இதைக் கேட்க வேண்டாம்!

இதைக் கேட்க வேண்டாம்!

பொதுவாக நம் உடலில் சில பாகங்களை நாம் சரிவர கவனிப்பதே இல்லை. அவற்றின் அவசியமும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வும் கூட பலருக்கு இல்லை. அப்படிப்பட்ட முக்கியமான உறுப்பு நம்முடைய காதுகள். 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை

இந்தத் திருக்குறளின் அர்த்தம், செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச்செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது என்கிறார் திருவள்ளுவர். நம்முடைய புலன்களில் முக்கியமானது காதுகள். காதுகளை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் பேப்பரைச் சுருட்டி அல்லது ஊக்கு போன்ற கூர்முனையுடைய பொருட்களால் காதைக் குடைவார்கள். அது மிகவும் ஆபத்தானது. காதில் உள்ள ஜவ்வுப் பகுதி பாதிப்படையும். குச்சியில் பஞ்சை சுற்றிக் காதைக் குடைவதும் சரியல்ல. தினமும் குளித்தபின் இயற்கையாக அழுக்குகள் வெளியே வரும். அதை மெல்லிய காட்டன் துணியைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்துவது நலம். 

நம்முடைய கேட்கும் திறனுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. சில விஷயங்களை கவனமாகப் பின்பற்றினால் காது கேட்கும் திறனை அதிகரிக்க முடியும்.

அதிக இரைச்சல் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் போது காதுகளின் வெளிப்புறத்தில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்வது நலம். வீட்டில் சப்தமாக டீவி அல்லது இசையைத் தொடர்ந்து கேட்பதும் ஆபத்துதான். சிலர் 24 மணி நேரமும் காதுகளில் ஹெட்ஃபோன்களை வைத்துக் கொண்டு திரிவார்கள். தூங்கும் போது கூட அவர்களுக்கு இசை தேவை. இது தவறான பழக்கம். ஆரம்பத்தில் இதன் பக்கவிளைவுகள் தெரியாது எனினும் தொடர்ந்து அதிக சப்தத்துடன் இசையைக் கேட்டு வந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் காது மந்தமாகிவிடும். மெல்லிய சப்தங்கள் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. செவிகளுக்கு கிரகிக்கும் திறன் மிகவும் குறைந்துவிடும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது காதுகளுக்கும் பொருந்தும். காதுகள் பழுதடைந்துவிட்டால் இசை மட்டும் அல்ல மற்றவர்கள் பேசுவது கூட கேட்காது. எனவே அளவான சப்தத்தில் இசை கேட்பதுதான் புத்திசாலித்தனம்.

உறங்கும் போது கூட நம்முடைய செவிப் புலன்கள் விழிப்புணர்வுடன் இருக்கும். குழந்தை லேசாகச் சிணுங்கினால் கூட, தாய் உடனே விழித்து அதற்குத் தேவையானதை தருவாள். சிலருக்கு தெருவில் நாய் குரைத்தால் போதும் உறக்கத்திலிருந்து எழுந்துவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் உறக்கம் தொலைந்துவிடும். சிலருக்கு சப்தங்கள் என்றாலே அலர்ஜி தான். ஆனால் அவர்கள் சப்தம் இரைச்சல் போன்றவற்றை எதிர்கொள்ளும் போது அதிகம் எரிச்சல் அடைவார்கள். அதுவும் தவறு. புறச் சப்தங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம்தான் வெளிச்சூழல்களில் கவனமாக நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிகமான சப்தத்தைத் தவிர்க்க இயர் ப்ளக் கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி 15 முதல் 20 டெஸிபல்கள் வரை குறைவான சப்தத்தைக் கேட்க முடியும். நவீன மருத்துவத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு உள்ளது.

கடும் குளிர் காலங்களிலும் பஞ்சு அல்லது உல்லன் துணிகளை வைத்து காதுகளை மறைத்துக் கொள்ள வேண்டும். சளித் தொல்லை ஏற்படும் போது பொதுவாக காது மூக்கு மற்றும் தொண்டை பாதிப்பு அடையும். இச்சமயங்களில் சிலருக்கு தற்காலிகமாக காது கேட்குத் திறன் குறையும். மருத்துவர்களை அணுகி பிரச்னைக்கு நிவாரணம் பெறலாம்.

சில மருந்துகளின் பக்க விளைவுகளால் காது கேட்கும் திறன் குறைகிறது என்கிறது ஒரு ஆய்வு. ஆஸ்பிரின் மாத்திரைகள், ஆன்டிபயாடிக், புற்றுநோய்க்கான மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் காத்து கேட்கும் திறனை குறைத்துவிடுகிறதாம்.   மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை சாப்பிட்ட சில வேளைகளில் பிரச்னையின் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்கம், அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இரண்டுமே காது கேட்கும் திறனை குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்பழக்கத்தினால் சிலருக்கு உடல் முழுவதும் நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். அது அவர்களின் மற்ற உறுப்புகளை பாதிப்பதுடன் காதுகளையும் பாதிப்படையச் செய்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது காதுகளுக்கும் ஓய்வு தேவை. அமைதியான இடத்தில் அரை மணி நேரமாவது தினமும் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றால் எதையும் கேட்காமல் அமைதியாக உட்கார்ந்திருக்கலாம்.

காது கேட்கும் திறன் குறைந்து வருகிறது என்று உணர்ந்தால் தயங்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

கட்டுரையின் தலைப்பு சொல்ல வருவது என்னவென்றால் இதைக் கேட்க வேண்டாம், கடைப் பிடித்தால் போதும்! சரிதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com