நினைத்த காரியத்தை செய்ய முடியாதபோது!

கிளினிக்கல் சைகாலஜி ஸ்பெஷலிஸ்ட் எஸ்.வந்தனாவின் கேள்வி-பதில் பகுதிக்கு ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தன.
நினைத்த காரியத்தை செய்ய முடியாதபோது!

மன நலம் காப்போம் - 1
கிளினிக்கல் சைகாலஜி ஸ்பெஷலிஸ்ட் எஸ்.வந்தனாவின் கேள்வி-பதில் பகுதிக்கு ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தன. இன்னமும் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கு எஸ்.வந்தனா இந்த வாரம் முதல் பதில் அளிக்கிறார்: 

எனக்கு முதல் குழந்தை பிறந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நான் இரண்டாம் முறையாக தாய்மை அடைந்திருக்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் அடைய என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுவீர்களா?
- பவானி மனோன்மணி, 
பாரதிபுரம்.
 
கர்ப்ப நிலை என்பது தாய்க்கும், அவர்களின் குழந்தைக்கும் முக்கியமான தருணமாகும். 

ஏனென்றால், அந்தப் பருவத்தில்தான் குழந்தை உடல் ரீதியாகவும் நன்கு வளர்ச்சியை  தொடங்கும். கர்ப்ப நிலையை மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கலாம்.

அதில் முதல் மூன்று மாதங்கள் உடல் சார்ந்த வளர்ச்சிகள் நடைபெறும். அடுத்த மூன்று மாதத்தில் உடல் வளர்ச்சி மற்றும் மன ரீதியாக வளர்ச்சிகள் நடைபெறும். இது உங்களுக்கு இரண்டாவது பிரசவம் என்பதால் உங்களிடம் பதட்ட நிலை சற்று குறைவாகவே இருக்கும். எனவே இந்த நிலையைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியில் கவனத்தை கொண்டீர்களேயானால் நீங்கள் நினைத்ததை விட உங்கள் பிரசவம் சுலபமாக அமைய வாய்ப்புகள் உள்ளது. உங்களின் புலன்களைப் பயன்படுத்தி தங்களை உற்சாகமாக மாற்றக்கூடிய காரியங்களில் ஈடுபடுதல் வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தீர்களேயானால் உங்களின் பிரசவத்திற்கு மிக உதவிகரமாக அமையும். 

எங்கள் இளைய மகன் வயது 29. அவனுக்கு 13 வயதில் பள்ளிக்கூடத்தில் வலிப்பு வந்தது. பள்ளியில் இருந்து டி.சி கொடுத்துவிட்டார்கள். கடந்த எட்டு ஆண்டுகளாக சைக்யாட்ரி டாக்டரிடம் காண்பித்தோம். 5 ஆண்டுகளாக மூளை நரம்பியல் டாக்டரிடம் காண்பித்து வருகிறோம். மூளை குறைபாடு எப்படி கண்டுபிடிப்பது? மருந்து மாத்திரை தவிர வேறு சிகிச்சை உள்ளதா? திருமணம் செய்து வைக்கும்படி அடம் பிடிக்கிறான். அவனுக்குத் திருமணம் செய்யலாமா? மதுரையில் தங்களைப்போன்ற கிளினிக்கல் சைக்காலஜி நிபுணர்கள் இருந்தால் முகவரி தருவீர்களா?
- கே.வெங்கடேஷ், மதுரை.

வலிப்பு நோய்களில் பல வகை உள்ளது. அதில் உங்கள் மகனுக்கு எந்த மாதிரியான வலிப்பு நோய் உள்ளது என்பதை நீங்கள் விவரமாக கூறவில்லை. தற்போது அந்த வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என்பதையும் நீங்கள் கூறவில்லை. நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சையை தவிர்த்துக் கொள்ளாமல் அதனுடன் தகுந்த உளவியலாளரை(சைக்கார்டிஸ்ட்) அணுகி அவரின் ஆலோசனைப்படி செயல்படுதல் வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவரின் மூளை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்... நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். தற்போதைய மூளை வளர்ச்சி எவ்வாறாக உள்ளது என்பதை அறிந்த பின்பு உளவியல் சார்ந்த மேல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

என் மூத்த மகன் வயது 30. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னையில் 5 வருடம் அலைந்தான். சேமித்த பணத்தையும் இழந்து, வாய்ப்பும் இல்லாமல் கஷ்டப்பட்டு திரும்பி வந்தான். இப்போது பைத்தியம் போல பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறான். இதனால் அவனுக்குத் திருமணம் செய்ய பெண் தர மறுக்கிறார்கள். அவனை எப்படி குணப்படுத்துவது?
- வாசகி, திருவண்ணாமலை.

பெரும்பாலும் மனிதர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத போது மன  உளைச்சலுக்குத் தள்ளப்படுவார்கள். அதேபோல் உங்கள் மகனும் அவர் நினைத்த  இலக்கை அடைய முடியாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரின் இந்த நிலையை முதலில் நீங்கள் புரிந்து கொண்டும், ஏற்றுக்கொண்டும் அவருக்கு ஆதரவாக இருத்தல் வேண்டும். பின்பு அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறாக உள்ளது என்பதை அறிதல் வேண்டும் உதாரணமாக, அவரின் தூக்கம் பற்றியும், பசியைப் பற்றியும், அவரின் விருப்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அந்த மாற்றம் 2 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நீடித்தால் தகுந்த உளவியல் ஆலோசகரை அணுகி  அவரின் ஆலோசனைப்படி செயல்படுதல் வேண்டும். அவரின் மன நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்பு திருமணத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்தல் நல்லது. 

எனக்கு வயது 80. கடந்த ஒரு வருடமாக மூட்டுவலி உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல், வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். மற்றபடி, எனக்கு வேறந்த பழக்கங்களும் கிடையாது. எனது அன்றாடப் பணிகளை தொய்வின்றி செய்துவருகிறேன். இருந்தும் கடந்த ஒரு வருடமாக தூக்கம் சரிவர இல்லை என்பதே பெரிய குறை. அப்படியே தூக்கம் வந்தாலும், இடையே தூக்கம் கலைந்தால் திரும்ப உறக்கமே வருவதில்லை.
- சு.நடராஜன், பழனி.

உங்களுக்கு மூட்டு வலி உள்ளது என கூறி உள்ளீர்கள். முதலில் மூட்டு வலியின் காரணமாக உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் தக்க ஃபிசியோ அல்லது பிற மருத்துவரை அணுகி சரியான மூட்டுவலி சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே உங்கள் வலியினாலும் கூட தூக்கம் பாதிக்கப்படலாம்.

தூக்கம் மன பிரச்னையில் மட்டும் பாதிக்கப்படுவது அல்லது உடல் பிரச்சனையாலும் பாதிக்கும். மேலும் உங்கள் உடலின் முழு மருத்துவ பரிசோதனை செய்து எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக உடல் அளவில் உள்ளீர்களா என அறிய வேண்டும். 

இவை அனைத்தும் அறிந்த பின் தூக்கம் வரவில்லை என்றால் மனநலம் சார்ந்த வேறு பிரச்னை ஏதாவது உள்ளதா? தனிமை, உணவு உட்கொள்ளும் பழக்கத்தில் மாறுபாடு போன்றவை என அறிந்துகொள்ளுங்கள். 

இதைத் தவிர்த்து மன அளவில் உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் மேலும் அதைப் பற்றி விவரத்துடன் கடிதம் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு தக்க முறையில் பதில் அளிக்கப்படும். 
(பதில்கள் தொடரும்) 
- ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com