்வி நிலையங்கள், கான்ஃப்ரென்ஸ் என்று பாடங்கள் நடத்தும் இடங்களில், தொடர்ந்து நடத்தும் நேரம் 45 நிமிடமே. இதைப் புரிந்து செயல்பட்டால், நமக்குச் சாதகமாகும்.

இனிமேல், ஏதோ செய்யத் தேவை என்றால், நாம் கவனிக்க வேண்டியது: அதிலிருந்து நம் மனம் திசை திரும்புகிறதா? வேலையை ஒரு அவசரத்துடன் முடிக்க முயலுகிறோமா? ஈடுபாடு குறைகிறதா? இவை எல்லாம் இருந்தால், நிச்சயமாக ‘ஸ்லாப்பி’ தவறுகள் ஆவதற்கு இடம் கொடுக்கிறோம்.

பெரிய இக்கட்டு

ஆணவமாக, ‘எல்லாம் என் கட்டுப்பாட்டில் தான்’ என்று எண்ணி செயல் படுவது ‘ஹை ஸ்டேக்ஸ் தவறு’ என்று குறிப்பிடப்படுகிறது. அது ஆபத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கலாம். போதை பொருள் உபயோகிப்பது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது போன்றவை உள்ளடங்கும். ஆரம்பிக்கும் பொழுது ‘என்ன செய்துவிடும்? என்னால் இதைக் கட்டுப்படுத்த முடியும்’ என்ற அகந்தை. இந்த மனோபாவம் தான் ஹை ஸ்டேக்ஸ் தவற்றின் அடிக்கல்லாகும், பெரும் தோல்வியில் கொண்டு விடும்.

சில முறை நம்மால் நிச்சயம் முடியாது, அல்லது ஆபத்தானது என்று எண்ணுவதை முயற்சிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். மொழி தெரியாத ஊரில் போய் பிழைப்பது, கடினமான ப்ராஜெக்ட் பொறுப்பை ஏற்றுக் கொள்வது போன்றவை. முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் அதிக கவனம் செலுத்தத் தேவை, இங்கே மேலே சொல்லப்பட்ட ZPD நேரிடும். ஒரு விதத்தில் ‘ஸ்ட்ரெச்’ தவறுகளின் அம்சங்களும் இருக்கும்.

இந்த ‘பெரிய இக்கட்டு’ நிலையில் தவறு வராமல் இருக்க, நாம் கடும் உழைப்பாளியாக, அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். செய்வதை, முன்னேற்றத்தைக் கூர்ந்து கவனித்து குறித்துக் கொள்ளும் பழக்கம் செய்வதை மேம்படுத்த உதவும். ஒவ்வொரு முறையும் செய்ததையும், செய்யப் போவதையும் ஆராய்ந்து வந்தால் தவறுகளையும் அகற்றலாம், அதே நேரத்தில், தடங்களை, தடுப்புகளைக் கவனித்து, சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் வேண்டும். நாம் நினைத்ததை அடைய முடியும்.

தவறுகள் பல வண்ணங்களில்

வாழ்வில் பல இடங்களில் நம் கவனத்துடன் செயல்பட்டால், செய்வது நன்றாக அமையும். அதே சமயம், நம்மைத் திசை திருப்பும் தருணங்களும் உண்டு. தவறுகள் ஒரு விதத்தில் எச்சரிக்கைகளே. அவற்றை மதிப்போம், புரிந்து செயல்படுவோம்.

எந்த ஒரு செயலிலும் தவறுகள் நேருவது நிதர்சனம். அது நேர்ந்த பின் என்ன செய்கிறோம் என்பதுதான் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.

மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com