ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆசையா?

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா டுடே  வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில்
ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆசையா?

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா டுடே வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும், தாமதமாய் திருமணம் செய்து கொள்ளும்  தம்பதிகளில் சிலர்  40  வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமம் என்று கருதி சொந்தமாய் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவிர்த்து விட்டு காப்பகங்களில் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து அதிகாரபூர்வமாக தங்களது வாரிசாக ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள் எனும் செய்தியை  கள ஆய்வுச் சான்றுகளோடு குறிப்பிட்டிருந்தார்கள் .

இவர்களைப் போல அல்லாது சில தம்பதிகளுக்கு மரபியல் காரணங்கள், விபத்து, அல்லது நோய் காரணமாக குழந்தை பேறின்மை அவர்களது வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயமாகி  இருக்கக் கூடும் அவர்களுக்கெல்லாம், தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் எனும் ஆசை இருப்பின் அவர்கள் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு ரத்த உறவிலோ அல்லது காப்பகங்களில் இருந்தோ  ஒரு குழந்தையை தத்தெடுத்து  வளர்ப்பது மட்டுமே. ஒரு குழந்தையை நமக்கே நமக்கென்று தத்தெடுத்து வளர்ப்பது என்பது சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் போகிற போக்கில் காண்பிப்பது போல அத்தனை எளிதான காரியமில்லை.

சமீபத்திய வருடங்களில் ஆதரவற்ற குழந்தைகள் மட்டுமல்லாது பொதுவாக பிறந்த குழந்தை முதல் 15  வயது வரையிலான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் கணக்கில் கொண்டு அரசு இந்து தத்தெடுத்தல் மட்டும் பராமரிப்பு சட்டங்களை 2010 ஆண்டில் முன்பு எப்போதையும் விட மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் தத்தெடுப்பே முறையான தத்தெடுத்தல் என உயர் நீதி மன்றம் அங்கீகரிக்கும் என்பதால் தினமணி டாட் காம் வாசகர்களுக்கு தத்தெடுத்தலைப் பற்றிய எளிய அறிமுகம் மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற தத்தெடுத்தல் மையங்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறோம்.

தத்தெடுத்தல் என்றால் என்ன?

சட்டப்படி குழந்தையை தத்துக் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தை அதன் தத்துப் பெற்றோருக்கு அதிகாரபூர்வ வாரிசாகிறது. தத்துக் கொடுக்கப்பட்ட பிறகு குழந்தை அதன் ரத்த தொடர்புடைய பெற்றோருக்கு உரிமையானதல்ல. குழந்தை மீதான உரிமை அதன் தத்துப் பெற்றோர்களுக்கே முழுமையாக அளிக்கப்படுகிறது. இதனால் குழந்தை வளர்ந்த பிறகு தனது வளர்ப்புப் பெற்றோர்களின் சொத்துகளோடு சொந்தப் பெற்றோர்களிடம் சென்று விடக்கூடும் எனும் சந்தேகத்திற்கு இடமில்லை. தத்தெடுப்பது  தத்துக்குழந்தை மற்றும் தத்துப் பெற்றோர் இருவருக்கும் பரஸ்பர நன்மை தரக்கூடிய விசயமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப சட்ட விதிகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன

யாரெல்லாம் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்?

  • பல வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
  • விபத்தாலோ மருத்துவ காரணங்களாலோ தம்பதிகளில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்தவர்கள்.
  • திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ விரும்பும் பெண்களும் ஆண்களும்.
  • சொந்தக்குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது சுய விருப்பத்தின் பேரில் அநாதரவாக இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வளிக்க விரும்பும் சேவை மனப்பான்மை கொண்ட நபர்கள்.
  • குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது கடந்த பிறகு தாமதமாக திருமணம் செய்து கொள்வோர்.
  • சொந்தக்குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது புகழ் மற்றும் பணத்தின் மூலம் தத்துக் குழந்தைகளுக்கும் குடும்ப அமைப்பை  உருவாக்கித் தர இயலும் என்ற சமூக ஆர்வம் கொண்ட பிரபலங்கள்.  

போன்றோர் தத்தேடுத்தலில் ஆர்வமாக இருக்கிறார்கள் .

யாரெல்லாம் தத்துக் கொடுக்கப்படுகிறார்கள்?

  • சுனாமி, பூகம்பம், போன்ற இயற்கைச் சீரழிவுகள் மற்றும் மதக் கலவரங்களால் அநாதரவாக்கப் பட்ட குழந்தைகள்  
  • முறையற்ற வழியில் பிறந்து அரசின் தொட்டில் குழந்தை காப்பகங்களில் அடைக்கலமான குழந்தைகள்,
  • தாய், தந்தையரை இழந்து உறவினர்களாலும் புறக்கணிக்கப் பட குழந்தைகள்
  • வறுமை மற்றும் ஏழ்மையால் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் சொந்தப் பெற்றோர்களால் தத்துக் கொடுக்கப்படும் குழந்தைகள்

போன்றோர் அரசின் பதிவு பெற்ற சேவை மையங்கள் மற்றும் காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்தக்குழந்தைகளுக்கு ஒரு குடும்ப அமைப்பை ஏற்படுத்தி தரும் வண்ணம்  குழந்தையற்ற பெற்றோர்களுக்கு இந்திய தத்தெடுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டு உரிய விசாரணைகளின் பின் அரசே இவர்களை தத்துக் கொடுக்க முன்வருகிறது, ஆனால் கடந்த வருடங்களில் தத்தெடுத்தலில் நடைபெற்ற சில முறைகேடுகள் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் இந்திய தத்தெடுத்தல் சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்திய தத்தெடுத்தல் சட்டத்தின்படி கேட்கப்பட்ட முழு விவரங்கள் அளிக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட தகவல்கள் நிஜம் தானா என்று ஒன்றிற்குப் பலமுறை ஊர்ஜிதம்செய்யப்படுகின்றன, அடுத்து குழந்தை வளரும் காப்பகத்தின் ஒப்புதலின் பிறகு சட்டப்படி தத்தெடுக்கும் வழக்கு உயர்நீதி மன்றத்தின் கவனத்திற்கு செல்கிறது,

அங்கே தத்தெடுத்தல் உறுதி செய்யப் பட்டு  உயர் நீதி மன்றம் அறிவித்த பிறகே தத்தெடுத்தல் முழுமையாகும். இதனால் எங்கேயோ கண்டெடுத்த குழந்தைகளை வளர்த்தல், ஆதரவற்று அடைக்கலமான குழந்தைகளை வளர்த்தல் என்ற பெயரில் சட்ட பூர்வமாக தமக்கு உரிமையற்ற குழந்தைகளை சேவை மையங்களில் வளர்க்கிறோம் என்று பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தும் முறைகேடான அங்கீகரிக்கப்படாத சேவை நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுகின்றன .

 உதாரணங்கள் ... 
 
தத்தெடுத்தல் அல்லது தத்துக் கொடுத்தல் என்பது தமிழ் கலாச்சாரத்திற்கு புதிய விஷயம் ஒன்றுமில்லை நகரத்தார் வழக்கங்களில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாய முறை தான், காரைக்குடி நகரத்தார் பாரம்பரியப் படி திருமண வயதில் இருக்கும் பெண்ணையோ ஆணையோ கூட தத்துக் கொடுத்தலும் தத்தெடுத்தாலும் அவர்களது சமுதாய  முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட விஷயமே. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கவிஞர் கண்ணதாசனை கூறலாம்.

நமது இந்தியாவில் புராண காலம் தொட்டே தத்தெடுத்தலும் தத்துக் கொடுத்தாலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது .இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள் கிருஷ்ணனும், கர்ணனும். கிருஷ்ணனை ஹம்சன் கொன்று விடுவான் என்று அஞ்சி அவனது அப்பா வசுதேவர் கோகுலத்தின் அரசன் நந்தகோபனுக்கு தத்துக் கொடுக்கிறார். மகாபாரதத்தின் இறுதி வரை கிருஷ்ணன் நந்தகோபனின் சொத்தான  துவாரகைக்கு மன்னனாகவே இருந்து இறுதியில் விதியின் பயனாய் ஒரு வேடனின் கவண் பட்டு பிறவி முடிப்பதாக கதையில் சொல்லப்படுகிறது. வாசுதேவன் பெற்றெடுத்த பிள்ளை கிருஷ்ணன் ஆனாலும் அவன் தன் ரத்த உறவு கொண்ட தந்தைக்கு மகனாக அவரோடு செல்லவில்லை. ஆயர்குல அரசன் நந்தகோபனுக்கு தத்துக் கொடுத்ததால் கடைசி வரை கிருஷ்ணன் ஆயர்களின் தலைவனாகவே இருந்து யசோதைக்கும் நந்தகோபனுக்கும் அதிகாரபூர்வ மகனாக நிரூபணம் ஆகிறான். தேவகிக்கோ, வசுதேவனுக்கோ இருக்கும் உரிமையைக்காட்டிலும் யசோதைக்கும் நந்தகோபனுக்கும் கிருஷ்ணன் மீதிருக்கும் உரிமை அதிகாரபூர்வமானது என்பதை கிருஷ்ணனின் கதை மூலம் நாம் உணரலாம். இந்துக்களின் தத்தெடுத்தலை, அதன் விதிகளை, சட்டங்களை மிக எளிதாக உணர்த்திச் செல்லும் இதிகாசக் கதை இது .

கிருஷ்ணனைப் போலவே கர்ணனையும் சொல்லலாம். கர்ணன் பாண்டவர்களின் அன்னையான குந்தியின் முதல் புதல்வன்  ஆனால் அவன் குந்தியின் மகனாக ஒருநாளும் அடையாளம் காணப்படவில்லை. குந்தி அவனை ஆற்றில் விட்டதனால் அவனை கண்டெடுத்து வளர்த்த தேரோட்டியே கர்ணனின் அதிகாரபூர்வ தந்தையாகிறார்.

ஆக புராண காலத்திலும் கூட இந்து சட்டங்களின் படி ஒரு குழந்தை அதிகாரபூர்வமாக தத்துக் கொடுக்கப்பட்டால் அதன் ரத்த உறவு கொண்ட பெற்றோர் அந்தக் குழந்தையின் மீதான உரிமைகளை இழக்கிறார்கள்.தத்துக் கொடுத்த பின் குழந்தையின் மீதான முழு உரிமையும் தத்தெடுத்துக் கொண்ட பெற்றோர்களுக்கு என்றாகிறது .

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி ஒரு ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அந்த ஆண் மனநிலை சரியானவராக இருக்க வேண்டும்.

தத்தெடுப்பவருக்கும் தத்தெடுக்கப்படுபவருக்கும் இடையே 15  ஆண்டுகள் வயது வித்யாசம் இருக்க வேண்டும்.கணவனும் மனைவியும் இணைந்து மனமொத்து தத்தெடுக்க முன்வர வேண்டும். இருவரில் ஒருவருக்கு சம்மதம் இல்லையென்றாலும்  தத்தெடுக்க இயலாது.

தத்தெடுக்க விரும்பும் ஆணின் மனைவி மனநிலை சரியில்லாதவராக இருந்தாலோ, துறவறம் மேற்கொண்டு கணவரை விட்டுப் பிரிந்திருந்தாலோ கூட முறையாக அரசு பதிவு பெற்ற சமூக நல வாரியங்களின் உரிய விசாரணைகளின் பின் இந்த ஆணுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிறது

முன்பு திருமணமாகாத ஆண் பெண் குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் 2010  ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில சட்டத் திருத்தங்களின் பின் இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின் படி திருமணம் ஆகாத பிரம்மச்சாரி ஆண் தனக்கென வாரிசை தத்தெடுத்துக் கொள்ள முடியும். தத்தெடுத்த பின் அவர் திருமணம் செய்து கொள்ளும் சூழல் வந்தால் அவர் மணந்து கொள்ளும் பெண் வளர்ப்புக் குழந்தைக்கு அம்மாவாக சட்டத்தில் இடமில்லை. அவர் மாற்றாந்தாய் எனவே அடையாளப் படுத்தப்படுவார்.

தத்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அடுத்த குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் ஆண் குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் இடமில்லை. அவர்கள் ஒரு பெண் குழந்தையையே தத்தெடுக்கலாம். இதே விதமாக முதல் குழந்தை பெண் குழந்தை எனில் அடுத்த குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.

ஆண்களுக்கென்று மேலே சொன்ன விதிமுறைகள் அனைத்தும் இப்போது பெண்களுக்கும் பொருந்துமாறு 2010  ஆம் ஆண்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. இதே விதிமுறைகள் இப்போது தத்தெடுக்க விரும்பும் பெண்ணுக்கும் பொருந்தும்.

இன்று தத்தெடுக்க விரும்புபவர்கள் எவராயினும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்ட விதியின் படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தங்களுக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு தகுதி உள்ளதா என தெரிந்து கொண்டு அவர்கள் அரசின் பதிவு பெற்ற  காப்பகங்கள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் குழந்தைக்காகப் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்,

இங்கே பதிவு செய்து வைத்தாலும் அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத் துறையின் ஒப்புதல் பெற்ற பிறகே தமிழகத்தின் எந்தக் காப்பகங்களில் இருந்தும் இனி குழந்தைகளை தத்தெடுக்க முடியும் எனும் வகையில் தத்தெடுத்தல் சட்டம் இப்போது சற்றே இறுக்கப் பட்டிருக்கிறது. தேவையற்ற முறைகேடுகளை தவிர்க்கவே  இந்த திருத்தம் கொண்டு வரப் பட்டிருக்கிறதாம். தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்களது  விருப்பத்திற்கேற்ற வயதில் குழந்தை கிடைக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும், அதன் பின் அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாம் அளித்து ஊர்ஜிதம் செய்து சட்டப்படி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும், இதன் பிறகு உயர் நீதி மன்ற ஆணையின் பின் தத்தெடுத்தல் செல்லுபடியாகும்.
 
தத்தெடுத்தல் என்பது உணர்வுபூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியே, தத்தெடுப்பதன் மூலம் அந்தக் குழந்தைக்கு ஒரு அன்பான  குடும்பம் அமையும் என்பதோடு தத்துப் பெற்றோர்களுக்கும் ஒரு குழந்தைக்கு அதிகார பூர்வ பெற்றோராகும் ஆசை நிறைவேறும். ஆக தத்தெடுத்தல் என்பது தத்துக் குழந்தை மற்றும் தத்துப் பெற்றோர் என இருபுறமும் பரஸ்பர நலம் நாடும் செயல்  என்பதால் தயக்கமின்றி  நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் குழந்தைகளற்றோர் இருப்பின் தத்தெடுத்தலை ஊக்குவிப்போம்.

தத்தெடுத்தல் சில சுவாரஸ்யத் தகவல்கள் ...

இஸ்லாத்தில் தத்தெடுத்தல் சட்ட விதிமுறைகள்

இஸ்லாத்தில் குழந்தைகளைத் தத்தெடுக்க உரிமை இருந்தாலும் கூட இந்து சட்ட விதிகளைப் போல தத்தெடுத்த குழந்தை தத்தெடுக்கப்பட்ட பெற்றோருக்கு வாரிசு ஆவதில்லை. வளர்க்கும் உரிமை மட்டுமே வழங்கப்படுகிறது , தத்தெடுத்த குழந்தைக்கு அப்பாவாக எப்போதும் அவரது ரத்த உறவைக் கொண்ட அப்பாவே நீடிப்பார். 

அதே சமயம் தத்தெடுக்கப்பட்ட குழந்தை வளர்ப்புப் பெற்றோர் மூலமாக சொத்துரிமையும் கொண்டாட முடியாதாம். தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோர்கள் விரும்பினால் தமது வளர்ப்பு மகனுக்கோ, மகளுக்கோ  உயில் சாசனம் அல்லது மரண சாசனம் மூலமாக சொத்துக்களை எழுதி வைக்கலாம் ,

ஆனாலும் இந்த சொத்துக்களின் மதிப்பானது மூன்றில் ஒரு பங்கை மிஞ்சக் கூடாது என்கிறது  இஸ்லாமியச் தத்தெடுத்தல் சட்டம். அதாவது மூன்று லட்சம் ரூபாய்கள் சொத்துக்கள் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கான சொத்துக்களை மட்டுமே வளர்ப்புப் பெற்றோர் தமது வளர்ப்புக் குழந்தையின் பெயரில் எழுதி வைக்க முடியும்.

தத்துக் குழந்தைகளோடு வாழும் வி.ஐ.பிகள் சிலரை காண்போமா?
 
யாகூ இணையதளம் தத்துக் குழந்தைகளோடு வாழும் பிரபலங்களின் புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டிருந்தது. இதோ உங்களுக்காக  அந்தத் தகவல் இங்கே ... 

மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென்
1994-ஆம் வருடம் மிஸ் யூனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்படும் போது சுஷ்மிதாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, உங்களிடம் நேரமும் போதுமான பணமும் இருந்தால் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் சாதனை என்னவாக இருக்கும் என்று ?!

அதற்கு சுஷ்மிதா அளித்த பதில் நான் சாதனை என்று நம்புவது எனக்கு முழுமையாக மன திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும் விஷயங்களைத் தான், குழந்தைகளால் தான் அப்படியான முழுமையான  சந்தோஷங்களைத் தர முடியும், அதனால் என்னிடம் நிறையப் பணமும் செலவிட நேரமும் இருந்தால் குழந்தைகளுக்காக நான் நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று நம்புகிறேன். அன்றைக்கு சொன்ன பதிலை திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் சுஷ்மிதா,  இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் இன்று நிறைவேற்றி விட்டார்.

பாப் ஸ்டார் மடோனா
 
பாப் இசை உலகின் கனவுக்கன்னி மடோனா ஏற்கனவே சொந்தக் குழந்தைகள்  2 இருந்த போதும் மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.

நிகோல் கிட்மேன் - டாம் குரூயிஸ் ஜோடி
ஆங்கிலப் படம் பார்ப்பவர்கள் எனில் இவர்களைத் தெரியாமலிருக்க முடியாது , பிரபல  ஹாலிவுட் தம்பதிகளான இவர்களுக்கு இரண்டு தத்துக் குழந்தைகள் உண்டு. இவர்களின் விவாகரத்துக்குப் பின்பு குழந்தைகள் இருவரும் டாம் குரூயிசுடன் வாழ்கிறார்கள்.

நடிகை ஷோபனா
 
தேசிய விருது பெற்ற நடிகை ஷோபனா திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வரும் சூழலில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அனந்த நாராயணி என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

நடிகை லட்சுமி
 
ஏற்கனவே மகள் ஐஸ்வர்யா இருந்த போதும் இரண்டாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் நடிமை லட்சுமி.
 
நடிகை சீதா
 
இயக்குனர் & நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்குமான விவாகரத்தின் முன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த போதும் இவர்கள் இருவரால் தத்தெடுக்கப் பட்ட ஆண் குழந்தை ராக்கி என்ற ராதாகிருஷ்ணன், இவர் இப்போது வசிப்பது அவரது அம்மா சீதாவுடன் என்பதாக செய்தி.
 
தத்தெடுத்தலையும் தத்துக் கொடுத்தலையும் ஊக்குவிப்போம்! தத்தெடுத்தல் குறித்த மேலதிக தகவல்களுக்கு அரசு  சமூக நலத்துறையின் கீழ்காணும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுக்குத்  தொடர்பு கொள்ளலாம்.

தமிழக அரசு
ஓல்ட் எஞ்சினியரிங் காலேஜ் காம்ப்ளெக்ஸ் 
சேப்பாக்கம் சென்னை -600005
தொலைபேசி எண் : +91-44-28545745

அரசின் பதிவு பெற்று உள்நாடு  மற்றும் வெளிநாடுகளுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்க உதவும் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிகளின்  பெயர் மற்றும் முகவரிகள்

1. கில்டு ஆப் சர்வீஸ்

32 ,காசா மேஜர் ரோடு ,

எக்மோர்,சென்னை -600008 

தொலைபேசி எண் - 28194899/ 28195126

(உள் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கும் அங்கீகாரம்)

2 கர்ணப்ரயாக் ட்ரஸ்ட் 

ராஜகிருஷ்ணா ராவ் சாலை,ஆழ்வார்பேட்,சென்னை -600  018

தொலைபேசி எண் - 24355182

3. இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிரான்சிஸ்கன் மிசனரீஸ் ஆஃப் மேரி சொசைட்டி   3,ஹோலி அப்போஸ்தல கான்வென்ட், செயின்ட் தாமஸ் மவுன்ட்,             சென்னை -600  016  தொலைபேசி எண் - 22345526

4. கன்கார்டு ஹவுஸ் ஆஃப் ஜீசஸ்

C-23, அண்ணா நகர் கிழக்கு, சென்னை -600 102. 

தொலைபேசி எண் - 26202498

5. கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் ,

No.34, கென்னட் ரோடு ,
மதுரை -625 010. 

தொலைபேசி எண் - 0452 - 2601767

6.ஃபேமிலிஸ் ஃபார் சில்ட்ரன் ,

107 வள்ளலார் ரோடு , போதனூர்  ,
கோவை -641 023.

தொலைபேசி எண் -0422 - 2413235

7. Congregation of the Sisters of the Cross of Chavanod, (SOCSEAD)

P.B.No.395, Old Goods Shed Road,
தெப்பக்குளம் , திருச்சி -2

தொலைபேசி எண் -0431 -2700923/ 2701514

8. கிரிஸ்ட் ஃபெய்த் ஹோம் ஃபார் சில்ட்ரன்

3/91, மேட்டு காலனி , மணப்பாக்கம் , சென்னை -600 116. 

தொலைபேசி எண் - 54494647

9. பால மந்திர் காமராஜ் ட்ரஸ்ட் ,

8, ஜி.என்.செட்டி ரோடு , தி.நகர் சென்னை -600 017. 

 தொலைபேசி எண் - 28267921

(இந்தியாவுக்குள் மட்டும் தத்துக்கொடுக்கப்படும்)

10. செயின்ட் ஜோசப்ஸ் சாரிட்டி இன்ஸ்டிடியூட் ,

அடைக்கலபுரம் , தூத்துக்குடி மாவட்டம் . 

தொலைபேசி எண் - 04639 - 245248

11.மிசனரிஸ் ஆஃப் சாரிட்டி ,

நிர்மலா சிசு பவன் ,
79, வெஸ்ட் மாதா சர்ச் ரோடு , ராயபுரம் , சென்னை -600 013. 

தொலைபேசி எண் -25956928

12. ஆனந்த ஆசிரமம் ,

தேன்கனிக் கோட்டை ரோடு 
H.C.F.போஸ்ட் , மதிகிரி , ஓசூர் -635 110.
தருமபுரி .

தொலைபேசி எண் -04344 - 262324

13. கஸ்தூரிபா ஹாஸ்பிட்டல்  

காந்திகிராம் -624 302.
திண்டுக்கல் மாவட்டம் . 

தொலைபேசி எண் - 0451 - 2452328

14. கிளாரிட்டன் மெர்ஸி ஹோம் ,

அழகு சிறை ,
பொன்னமங்கலம் போஸ்ட் , திருமங்கலம் ,
மதுரை மாவட்டம் . 

தொலைபேசி எண் - 04549 - 208921

15. அவ்வை வில்லேஜ் வெல்பேர் சொசைட்டி

கீழ் வெல்லூர் , நாகபட்டினம் மாவட்டம் . 

தொலைபேசி எண் - 04385- 248998

16. திருநெல்வேலி சோசியல் சர்வீஸ் சொசைட்டி ,

283/2 A பாபுஜி நகர் ,

ஹோட்டல் ஆர்யாஸ் எதிரில்,

திருநெல்வேலி ஜங்ஷன்

திருநெல்வேலி மாவட்டம் .

தொலைபேசி எண் - 0462- 2321170

17. லைஃப் லைன் ட்ரஸ்ட் ,

8-E, ரகுராம் காலனி,சேலம் . 

தொலைபேசி எண் -0427 - 2317147

18. கலைச்செல்வி கருணாலயா சோசியல் வெல்பர் சொசைட்டி

3/PP1, முகப்பேர் வெஸ்ட் ,
சென்னை -600 058. 

தொலைபேசி எண் - 26257779

19. PEACE (Poor Economy and Children Educational Society),

No.70, 3rd ஸ்ட்ரீட்  , சிவாஜி காலனி , எடையார்பாளையம் போஸ்ட் ,
கோவை -25. 

தொலைபேசி எண் -2405237

20. சரணாலயம்

No. 34,  திருவேங்கட நகர், பால்காட் ரோடு , பொள்ளாச்சி 642 001, கோவை

தொலைபேசி எண் -04259-223321

21. பெத்தேல் அக்ரிகல்சுரல் ஃபெல்லோ சிப்

டானிஷ்பெட்    P.O., சேலம்   636 354.

தொலைபேசி எண் -04290-343322

22. சொசைட்டி ஃபார் ரூரல் டெவலப்மென்ட்  ப்ரோமோசன் சர்வீசஸ் 

437/1,  பசுமை நகர் , நியர்  பச்சேல்  ரயில்வே கேட்  ,திருப்பத்தூர், வேலூர்  .

தொலைபேசி எண் -04179-223317

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com