அதீத அன்பும் ஆபத்தானதே

தம் அதீத அன்பால் பெற்றோர் தன்னையும் அறியாமல் எப்படி சுயநலனே பெரிதென நினைக்கும் பிள்ளைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றனர்
அதீத அன்பும் ஆபத்தானதே

தம் அதீத அன்பால் பெற்றோர் தன்னையும் அறியாமல் எப்படி சுயநலனே பெரிதென நினைக்கும் பிள்ளைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றனர் என்பதை முந்தைய கட்டுரையில் கண்டோம்.

எம்மா பட்டாக்ளியா என்ற உளவியலாளர், ‘அதிகப்படியான பொருட்களை வாங்கி கொடுத்துதான் உங்கள் பிள்ளைகளைக் கெடுக்க வேண்டும் என்பதில்லை, உங்கள் அதீத அன்பாலும் அவர்களைக் கெடுத்து விட முடியும். அன்பை சரியான விதத்தில் காட்டுவதெனில்  அது பிள்ளைகளை இந்த உலகை எதிர்கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும் அதே சமயம் பணிவும் மனித நேயமும் கொண்டவர்களாகவும் வளர்ப்பதுதான்’, என்கிறார். 

பெற்றோர் அதீத அன்பு காட்டும் சமயங்கள்

குழந்தையை சுற்றியே தன்  உலகை அமைத்துக் கொள்வது:

சில பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடனே தன் முழு நேரத்தையும் செலவழித்து தன் குழந்தை மட்டும் தான் உலகம் என்பது போல் நடந்து கொள்கின்றனர் . குழந்தையின் மகிழ்ச்சிக்கென தனது எந்த சந்தோஷத்தையும் விட்டுத் தர தயாராகவுள்ளனர் . குழந்தைகள் நமக்கு முக்கியம்தான், ஆனால்  தனக்கான இடத்தையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர பெற்றோர்களுக்கு வேறு முக்கிய வேலை ஏதும் இல்லை என பிள்ளைகள் நினைத்து விடக் கூடாது. வயது வந்த பிள்ளைக்குக் கூட குளிக்கச் செல்லும் முன் உள்ளாடை எடுத்து தருவதிலிருந்து வீட்டுப்பாடம் செய்து தருவது வரை  ஓடி ஓடி பணிவிடை செய்யும் பெற்றோர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.

தன் பெற்றோரின் உடல் சுகமின்மையையும் பொருட்படுத்தாமல் அதிகார தொனியுடன் பிள்ளை வேலை வாங்கினாலும் பிள்ளை கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று நிற்கும் பெற்றோர் இந்த பட்டியலில் அடங்குவர். பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது என்ற எண்ணமே துளியும் இல்லாமல் படிப்பது மட்டும் தான் என் வேலை, வீட்டு வேலைகள் பெற்றோருக்கானது என்று நினைக்கும் இப்பிள்ளைகள் வெளி உலகமும் இப்படி தனக்கு சாதகமாகவே இருக்க வேண்டுமென நினைத்து,  அது நடக்காத போது ஏமாற்றத்தால் உடைந்து போவார்கள். தன்னை கவனிப்பது மட்டுமே பெற்றோர்களின் வேலை அல்ல; அவர்களுக்கென வாழ்க்கை, வேலை, ஆசை, சமூகப் பொறுப்பு எல்லாமே உண்டு; எனவே அவர்களுக்கு ஏற்றபடி தானும் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விட்டுக் கொடுத்தலும் வளைந்து கொடுத்தலுமே வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்கும் என்பதையும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

பிள்ளைகளை சிறு துன்பமும் படாமல் வளர்க்க நினைப்பது

பிள்ளைகள் சிறு துன்பம், மன உளைச்சலுக்கும் ஆளாகி விடக் கூடாது என ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டும் பெற்றோர் அத்தகைய சூழலை எப்படி மேற்கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர தானே எப்போதும் உடனிருந்து உதவ எண்ணக் கூடாது. குழந்தை கீழே விழுந்து விட்டால் தரையை அடிப்பதும் குழந்தை யாரால் காயப்பட்டதோ அவர்களை அடிப்பதும் குழந்தையின் மனதில் தான் சரி மற்றவர்கள் மீது தான் தவறு என்ற எண்ணத்தை ஆழமாக பதியவைத்துவிடும். மாறாக அழும் குழந்தையை எல்லாம் சரியாகிவிடும் என சமாதானப்படுத்தி மீண்டும் விளையாட வைப்பதே சரியான வழியாகும்.

கண்டிக்கவோ தவிர்க்கவோ வேண்டிய செயலை ஊக்கப்படுத்துவது

ஏதாவது ஒன்றை கேட்டு அடம் பிடித்து  அழும் குழந்தையை சமாளிக்க கேட்டதை கொடுப்பது தவிர்க்க வேண்டிய ஒன்று. அடம் பிடித்து அழுதால் கண்டு கொள்ளாமல் விடுவதே சரியான வழி .

சரியான எல்லைகளையும் தெளிவான விதிமுறைகளையும் கற்றுக் கொடுக்காமலிருப்பது

ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு சரியான நடத்தைக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். மருத்துவரான சூசன் பட்றாஸ்  என்பவர், ‘விதிமுறைகள் பின்பற்றப்படாத  குடும்பத்தில் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்ட, மரியாதையற்ற, ஒத்துழைக்காதவர்களாக இருப்பார்கள்’, என்கிறார். தான் நினைத்தபடி நடக்க அனுமதிக்கப்படும் குழந்தைகள் கீழ்படிதலற்றவர்களாக, பிறரைப் பற்றிய உணர்வு அற்றவர்களாகவே இருப்பார்கள்.

விதிமுறைகளை ஒரே சீராக அனுசரிக்காமலிருத்தல்:

அளவுக்கு மீறிய செல்லமோ, கண்டிப்பா ஆபத்தானது என்பதுபோல் ஒரே விஷயத்திற்கு ஒரு நேரம் கண்டிப்பதும், ஒரு நேரம் போனால் போகிறது என விடுவதும் தவறாகும். உதாரணமாக வேறு யாரும் வீட்டில் இல்லாத போது குழந்தை தன்னை ஒருமையில் அழைப்பதையோ, திட்டுவதையோ, ஏன் அடிப்பதையோ கூட கண்டிக்காமல் ரசிப்பவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் மட்டும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்த்தால் எப்படி சாத்தியமாகும்?

தவறுக்கு தண்டனை உண்டென உணர்த்தாமலிருத்தல்:

பிள்ளைகள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டி சரி செய்ய வேண்டும். உதாரணமாக தன் தம்பியை அடித்தல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தல், பொருட்களை உடைத்தல், பெற்றோரை எதிர்த்து பேசுதல்,போன்றவை தவறான செய்கைகள் என்பதை உணர்த்தி சரி செய்யாவிடில், தான் தவறே செய்யமாட்டோம்; தான் செய்வது எல்லாமே சரியானது என்ற எண்ணம் பிள்ளையின் மனதில் பதிந்துவிடும்.

தவறான முன்னுதாரணமாக இருத்தல்:

பெற்றோர் நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் எப்போதும் சண்டையிடுவது,அழுவது, பொய் சொல்வது, கோபப்படுவது என்றிருந்தால்  பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள்.

பிள்ளையின் தவறான  நடத்தைக்கான விளைவையும் தானே ஏற்றல்:

தன் தவறுக்கான குற்றவுணர்வினையோ, மன அழுத்தத்தையோ பிள்ளைகள் உணர அனுமதிக்க வேண்டும். அதையும் பெற்றோர் தன்  தலையில் சுமக்க வேண்டியதில்லை. தன் செயலுக்கான விளைவு இது என்பதை உணரும் போதுதான் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்பார்கள். அவமானம், ஏமாற்றம், மன அழுத்தம் தரும் பாடங்களே அவர்களை வலிமையுள்ளவர்களாக்கும். அவற்றை எதிர்கொள்ள நம் உதவி தேவைப்படுமாயின் அப்போது உதவலாம்.

பெற்றோர் தன் பிள்ளையை உண்மையான உலகை எதிர்கொள்ளும் வகையில் வளர்க்க வேண்டும். தான் நினைத்ததையெல்லாம் நினைத்த நேரத்தில் பெற்றுக் கொள்வது நிஜ உலகில் சாத்தியமில்லை என்பதையும், எதிர்படும் இன்னல்களையும், ஏமாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்ளவும், இன்ப துன்பங்களை சமநிலையில் கையாளும் பக்குவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதீத அன்பு காட்டும் பெற்றோர் பின்வரும் எண்ணங்கள் பிள்ளையின் ஆழ்மனதில் பதியக் காரணமாகின்றனர் :

  • மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை
  • நான் எனக்குத் தேவையானதைப் பெறுவதற்குத் தான் மற்றவர்கள் இருக்கிறார்கள்
  • பிறரை சார்ந்திருக்கவோ, பிறரிடம் எதிர்பார்க்கவோ எனக்கு எல்லா உரிமையும் உண்டு
  • என் நோக்கத்தை அடைய பொய் சொல்வது, ஏமாற்றுவது, பிறரைப் பயன்படுத்துவது எதுவும் தவறில்லை
  • எனது வழி சரியானது, மற்றவர்களின் வழி தான் தவறானது. என்னைப் பற்றி புரிந்து கொள்ளாதது அவர்களது தவறு  
  • என் நன்மைக்காக மற்றவர்களை என் கட்டுப்பாட்டில் கொண்டுவர நான் எதையும் செய்யலாம்
  • நான் கடினப்பட்டு உழைக்க வேண்டிய அவசியமில்லை; கடின உழைப்பு என்பதெல்லாம் மற்றவர்களுக்கு தான்
  • நான் உழைக்காவிட்டாலும் எல்லாவிதமான பலன்களையும் பெற எனக்கு உரிமையும், தகுதியும் உண்டு 
  • மற்றவர்களின் பொருளை அவர்களின் அனுமதியோடுதான் எடுக்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை
  • பிறரின் தேவையைவிட என்னுடைய தேவையே மிக முக்கியம்
  • சிறப்பான சலுகைகளை பெற எனக்கு எல்லா தகுதியும் உண்டு
  • ஏனென்றால் நான் சிறப்பு வாய்ந்தவன். மற்றவர்களுக்கான விதிமுறைகளுக்கு நான் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

பொறுப்புமிக்க பிள்ளைகளை உருவாக்குவது எப்படி?

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது தாயையே கொலை செய்யத் துணிந்த உமாபதி போன்று பொறுப்பற்ற, தன்னலமிக்க, பிறரைப் பற்றிய அக்கறையற்ற, கல்நெஞ்சர்கள் ஆகின்றனரா அல்லது தனித்துவமும், செயல் திறனும், தன்னம்பிக்கையும், சமுதாயத்தைப் பற்றிய அக்கறையும் கொண்ட நல்லவர்களாக உருவாகின்றனரா என்பது பெற்றோர்களின் வளர்ப்பில்தான் உள்ளது.

பெற்றோர்களுக்கு உதவும் சில குறிப்புகள் :

  1. பிள்ளைகளிடம் அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள், சிறப்பானவர்கள் என்று பாராட்டுவதைத் தவிருங்கள். அவர்கள் கடவுளால் எவ்வளவு ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்பதையும் மற்றவர்களோடு நாம் எப்படி ஒத்துப் போகிறோம் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில் திரும்பத் திரும்ப தான் மிகச் சிறப்பானவன், தன்னைப் போல் வேறு எவரும் இல்லை என்ற புகழைக் கேட்டு வளரும் குழந்தை சுய ஆராதனை மனோபாவம் (Narcissistic personality) கொண்ட சுயநலவாதிகளாக மாறிவிடுவர்.
  2. மக்கள் ஒருவரை அவரது நல்ல குணங்களுக்காக ஏற்றுக் கொள்வார்களே தவிர அவரது தனித்துவத்திற்காக அல்ல. அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட பிக் பாஸ் தொலைக்காட்சித் தொடரின் முடிவு இதற்கு நல்லதோர் உதாரணம். இளம் வயதிலேயே நல்ல உடல் வலிமையும், மனவலிமையும் கொண்டு டாஸ்க்குகளில் எல்லாம் சிறப்பாக விளையாடிய போதிலும் மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட யாஷிகா மக்களால் நிராகரிக்கப் பட்டார். அதே போல் அழகும், கவர்ச்சியும், திறமையும் கொண்டிருந்தாலும், வெற்றி பெற பொய் சொல்லவோ ஏமாற்றவோ தயங்காமல், பிறரை ஹிட்லரைப்போல்  அடக்கியாள நினைத்த ஐஸ்வர்யாவும் தோற்றுப் போனார். மாறாக பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நியாயமாக, தன்னம்பிக்கையுடன் விளையாடிய ரித்விகாவே மக்களின் மனதை வென்று பரிசைத்  தட்டிச் சென்றார். எனவே நம் சொல்,செயல், நடத்தை நமக்கோ பிறருக்கோ தீங்கு தராததாக , நியாயமானதாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிக அவசியம்.
  3. வீட்டு வேலைகளில் உதவ பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சில பெற்றோர் பிள்ளைகள் பொதுத் தேர்வுக்குப் படிக்கிறார்கள் என்று வேறு எந்த வேலையும் அவர்களுக்கு கொடுப்பதில்லை. சிலர் கடைக்குச் செல்ல, வீடு பெருக்க, பாத்திரம் கழுவ பிள்ளைகள் உதவி செய்ய லஞ்சமாக காசு கொடுத்து பழக்கப் படுத்துகின்றனர். இது தவறு. வீட்டு வேலைகளில் உதவ தனக்கும் பொறுப்பு உண்டு என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். இது எதிர்காலத்தில் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் என்கின்றனர் குழந்தைகள் நல வல்லுநர்கள்.
  4. தெளிவான எல்லைகளையும், விதிமுறைகளையும் குழந்தைகளுக்குக் கொடுங்கள். விதிகள் மீறப்பட்டால் தண்டனை உண்டு என்பதையும் முன்பே சொல்லி விடுங்கள். தண்டனை என்பது அடிப்பதோ திட்டுவதோ அல்ல . குழந்தை விரும்புவதை தராமல் தள்ளிப் போடுவதால், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மீண்டும் அத்தவறை செய்யாதிருப்பார்கள் .
  5. தம் கடமைகளை செய்வதற்காக அல்லாமல் நல்ல நடத்தைகளுக்காக பாராட்டியோ சிறு பரிசுகள் தந்தோ ஊக்குவிக்கலாம் .
  6. பெறுவதை காட்டிலும் தருவதே சிறந்ததது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தன் பிறந்த நாளுக்கோ பண்டிகை நாட்களுக்கோ கிடைத்த இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை தேவை உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தரலாம்.
  7. குடும்பத்தில் உள்ளோர் மீது அக்கறை காட்டுவது பிள்ளைகள் கற்க வேண்டிய முக்கியமான குணம். அதே போல் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோர் மற்றும் நோயாளிகள் மீதும் அன்பும் அக்கறையும் காட்டவும் கற்று கொடுப்பது அவசியம்.
  8. எப்போதும் எல்லோரிடத்திலிருந்தும் நமக்கு சாதகமான பதிலே கிடைக்காது. எனவே 'இல்லை', 'கிடைக்காது', என்ற வார்த்தைகளுக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவது மிக முக்கியம்.
  9. ‘இந்த உலகம் நம் தேவைகளை பூர்த்தி செய்யும், ஆனால் நம் ஆசைகளை அல்ல’ என்பது இயற்கையின் விதி. எனவே ஆசைக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகளுக்கு உணர்த்தி அவர்கள் ஆசைப்படுவது எல்லாமே தேவையானவை அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும்.
  10. கிரேக்க தத்துவ மேதை எப்பிகூரஸ் என்பவர் , 'போதும்' என்ற வார்த்தையை அறியாதவர்க்கு எதுவுமே போதாது’ என்கிறார். மனித மனம் எப்போதும் இன்னும் சிறந்ததை, பெரியதை தேடிச்  செல்லக் கூடியதுதான் என்றாலும், இருப்பதை கொண்டு திருப்தி அடைய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம். ஆசைப்படுவதை எல்லாம் அடைய நினைத்தால் மகிழ்ச்சி பாலைவனச் சோலையாகிவிடும்.

குழந்தைகளுக்கு நிலையான மகிழ்ச்சியை தரக் கூடியவை பெற்றோர்களிடமிருந்து கிடைக்க கூடிய அன்பு, ஏற்பு, பாதுகாப்பு ஆகியவை தான். இவை எத்தனை கோடி விலை கொடுத்தாலும் எந்த கடைகளிலும் கிடைக்காதவை. இந்தியாவை வல்லரசாக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும் அதை நல்லரசாக்குவது என்பது எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும் பெற்றோர்களின் கைகளில்தானே உள்ளது? எனவே பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். அதீத அன்பும் ஆபத்தானதே. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சல்லவா!

- பிரியசகி

- ஜோசப் ஜெயராஜ்   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com