சூர்யாவின் சிக்ஸ் பேக் சீக்ரெட்

ஒரு மனிதனின் நலமான வாழ்வில், ஆரோக்கியம் என்பது முக்கியமான பங்கினை வகிக்கிறது
சூர்யாவின் சிக்ஸ் பேக் சீக்ரெட்

ஒரு மனிதனின் நலமான வாழ்வில், ஆரோக்கியம் என்பது முக்கியமான பங்கினை வகிக்கிறது. 

ஒருவரை நேரில் பார்த்தாலும் சரி, அவருடன் ஃபோனில் பேசினாலும் சரி, நாம் கேட்கும் முதல் கேள்வியே 'சௌக்கியமா?' என்பதாகத்தான் இருக்கும். இன்றைய நாட்களில், ஆண்கள், பெண்கள் இருவருமே ஆரோக்கியத்துடன், உடல் கட்டமைப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஆண்கள் பெரிய தொப்பையுடன் இருப்பதை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களே விரும்புவதில்லை. அதேபோல், பெண்கள் ஊளைச் சதையுடன், இடுப்பில் டயர்களுடனும், குதிர் போன்ற உடம்புடனும் இருப்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களே விரும்புவதில்லை. 

தங்களை ட்ரிம் ஆக வைத்துக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஜிம்மிற்குக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். சாதாரணமானவர்களே இப்படி என்றால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட வெள்ளித்திரை நட்சத்திரங்களின் தேக பராமரிப்பு எப்படி இருக்கும்.? 

என்னங்க சுத்தி வளைக்கிறீங்க? சப்ஜெட்டுக்கு வாங்க என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது. இதோ வந்து விட்டேன். எல்லாம் நம் சினிமா உலக மார்க்கண்டேயன் சிவகுமாரின் மகன் சூர்யாவைப் பற்றிதான். 

அட்டகாசமாய், அனாயசமாய், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருடைய மனதிலும் சம்மணம் போட்டு அல்லவா உட்கார்ந்து இருக்கிறார். 

அதற்கு முக்கியமான காரணம், படத்திற்குப் படம் வித்தியாசமான ரோல்களை சவாலாக ஏற்றுக்கொண்டு, நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு,படத்திற்கு வெற்றியை ஈட்டித் தருவதுடன், தன் பங்கிற்கு அமோக ரசிகர்களையும் அல்லவா சேர்த்துக்கொண்டு விடுகிறார்!

அடுத்ததாக, விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் முடியும் கட்டத்தில் உள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தில், செந்தில்,  ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

வித்யாசமான படங்களைத் தரும் நம்ப சூர்யா, இதை, காமெடி படமாகக் கொடுக்கிறார். பிசியான ஷெட்யூலுக்கு நடுவே,  தினமணி டாட் காமிற்காக சில நிமிடங்கள் ஒதுக்கினார். 

ஒரு படத்தில் பார்த்த கெட் அப்பை அடுத்த படத்தில் பார்க்க முடிவதில்லை. ட்ரிம்  ஹீரோ, ஒல்லி ஹீரோ, குண்டு ஹீரோ என்று உடல் கட்டமைப்பு மாறி மாறி இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? அவர் அனுசரிக்கும்  டயட் சார்ட் பற்றியும் உடற்பயிற்சி பற்றியும் கேட்டோம். 

‘நான் வியந்து ரசிக்கும் முதல் கதாநாயகன் என் அப்பாதான். எனக்கு அவரின் உடல்வாகு என்று பலர் நினைக்கிறார்கள். தவறில்லை. ஆனால் முக்கியமாக நாம் உட்கொள்ளும் உணவு, மேற்கொள்ளும் உடற்பயிற்சி இவற்றின் மூலம் நம் சரீரத்தை நம் விருப்பப்படி ஷேப் செய்து கொள்ள முடியும். 

எனக்கு ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும். சாப்பிட முடிவதில்லை. ஏனென்றால் நடிக்கவென்று வந்துவிட்டால் வெயிட் போடும் பதார்த்தங்களை ஒதுக்க வேண்டியதாகிறது. அதுவும் என்னுடைய உடற்பயிற்சியாளர், அல்காஸ் ஜோஸஃப் இருக்கின்றாரே, ரொம்ப ஸ்ட்ரிக்ட். 

காலையில் முதலில் கார்டியோ சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி, பிறகு ஒன்றரை மணி நேரம் ஏரோபிக்ஸ் மற்றும் தசை நார்களுக்கு வலுவூட்டும் பயிற்சிகள் ஆகியவைகளை நான் செய்தே தீரவேண்டும். ஒவ்வொரு நாளும், செய்யும் உடற்பயிற்சியின் ஷெட்யூல் மாறும். 

வழக்கமாக, ஜாகிங், ஸ்விம்மிங் போவேன். ஜோவிற்கு யோகா பிடிக்குமாதலால், மனைவிக்காக யோகா. 

உடற்பயிற்சி முடிந்த பிறகு, தசைகளுக்கு உரமிட அதிகமாக புரதச்சத்து உட்கொள்ள வேண்டும். அதனால், காலை உணவிற்கு பழங்கள் மற்றும் ஆறு அல்லது ஏழு முட்டைகளின் வெள்ளைப்பகுதியை மட்டும் சாப்பிடுவேன். 

நான் பொதுவாகவே ஜெனரல் மோட்டார் டயட் ப்ளானின் படிதான் உணவு உட்கொள்வேன். 

முதல்நாள்... வாழைப்பழம் தவிர்த்து இதர பழங்கள் மட்டும். இதில் தர்பூசணி அடங்கும். 

இரண்டாம் நாள்... சிற்றுண்டிக்கு வேக வைத்த உருளைக்கிழங்குகள் மட்டும். மற்ற வேளைகளில் காய்கறிகள்  மட்டும். 

மூன்றாம் நாள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்த்து மற்ற கறிகாய், பழங்கள் மட்டும். 

நான்காம் நாள், வாழைப்பழங்கள், பால் மட்டும். 

ஐந்தாம் நாள், தக்காளி மற்றும் சிக்கன் மட்டும். 

ஆறாம் நாள், சிக்கன் மற்றும் காய்கள் மட்டும். 

ஏழாம் நாள், பிரவுன் ரைஸ் உடன் காய்கறிகள் மட்டும். 

நான், எண்ணை பதார்த்தங்களை உண்பதில்லை. டயடீஷியன் அறிவுரை இல்லாமல் பால் சம்பந்தப்பட்ட ஐட்டங்களை சாப்பிடுவதில்லை. மைதா நிச்சயமாக உணவில் கிடையாது. உடலிலுள்ள நச்சுக்கழிவுகள் வெளியேற, நிறைய தண்ணீர் குடிப்பேன். வாரத்தில் ஒரு நாள் உப்பைத் தவிர்த்து விடுவேன். 

இந்தி நடிகர் அமீர்கான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதைப் பார்த்து விட்டு தான், நானும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டேன். அதற்கு எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்பட்டது. 

ஃபிட்னஸ் என்பது அதுவும் முக்கியமாக நடிகர்களுக்கு  ஈஸியான சமாசாரம் இல்லை. 

வாசகர்களுக்கு ஒரு முக்கியமான சமாசாரம். சூர்யா சாப்பிடுகிறார் என்று நீங்களே உங்கள் டயட்டை மாற்றிக்கொள்ளாதீர்கள். அவரவர் உடலுக்கு எது ஒத்துப் போகுமோ அதைத் தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்.’ என்று முடித்தார். 

நாமும் வாசகர்களுக்காக, தன் ஃபிட்னஸ்ப் சீக்ரெட்டைப் பகிர்ந்து கொண்ட சூர்யாவுக்கு நன்றி தெரிவித்ததுடன், படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் கூறிவிட்டு விடை பெற்றோம். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com