பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 10  மருத்துவ பரிசோதனைகள்!

நீரிழிவு, இரத்த அழுத்தம், கால்சியம் குறைபாடு, தைராய்டு போன்ற நோய்களால் இவர்கள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நோய் இருப்பதை கண்டறியலாம்.
பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 10  மருத்துவ பரிசோதனைகள்!

இன்றைய நவீன உலகத்தில் ஒரு பெண் பொறுப்புகளை ஏற்று வேலைக்குச் செல்லும் பெண்மணியாகவும், அதே சமயத்தில் ஒரு சிறந்த குடும்ப தலைவியாகவும் இரு பாத்திரங்களையும் ஏற்றுச் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு அவர்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், கால்சியம் குறைபாடு, தைராய்டு போன்ற நோய்களால் இவர்கள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஆகையால் சரியான நேரத்தில் தேவையான சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கத் துணை செய்யும்.  

முக்கியமாகப் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய 10 மருத்துவ பரிசோதனைகள்:

1. உடல் எடை சரிபார்ப்பு:

தனிநபரின் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் அவரது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்டறியலாம். உங்களின் உயரம், எடை ஆகிய இரண்டையும் உங்களது பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் உடலின் பிஎம்ஐ கணக்கிடப்பட்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைத் தெரிவித்துவிடுவார்கள். தேவையற்ற கெட்ட கொழுப்பின் காரணமாக பருமனாக இருப்பது, பல நோய்களுக்கு வழி செய்யும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

2.  ரத்த சோவை பரிசோதனை:

சிவப்பு ரத்த அணுக்களின் அளவு குறைவாக இருந்தால் அது ரத்த சோவை எனப்படுகிறது. சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ரத்தத்தில் பிராணவாயுவின் சுழற்சியை உறுதி செய்யும் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் நீங்கள் விரைவில் பலவீனம் அடைந்து சோர்ந்துவிடுவீர்கள். தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கும் ரத்த சோவை காரணமாக இருக்கலாம்.

3. வைட்டமின் பற்றாக்குறை சரிபார்ப்பு:

இந்திய பெண்களிடையே வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 பற்றாக்குறை பொதுவானது என்கிறது ஒரு ஆய்வு முடிவு. குறிப்பாகக் கற்பமாக இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடிருப்பது பிரசவத்தின் போது சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அதே போல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கால்சியம் சத்திற்கும் வைட்டமின் டி மிகவும் அவசியமான ஒன்று.

4. ரத்த அழுத்தம் பரிசோதனை:

பெண்கள் 18 வயதைக் கடந்த பிறகு குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மன அழுத்தத்திற்கான பரிசோதனையையும் செய்துகொள்வது நல்லது.  

5. ரத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரிபார்ப்பு: 

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 45 வயதைக் கடந்த பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நீரிழிவு நோய் இருப்பதை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வழி செய்யும். அதிலும் முக்கியமாக உங்களுடைய முந்தைய தலைமுறையினருக்கு நீரிழிவு நோய் இருந்தால் இந்தப் பரிசோதனையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். 

6. உடல் கொழுப்பு பரிசோதனை:

இதய நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடல் கொழுப்பு ஆகும். 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அவர்களது உடல் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் பரிசோதனையையும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். 

7. மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை:

இந்த இரண்டு புற்றுநோய்களும் பெண்களின் மரணத்திற்கு மிக முக்கியமான காரணங்கள். அதிகமாக உடலுறவில் ஈடுபடும் பெண்கள் இந்தப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். 30 வயதைக் கடந்த பெண்கள் கட்டாயம் மார்பக புற்றுநோய் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். 

8. எலும்பின் வலிமை சரிபார்ப்பு:

எலும்பின் அடர்த்தி குறைவதால் 65 வயதிற்குப் பிறகு பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுகிறார்கள். கால்சியம் குறைபாடுகளால் நாளடைவில் எலும்பு தேய தொடங்குகிறது, இதனால் மூட்டு வலி உட்பட எலும்பு தொடர்பான பல நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதைப் பரிசோதிக்க டெக்கா ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

9. பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை:

50 வயதைக் கடந்த பெண்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 5 முதல் 10 வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை சிக்மயோடோஸ்கொபி வழியில் செய்துகொள்ள வேண்டும். 

10. தோல் புற்றுநோய் பரிசோதனை:

இன்றைய சூழ்நிலையில் சுற்றுப்புற மாசு, உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களால் இளம் வயது பெண்களே தோல் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் உடனே தெரிவதில்லை, அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் தோலின் நிலையைப் பற்றி பரிசோதித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com