ஸ்ட்ரெஸ் நல்லதாம்... எப்போ தெரியுமா?

மன அழுத்தம், இதை எல்லா வயதினரும், பல அன்றாட அனுபவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’
ஸ்ட்ரெஸ் நல்லதாம்... எப்போ தெரியுமா?

மன அழுத்தம், இதை எல்லா வயதினரும், பல அன்றாட அனுபவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று குறிப்பிடுவோம். இதனால் நமக்கு நன்மை, தீமை இரண்டும் நேரலாம். எந்தத் தருணங்களில் இது நமக்கு உதவுகிறது என்பதை முதலில் பார்வையிட்டு, பிறகு எப்பொழுது பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

யூஸ்ட்ரெஸ்’: ஜமாய்க்க வைக்கும் ஸ்ட்ரெஸ்

ஒன்றிற்காகக் கடினமாக உழைத்து, அல்லது தீவரமாக தயார் செய்து, செயல் படுத்தும் நேரங்களில், நாம் அனுபவிப்பது நன்மை தரும் ஸ்ட்ரெஸாகும். நம் தினசரி வாழ்வில் நிகழ்கின்றதுதான். ஓர் சில உதாரணங்கள்: நமக்குப் பிடித்த ஒருவருக்குப் பிறந்த நாள் என்று திடீரென்று ஞாபகம் வர, அவர்களுக்கு உடனடியாக நாமே ஒன்றை தயாராக்கித் தருவது, மற்றவர் முன் பேசுவதற்கு வாய்ப்பு அமைந்ததும், பேசுவதற்கு ஓர் சில நிமிடங்களுக்கு முன்னால், இன்டர்வியூவுக்குப் போகும் முன், விளையாட்டு மைதானத்தில் அந்த ஒரு பாயின்ட் வாங்கும் தருணம், என்று எவ்வளவோ சூழ்நிலைகள் பட்டியலிடலாம்.

இந்த ஒவ்வொரு தருணங்களிலும் ஆவலுடன் காத்திருப்பது நேரும். நமக்குள் ஒரு பரபரப்பு உண்டாகும். ‘நம்முடைய வாய்ப்பு எப்பொழுது வரும்?’, ‘சரியாகச் செய்வோமா?’ என்ற சிறு கேள்விகள் நமக்குள் எழும். இவை எல்லாமே நமக்கு ஆர்வமூட்டும், மறுபுறம் குதுகலமாகவும் இருப்போம். இந்தக் கலவையின் விளைவாக, சவாலைச் சந்திக்க முடியும் என்ற எண்ணம் மேலும் தீவிரமாக இயங்கச் செய்கிறது. வெல்லுவோம் என்று உறதி கொள்கிறோம்.

இது நம்மைத் தயார் படுத்திக் கொள்ள, நல்ல உணர்வுகளை எழுப்பும். இந்த நன்மை தரும் ஸ்ட்ரெஸிற்கு ‘யூஸ்ட்ரெஸ்’ என்ற பெயர். இதில், அதாவது, ‘யூஸ்ட்ரெஸ்’ என்றதில் நேர்மறையான சிந்தனையும் உணர்வும் சூழ்வதால் இதை ‘யூஸ்ட்ரெஸ்’ அதாவது, ‘நல்ல’ ஸ்ட்ரெஸ் என்று அழைப்பதுண்டு. வாட்டும் மன அழுத்தத்திற்கு இடமே கிடையாது!

இதுவே முடியுமோ, முடியாதோ என்று தத்தளித்து, தவித்து, சஞ்சலப் பட்டால், அதனால் வலுவிழந்து, முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டால், அல்ல மிக பதற்றத்துடன் எப்படியோ தேவையானதை செய்து முடித்தால், மனநலப் பிரிவில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ ‘மன அழுத்தம்’ என்போம். ‘யூஸ்ட்ரெஸ்’ நிலைமைகள் இந்தத் திசைக்கு திரும்பினால் மன அழுத்தம் தோன்றலாம். உதாரணத்திற்கு, நுழைவுத் தேர்வு எழுத, பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தயார் படுத்திக் கொள்வது அவசியம் தான். நம் மனப்பான்மை உறுதி, தைரியம் என்று நேர்மறையாக இல்லாமல் பயம், சந்தேகம் என்ற எதிர்மறைகள் நம்மை ஆட்கொண்டால், மன அழுத்தம் தோன்றும்.

போராடுவது - ஓடுவது - உறைவது

மன அழுத்தத்தை தரக் கூடிய சூழ்நிலைகளை, நாம் கையாளும் முறைகளை ஆராய்ச்சியில் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (ஃபைட், Fight). மற்றொன்று, முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடுவது (ஃப்ளைட், Flight). மூன்றாவதாக, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது (ஃப்ரீஸ், Freeze). இந்த ‘Fight-Flight-Freeze’ (ஃபைட்- ஃப்ளைட் - ஃப்ரீஸ்) நாம் சூழ்நிலைகளை கையாளுவதைக் குறிக்கிறது.

சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது, நம் உடல் இரண்டு முக்கியமான ரசாயனங்களான, ஆட்ரினலின், கார்டிஸால் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நமக்கு பலம் அதிகமானது போல் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகு தான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.

சில தருணங்களில் மட்டும், சிறிது நேரம் மட்டும் இப்படி நிகழ்ந்தால், இவற்றால் நன்மையே. ஆனால், தினந்தோறும் எந்த வேலையை எடுத்துக் கொண்டு செய்யும் பொழுதோ, அல்ல அவற்றை ஆரம்பிக்க வேண்டுமே எனத் தோன்றியதுமே, அல்ல இயல்பாகவே ஒன்றைச் செய்வதென்றாலே பதற்றம் ஏற்பட்டு, வெகு நேரத்திருக்கு இப்படி படபடவென இருந்தால், அது மன அழுத்தப் பாதிப்பை ஏற்படுத்தும்.

காரணிகள், நம்முடைய எதிர்பார்ப்புகளினால், கோரிக்கைகளினால், நாம் தனக்காக வகிக்கும் எட்டாத குறிக்கோள்களினால் இந்த மன அழுத்தம் வரலாம். அதே போல், ஒரு இழப்பு நேர்ந்து இருந்தாலோ, ஏதோ நஷ்டம் ஏற்பட்டிருந்தால், போட்டிகளும், மற்றவர்களுடன் நாமே நம்மை ஒப்பிடுவதும் மன அழுத்தத்தின் காரணமாகலாம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் ப்ளாஸ்டீஸிடீயும்

மன அழுத்தத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று உணர்வதற்கு, அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது, பல விதங்களில் தோன்றும்: அசதி, கிடுகிடுப்பு, வியர்வை ஊற்றும், நடந்து கொண்டே இருக்கத் தோன்றும், கையைப் பிசைந்து, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது போன்றவை. மனதளவில், உணர்வுகளில்: சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம். சமூக அளவில், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்று பல வகைகள் உண்டு.

இவற்றால், நம்பிக்கை இழந்து, தோல்வி தான் என்றே முடிவெடுத்து விடக் கூடும். அதனாலேயே கவனம் சிதறி, எதிலும் ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போகும். இது தான் மேலே விவரித்த ஓடிப் போய்விடுவது / உறைந்து (ஃப்ளைட் - ஃப்ரீஸ்) இருப்பது.

இதே நிலைமையில் இருந்து விடுவோம் என்பதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய மூளையின் அமைப்பு அப்படி! இடையூறுகளிருந்து மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. இதைச் சமீபத்தில், ஆராய்ச்சிகளின் மூலமாக, இந்த உருமாறும் தன்மையே நம்மை மேலும் சரி செய்து கொள்ள உதவும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் இந்தச் செயல் திறனை மூளையின் ‘ப்ளாஸ்டீஸிடீ’ (Plasticity) என்று பெயர் இட்டார்கள். நமக்கு ஏதோ ஒன்று நேர்ந்து விட்டால், அதே நிலையில் இருக்க வேண்டியதென்பதே இல்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும்!

இப்படி மீண்டு வர, நமக்கு மன அழுத்தம் எப்பொழுது தோன்றுகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதை நம் உடல் எப்படி எல்லாம் தெரிவிக்கின்றது, நம் மனநிலை எவ்வாறு அதைப் பிரதிபலிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

உடல்-மனம் ஒருங்கிணைப்பு

எப்பொழுதும், உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். உதாரணத்திற்கு, மன அழுத்தத்தில் நாம் பயந்து விட்டால், கை கால் நடுங்கி, நாக்கு உலர்ந்து போய், வியர்வை ஊற்றி என்று நம் உடல் பல விதங்களில் தெரிவிக்கும். மனதளவில், சந்தேகங்கள் எழும், குழப்பம் வளரும்.

அதே போல, ‘யூஸ்ட்ரெஸ்’ உணருகையில், உடலில் பல வகைகளில் தெரிவிக்கும். ஒன்றைச் செய்யப் போகிறோம் என்றால் உடலில் மெய் சிலிர்ப்பு, புன்னகை, ஒரு இடத்தில் இருக்க இருப்புக் கொள்ளாது. மனம் மிக ஆனந்தம் அடையும், புத்துணர்ச்சி பூத்துக் குலுங்கி  தெம்பாக உணருவோம். 

எதுவானாலும் உடல்-மனம் இரண்டின் இணைப்பு உண்டு. அதனால் தான், மன அழுத்தத்திற்கு உடல்-மனம் இரண்டும் ஒருங்கிணைந்த விடைகளைத் தேட வேண்டும்.

மன அழுத்தத்தை எதிர் கொள்ள, தினசரி உடற் பயிற்சியினால், மனமும் சாந்தமாகி, உடலும் வலுவாகும். நடப்பது, நீச்சல், ஓடுவது, விளையாட்டு ஏதேனும் ஒன்றைத் தினம் தவறாமல் 30-40 நிமிடத்திற்குச் செய்தால் நன்மை தெரியும்.

தினந்தோறும் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கொடுப்பவற்றில் சிறிது நேரம் ஈடுபட்டால் அது நலனைக் கூட்டும். தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, நடனம், மற்றவர்களுக்கு உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டு, செய்ய வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், பள்ளிகளில், முதியோர், அனாதை இல்லங்களில் இருப்பவருக்கு நம் திறன்களை கற்றுத் தரலாம். இப்படி, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வதால், நமக்கும் நலன், மன நிறைவும் ஏற்படும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும். அதில் வரும் தெம்பினால், சந்திக்கும் இன்னல்களுக்கு விடை கிடைக்கும்! இப்படியெல்லாம் செய்தால் மன அழுத்தம் நமக்கு நமை தருவதாக மாறும்!

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com