நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ ஒரு எளிய வழி!

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, கனவு கண்டு, துணிந்து, செய்து காட்டுவது (I dream, I dare, I do)!
நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ ஒரு எளிய வழி!

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, கனவு கண்டு, துணிந்து, செய்து காட்டுவது (I dream, I dare, I do)! இதிலிருந்து மனநிறைவு வருகிறது. நாம் ஒன்றை நினைத்து, அதை முடித்ததால் இப்படி நேர்கிறது. வரும் கரவொலி, மனத்துக்கு மிக இதமானதாகவும் தோன்றும்! இதுதான்  நம்மை ஊக்கப்படுத்தி, முன்னேறுவதற்கு வழி செய்யும் கருவி. அதுவும், நாம் செய்வது மற்றவருக்கும் பயன்படுவதை பார்த்தால், அது மேலும் செய்ய தூண்டி விடுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, நம் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று எண்ண வைத்து, நம் மனநலனைக் காக்க, வாழ்வு நன்றாக இருக்க உதவுகிறது.

ஆனால் எல்லோரும், எப்பொழுதும் இப்படி அமைத்துக் கொள்வதில்லை. நம் கருத்துக்கள், எண்வோட்டங்கள், சூழ்நிலைகள், மனப்பான்மை எல்லாமே மனநலனைப் பாதிக்கச் செய்யும். இவற்றை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், நம் நடைமுறை வாழ்வில் இன்னல்களாகவும், உபாதைகளாகவும் அமையும். நினைத்ததை முடிக்க முடியாமல் போக, வெறுப்பு ஏற்படக் கூடும். இந்த பாதிப்புகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? நாம் வாழ்க்கையை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பார்த்து, நம் மன நலம் பாதிக்கப் பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியுமா? பாதிப்பின் சில ரூபங்களையும் அதன் அடையாளங்களையும் இங்கே பார்க்கப் போகிறோம்.

மனநலம் அறிய, கீழ் சொல்லப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருவித தோற்றங்கள் காணலாம். ஒன்று நம் மனநலனைக் காத்து, நம் வாழ்வைச் செழிக்க வைக்க உதவுகிறது. மற்றொன்று நம் மனநலத்தை, குறிக்கோள்களை அடைவதைப் பாதிக்கும் தடைகளின் அறிகுறி. இதனால் மனக்கலக்கம், மனக்கிலேசம் ஏற்படலாம்.

கீழே விவரித்ததிலிருந்து, நமக்கு எந்த சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது  என்பதை அறிந்து கொள்ளலாம். அதை மாற்ற  வேண்டும் என்று எண்ணுபவர்கள், அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். எந்த வயதினரும், எந்த வயதிலும் மாற்றத்தை அமைத்துக் கொள்ளலாம். மாற்றத்தின் முதல் படி, நாம் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதாகும். அதிலிருந்து மாற்றத்தை வகுக்கலாம். ஆரம்பிக்கலாமா?

நன்றியுணர்ச்சி (அல்லது) என் உரிமை!

மனநலத்தைக் காக்கும் மிக உத்தமமானது, நன்றியுணர்ச்சி (Gratitude)! கடவுள், பெற்றோர்கள், கூடப்பிறந்தவர், ஆசிரியர், படித்த புத்தகம், நண்பர், சக ஊழியர், சமயத்திற்கு உதவுபவர், அலையின் ஓசை, குயில் பாட்டு என்று பலவற்றிற்கு நமக்கு நன்றி உணர்வு இருக்கலாம். நன்றி உணர்வு இருந்தால் அது சந்தோஷத்தை மேம்படுத்தும்.நமக்கு இப்படித் தோன்றுவதே நமக்குச் செய்த உதவியை, பெற்றதையும் மனதில் வைத்திருப்பதைக் காட்டுவதாகும். 

அவர்கள், நம்மேல் காட்டிய பாசமும், அக்கறையும், கொடுப்பினைகளும் நமக்கு ஆதரவு, பாதுகாப்பாகிறது. இந்த அனுபவிப்பின் பிரதிபலிப்பே நம் நல்லுணர்வு. இதனால், நாம் பல நல் விளைவுகளை அனுபவித்திருப்போம். இதை விவரிக்கும் போது, யாரால் நடந்தது என்பதைச் சொன்னால் அது நன்றி உணர்வு எனச் சொல்லலாம். பலரிடம் பகிர்ந்து கொள்வதே நம்முடைய நன்றி உணர்வைக் காட்டுகிறது.

நன்றியுணர்வு உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களுக்கு செய்தது போல், பலருக்கு தங்களால் முடிந்ததைச் செய்வார்கள். மேலும் தான் பெற்ற ஆதரவுக்குக் கைமாறாக, அதைப் பற்றி எல்லோரிடமும் பகிரங்கமாக நினைவூட்டிப் பகிர்ந்து கொள்வார்கள். நன்றி சொல்வது, ஓயாத சொல் என்றே சொல்லலாம்!

நன்றியுணர்வு உள்ளவர்களிடம் அவர்களின் பாதுகாப்புத் தன்மை நன்றாகத் தெரியும். அதனாலேயே, எந்த வித பகட்டு, சத்தம் இல்லாமல் நன்மை செய்து கொண்டே இருப்பதால் இவர்களை அணுகுவது மிக எளிதானது. அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், அவர்களுடன் இருப்பவரும்!

இதற்கு நேர்மாறானது, எல்லாம் என் உரிமை (my entitlement) என்பது, மனநலனைப் பாதிக்க கூடிய ஒன்றாகும். யார் தனக்கு எது செய்தாலும், செய்வது அவர்கள் கடமை, பெறுவது தன் உரிமை என்று கருதுவார்கள். மேலும், மற்றவர்கள் செய்யட்டுமே, என்று எண்ணுவார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இதை தெரியப் படுத்துவார்கள். தங்களுக்கு விழுந்து விழுந்து உழைப்பாக, காசு பணமாக, பொருளாகச் செய்ய விடுவார்கள். இவர்களிடம் லஞ்சம், ஜால்ரா அடிப்பது செல்லும்.

இப்படி, தன் உரிமை வழங்கல் பிரதானமாக எண்ணுபவர்கள் தங்களின் அதிகாரத்தை மையமாக்கி உரிமைகளைக் கொண்டாடுவார்கள். செய்வோரின் மீது முழு உரிமை செலுத்திக் கொண்டு, தங்களின் அடிமையாக நடத்துவார்கள். தன் முன்னேற்றம், செழுமை எல்லாம் தன் சாமர்த்தியம், தன் உழைப்பினால் தான் என்று சாதிப்பார்கள், மற்றவரின் பங்கேற்பை மூடி மறைத்து விடுவார்கள், துச்சப் படுத்துவார்கள்.

தங்களின் திறமையை, திறனை மேம்படுத்தத் தெரியாதவர்கள் இப்படியே இருப்பார்கள். இப்படி நடந்து கொள்வதும், அதிகாரத்தை உபயோகிப்பதும் அவர்களின் சுய திறன் இல்லாததினால் தான்.

தாங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், எந்த ஒரு சிரமமும் படாமல் மற்றவர்களை வைத்தே செய்து முடிப்பார்கள். உள் மனதில் அவர்களுக்கு தங்களின் இயலாமை தெரியும். அதை மறைப்பதற்கு இந்த அகம்பாவமும், பந்தா போர்வையும்.

உங்களின் அடையாளம்: பணிவா? என் உரிமையா? சரி, அடுத்ததைப் பார்ப்போம்

பகிர்ந்து கொள்வது (அ) பதுக்கி,மறைத்து வைப்பது

நமக்குத் தெரிந்ததையும், தகவல்கள் கிடைத்த இடங்களையும் சொல்வது பாதுகாப்பு தன்மையையும் பரந்த மனப்போக்கையும் காட்டுகிறது. அடுத்தவர்களுக்கு விளக்கிச் சொல்வது, சந்தேகத்தை தனக்கு தெரிந்த வரையில் நீக்கி விடுவது, பதில்களை எங்குக் கிடைக்கும் என்ற விவரங்களை எடுத்துச் சொல்லுவது எல்லாம் பகிர்ந்து கொள்வதற்குள் அடங்கும். பகிர்ந்து கொள்வதால் தெரிந்தது இன்னும் அதிகமாகுமே தவிர குறையவே குறையாது. இந்த புரிதலே நன்றாக இருக்கும் மனநலத்தின் அறிகுறியாகும்!

இதற்கு எதிர்ப்பதமாக,தகவல்களைப் பதுக்கி, மறைத்து வைப்பவர்கள் ஆவார்கள். இவர்கள்,  மனக்கலக்கம் உள்ளவர்களாக இருப்பவர்கள். மழுப்பலான விடை, பொய் சொல்வது, தாமதித்துத் தருவது என்ற பல வகையில் மறைப்பதைச் செய்வார்கள். அந்தத் தகவல் தன்னிடம் இல்லாதது போல் காண்பித்துக் கொள்வது, ஒளிப்பதற்கு தன் உயர் அதிகாரியே காரணம் என்று பழியை யார் மேலேயோ போடுவது என்ற ஏதோ ஒரு யுக்தியைக் கையாளுவார்கள்.

மறைத்துப் பதுக்கி வைக்கும் நபர்கள் அந்த விஷயம் தங்களிடம் இருப்பதால் தான் மற்றவர்கள் தங்களை அணுகுகிறார்கள், மதிக்கிறார் என்று எண்ணும் காரணத்தினால் யாரிடமும் அதை முழுவதாகச் சொல்ல மாட்டார்கள். தங்களை மேம்படித்திக் கொள்ள வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் இப்படி நேர்கிறது.

எப்பொழுதும் ஒளித்துவைப்பதால் தன்நம்பிக்கை இழந்தவர்களாகத் தென்படுவார்கள். சில சமயங்களில், தன்னிடம் மட்டுமே அந்த தகவல் இருக்கிறது என்ற கர்வத்துடன் தென்படுவார்கள். இப்படிச் செய்வதை நினைத்து, உள்ளுக்குள்ளே வெட்கத்தில் மூழ்கி இருப்பார்கள். சஞ்சலங்கள் நிறைந்து இருப்பதால், மனதில் அலை மோதிக் கொண்டே இருப்பதால், மனநலம் சரியாக இருக்காது. நீங்கள் கையாளும் விதம்? உங்கள் மனநிலை?

பாராட்டுவது (அ) விமரிசனம் / குறை காணல்

தனக்குத் தெரிந்தவரோ, தெரியாதவர்களோ என்று யாராக இருந்தாலும், செயல்பாட்டு நன்றாக இருந்தால், பலனை எதிர்பார்க்காமல் தாராளமாக பாராட்டைச் சொல்வார்கள். தன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருப்பவர்கள், ஓர் அளவிற்கு நன்றாகத் தன்னை அறிந்திருப்பதால், யாராக இருந்தாலும் நன்றாகச் செய்வோரை முழு மனதுடன் பாராட்டுவார்கள்.

இதற்கு நேர்மாறானவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எல்லாவற்றையும் விமரிசனம், குறை காணல் செய்வார்கள். எளிதாகக் எதிலும் குறை காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் குறையை மட்டும் பார்ப்பதால் அவர்கள் அருகில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இதுவே அவர்களை மேலும் வெறுப்பூட்டும், விளைவு, மேலும் மேலும் விமர்சனம் செய்வதாகும்.

குறைபாட்டையே அடையாளம் காண்பதால் ஏளனமாகத் தெரிவிப்பார்கள். இதனால், சிலருக்கு இயல்பாகவே நக்கல், நையாண்டி பேச்சாக இருக்கும். நக்கலாகப் பேசுவதும், கிண்டல் அடிப்பதும், அதிகமாகக் குறை கூறுவதும் உள்ளதால் அவர்களிடம் பேச விருப்பம் இல்லாமல் இருக்கும். இதை மரியாதை என்று எடுத்துக் கொண்டு, தங்களைப் பற்றி பெருமை பட்டுக் கொள்வார்கள், மற்றவர்களின் மனது துன்படுதுவதை உணர மாட்டார்கள். வார்த்தைகள் கசப்பாக இருப்பதால் இவர்களின் முக பாவமே சிடுசிடுவென்று, முறைப்பாக இருக்கும். இதுவெல்லாம் மனநல குறைவே. நாம் எதைச் செய்கிறோம்?

கருத்துக்கள் பரிமாற்றமா? (அ) மற்றவர்களைப் பற்றிப் பேச்சா?

ஒருவரைச் சந்தித்து பேசும் போது மூன்றாமவர்களைப் பற்றிப் பேசலாம், அல்ல கருத்துக்களை பரிமாறவும் செய்யலாம். என்ன வித்யாசம்?

கருத்துக்களைப் பரிமாறி கொள்வதால் நாம் அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கலந்து ஆலோசித்து, தான் யோசித்த விதத்தை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும். மற்றவர்களின் குறிப்புகளை கேட்பது, மதிப்புடன் பதில் கூறுவது இதில் அடங்கும். நான் சொல்வது மட்டுமே சரி என்று இருந்தால் அதில் ஒருத்தரின் கருத்து மட்டும் வெளியாகும். பேசிக் கொள்பவர்களின் இடையில் நல்ல புரிதல் இருந்தால் பகிர்ந்து கொள்வது எளிதாகும். இருவரும் மற்றவர் கருத்துக்கு மரியாதை கொடுத்துப் பகிர்ந்தால் அதில் சண்டை, கூச்சல் இருக்காது. அதற்குப் பதிலாக பல தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள். தெரியாத பலவற்றை தெரிந்து கொண்டதால், இவர்களை மறுபடியும் சந்திக்க தோன்றும்.

மற்றவர்களைப் பற்றி பேச்சு என்றால், அந்த குறிப்பிட்ட நபரின் வாழக்கையை அலசி நம்முடைய விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்வோம். பேசப் படுபவர்கள் அங்கு இல்லாததால் அது வீண் பேச்சாகும். இதில் அவர்களின் குறைவுகள் தான் அதிகம் பேசப்படும். இதனால் பேசுபவருக்கோ, பேசப்படும் நபருக்கோ எந்த விதத்திலும் உபயோகம் இல்லை. இப்படிப் பேசுபவரை கண்டு அஞ்சுவார்கள்.
எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து (அ) 'அவர்கள் தோல்வி அடைய வேண்டும்' நம் இந்திய கலாச்சாரத்தில் மிக அழகானது ‘ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என்ற எண்ண ஓட்டம். பிறர் நலன் விரும்புவது, செழிப்பிலும், ஐஸ்வர்யத்திலும், உடல் நலத்திலும். இப்படி விரும்புவோர், தனக்கு மட்டுமே இன்றி எல்லோருக்கும் நல்லதையே எண்ணுவார்கள். இந்திய நாடு, கூட்டுச் சமுதாயமாக இருப்பதும் இப்படித் தோன்றச் செய்கிறது. அதனால் தான் பகிர்ந்து கொள்வது நாம் எப்போதும் செய்வதே. எல்லோர் நலத்தில் நம் நலனும் அடங்கி விடுகிறது.

போட்டி, பொறாமையினால் வருவது, மற்றவர் தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம். இதில் மற்றவருக்கு எப்படிச் சரிவு ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையே கொண்டிருப்பது, வருத்தப் பட வேண்டிய ஒன்றாகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் போட்டி அதிகரிப்பதால், இது வளரும் பருவங்களிலும் பார்க்கிறோம். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? தன் திறமையினால் வெல்ல வேண்டும் என்பதைவிட, எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற மனப்பான்மை. தங்களுக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம். எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

எந்த வழியைப் பின்பற்றுவது?

கற்றுக் கொண்டு இருப்பது / இதெல்லாம் தெரியும்

வாழ்நாள் முழுவதும், நமக்குத் தெரியாது என்று பல உண்டு. ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ தெரியாததை, தெரிந்து கொள்ளத் தூண்டும். இப்படி, கற்றுக்கொண்டே இருப்பதால் பலவகையான விஷயங்களை அறிந்து கொள்கிறோம். “ஆம், எனக்கு இது தெரியாது” என்று ஏற்றுக்கொள்வதே நம் அடக்கத்தை உயர்த்தும். இந்த ஆற்றல் நாம் மேலே வளர உதவுகிறது.

பின்பற்றத்தக்க வழிமுறைகளில் இதன் இடமும் உண்டு. மேலும், விஷயம் தெரியவில்லை என்பவரை ஏளனப் படுத்த மாட்டோம்.

நமக்குத் தெரியும் என்று எண்ணி விட்டால் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ‘இதுவா? தெரியும்’ என்றே எப்போதும் இருந்தால் அது நம் கற்றலுக்கு குறுக்கே நிற்கும். அத்துடன் கர்வத்தை உண்டு செய்யும். தெரியாதென்றால் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டோம், மற்றவர் நம்மை மூடர் என்று நினைப்பார்களோ என்று அஞ்சுவோம். அதனால் முன்னேற மாட்டோம்.

கடந்த மாதங்களை எந்த விதத்தில் நாம் அணுகினோம்? 

இப்போது, நாம் எதை ஏன், எப்படிச் செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே மாற்றத்தின் முதல் படி. தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து நலனை அடைவது இனி நம்மிடமே! அப்படி என்றால் நான்? என்பதற்கும் விடைகள் நம்மிடமே உள்ளது!

- மாலதி சுவாமிநாதன் - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com