ஜென் குரு சொன்ன கதை!

அந்த ஜென் குருவைச் சுற்றி அவருடைய சீடர்கள் அமர்ந்தனர். 'குருவே, இன்றைக்கு
ஜென் குரு சொன்ன கதை!

அந்த ஜென் குருவைச் சுற்றி அவருடைய சீடர்கள் அமர்ந்தனர். 'குருவே, இன்றைக்கு எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்களேன்..!' என்று கேட்டான் ஒருவன். 'சொல்கிறேன்.. ஆனால், கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்பேன்..' என்றார் குரு. கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் எல்லோரும், 'அதற்கென்ன..? தயார்..!'என்று சொல்லிவிட்டார்கள். 

குரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 

'ஒரு கிராமத்தில் உடல் பருத்த ஒரு எருமை மாடு இருந்தது. அது தினமும் புல் மேயப் போகும் வழியில் ஒரு குடிலைத் தாண்டிச் செல்லும். அந்தக் குடிலின் கூரையில், உள்ளே வெயில் தெரியாமல் இருக்க நிறைய வைக்கோல் பிரிகளைத் தூக்கிப் போட்டிருந்தார்கள். எருமை கழுத்தை முடிந்தவரை அண்ணாந்து, அவற்றில் ஏதாவது ஒரு வைக்கோல் பிரியை இழுத்துச் சாப்பிடும். ஒரு கட்டத்தில் அதற்கு வைக்கோல் பிரி எட்டாமல் போனது. ‘கூரையிலேயே இவ்வளவு வைக்கோல் பிரியை அள்ளிப் போட்டிருந்தார்கள் என்றால், அந்தக்
குடிலுக்குள் இன்னும் எத்தனை இருக்கும்..?’ என்று எருமைக்கு ஓர் எண்ணம். ஆனால், உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் அந்தக் குடிலின் ஜன்னல் எப்போதும் சாத்தியே இருந்தது. 

ஒருநாள் அது தனது வழியில் நடக்கும்போது, அதன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. காரணம், அன்றைக்கு அந்தக் குடிலின் ஜன்னல் திறந்திருந்தது. எருமை மிக ஆர்வமாக ஜன்னலை அடைந்தது. உள்ளே தலையை மட்டும் மெள்ள நுழைத்தது. அதன் நீண்ட கொம்புகள் தடையாக இருந்தபோது, தன் முகத்தை இப்படியும், அப்படியுமாகச் சாய்த்து, எப்படியோ முகத்தை உள்ளே நுழைத்துவிட்டது. குடிலின் உள்ளே அது எதிர்பார்த்தபடியே ஓர் ஓரத்தில் நிறைய வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எருமை தன் முகத்தை எவ்வளவோ நீட்டியும் வைக்கோலை அதனால் எட்ட முடியவில்லை. இப்போது அதே ஜன்னல் வழியே மேலும் நுழைய தன் உடலை வருத்திக்கொண்டது. கொம்புகள், முகம் தாண்டி இப்போது கழுத்துவரை உள்ளே வந்துவிட்டது. இன்னும் வைக்கோல் எட்டியபாடில்லை.

அடுத்ததாக, முன்னங்கால்களை ஒவ்வொன்றாக உள்ளே கொண்டுவந்துவிட்டது. அதன்பின், அந்தக் கால்களைச் சுவரில் அழுத்திக்கொண்டு தன் உடலையும் உள்ளே அழுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக, அதனுடைய பருத்த உடல், ஜன்னல் சட்டங்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. உடலின் பெரும் பகுதியான வயிறும், முதுகும் கூட ஜன்னலுக்குள் நுழைந்துவிட்டன. இப்போது பாக்கி இருப்பது பின்னங்கால்கள் மட்டும்தான். 

எருமை மெள்ள பின்னங்கால்களில் ஒன்றை உள்ளே கொண்டு வந்தது. பிறகு, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அடுத்த காலையும் உள்ளே கொண்டுவந்துவிட்டது. தான் முழுவதும் உள்ளே வந்துவிட்டோம் என்று நிம்மதியுடன் அது கனைத்தது. குரல் கொடுத்தது. பின்பு, கழுத்தை மீண்டும் எட்டி வைக்கோலைப் பிடிக்க முயன்றது. முடியவில்லை. காரணம், அதன் வால் இன்னும் ஜன்னலைத் தாண்டி வரவில்லை..!” குரு, கதையை இங்கே நிறுத்தினார். 'இந்தக் கதை சாத்தியமா..? இல்லையா..?' என்று கேட்டார். 

'சாத்தியமே இல்லை..' என்றார்கள் சீடர்கள். 

'ஏன்..?' 

'எருமை மாட்டின் உடலிலேயே மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடியது அதனுடைய வால் பகுதிதானே..? தலையை நுழைத்து, வயிற்றையும் நுழைத்தபின், வாலை நுழைக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்..?' என்று கேட்டார்கள் சீடர்கள். 

குரு சொன்னார்: 'உங்களில் எத்தனையோ எருமைகள் இருக்கிறீர்கள்..!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com