மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக எளிய தமிழ் நூல்கள்!

தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட  தமிழ்நாட்டில்
மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக எளிய தமிழ் நூல்கள்!

தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட  தமிழ்நாட்டில்,  பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் தமிழ்ச் சொற்களை சரியாகப் படிக்கவும், எழுதவும் தடுமாறுகிறார்கள் என்பதும் அதிகரித்து வருகிறது. 

நெருக்கடியான இந்தச் சூழலில் 'மெல்லக் கற்கும் குழந்தைகள்' (slow learners) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் குழந்தைகளுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே, எளிய முறையில் தமிழ் கற்கும் வகையிலான மூன்று சிறு பாடநூல்களை உருவாக்கியிருக்கிறார் தருமபுரியைச் சேர்ந்த தமிழ் அறிஞர் நெடுமிடல்.

தற்போது 72 அகவையை நிறைவு செய்திருக்கும் நெடுமிடல், இளங்கலை அறிவியல் (கணிதம்) பட்டப்படிப்பு முடித்தவர். தண்டராம்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து,  ஓராண்டில் அப்பணியில் இருந்து வெளியேறினார்.  தொடர்ந்து தேவநேயப் பாவாணரின் "முதல் மொழி' மற்றும் 'தேனமுதம்' ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு, சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், கடத்தூருக்கே திரும்பி திருவள்ளுவர் "பொத்தக நிலைய'த்தைத் தொடங்கியுள்ளார் (ஏடுகளாக எழுதப்பட்டவற்றைப் "பொத்தல்' போட்டு நூலால் பிணைத்ததனால் அது 'பொத்தகம்' ஆனது என விவரிக்கிறார் நெடுமிடல்). 

1999-இல் எளிதாகத் தமிழ் கற்பிப்பதற்கான சிறிய அளவிலான பாட நூல்களை தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்காக தயார் செய்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.  நெடுமிடலின் குழந்தைகள் அறிவுத்தென்றல், அறிவுடைநம்பி, செல்லக்கிளி ஆகியோரின் பெயரில் இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

'26 எழுத்துகளைக் கொண்ட ஆங்கில மொழியைக் கற்பித்தல் எளிது,  247 எழுத்துகளைக் கொண்ட தமிழைக் கற்பித்தல் கடினம் என்பதை மாற்றி, தொடக்கத்தில் அடிப்படையான வெறும் 18+18 எழுத்துகளைக் கொண்டு மிகச் சுலபமாக 700 சொற்களைக் கற்றுத் தர முடியும் என்பதே எனது கருவி' என்கிறார் நெடுமிடல்.

எடுத்துக்காட்டாக, எளிய வடிவமைப்பைக் கொண்ட "ட', "ப', "ம' ஆகிய மூன்று எழுத்துகளுடன் அவற்றின் புள்ளி வைத்த எழுத்துகளையும் சேர்த்து முதல் பாடமாகச் சொல்லித் தரும்போது,  படம், மடம், பட்டம், மட்டம் ஆகிய சொற்களை எளிதாக எழுத்துக் கூட்டிப் படிக்கப் பழக்கவும்,  எழுதப் பழக்கவும் முடியும். அது ஆழமாக மூளையில் பதிவாகும், எக்காலத்திலும் மறக்காது; அழியாது என்றும் விவரிக்கிறார் அவர்.

அடுத்து 'வ', "ச' ஆகிய எழுத்துகளைச் சேர்த்தால் வடம், வட்டம், சட்டம், சமம், வம்சம், வசம், மச்சம், சம்பவம், பப்படம், வட்டப்படம், பட்சம்  ஆகிய சொற்களை எளிதாக எழுதவும், படிக்கவும் பழக்க இயலும். 

இப்படியாக அடிக்கடி புழக்கத்தில் உள்ள எழுத்துகள், சொற்களில் தொடங்கும் இவரது நூல்கள், பிறகு மூன்றாம் நூலில் முழுமையான தமிழ்ப் பாடநூலாக நிறைவடைகிறது.

சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியினரும், தனிப்பயிற்சி நிலையத்தினரும் இவற்றை வாங்கி மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனராம்.

'தமிழ்நாட்டரசு தற்போது பள்ளிப் பாடநூல்களை மாற்றி எழுதிவரும் இச் சூழலில், எளிமையான இக் கருவிகளையும் துணை நூலாக இணைத்துக் கொள்வதானால், எவ்வித எதிர்பார்ப்புமின்றி பதிப்புரிமையை அரசுக்கு வழங்கவும் தயாராக இருக்கிறேன்' என முடிக்கிறார் நெடுமிடல். 

தமிழ் மீது தணியாப் பெருங்காதல் கொண்ட, வயதால் முதிர்ந்த தமிழறிஞர் ஒருவரின் எதிர்பார்ப்புகள் வசப்பட வேண்டும். அதற்கு அரசும், தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோரும், ஆர்வலர்களும் துணை புரிய வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com