குறிப்பிட்ட உச்ச வரம்பு வரை தங்கம் பறிமுதல் செய்யப்படாது

தனிநபர்களிடம் குறிப்பிட்ட உச்ச வரம்பு வரை இருக்கும் தங்கம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
குறிப்பிட்ட உச்ச வரம்பு வரை தங்கம் பறிமுதல் செய்யப்படாது

தனிநபர்களிடம் குறிப்பிட்ட உச்ச வரம்பு வரை இருக்கும் தங்கம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
 கணக்கில் வராத செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அதனைத் தெரியப்படுத்தி கூடுதல் அபராத வட்டியுடன் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும் "2-ஆவது வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதா' மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, கருப்புப் பணம் குறித்து தாமாக அறிவிக்காமல், வருமான வரிச் சோதனையின்போது அது பிடிபட்டால், அந்தத் தொகையில் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை அபராத வரி விதிக்கப்படும்.
 இந்தத் திருத்தத்தின் கீழ் நகைகள் மற்றும் ஆபரணங்களும் கொண்டுவரப்படும் என்று வதந்தி பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விவகாரத்தில் மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கவும் மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. அவற்றியில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:
 நகைகள் மீதான வரிவிதிப்பு தொடர்பாக அரசு புதிதாக எந்த ஷரத்தையும் சேர்க்கவில்லை. கணக்கில் காட்டப்பட்ட வருமானம் அல்லது விலக்கு அளிக்கப்பட்ட விவசாய வருமானம் அல்லது குடும்பச் சேமிப்பு ஆகியவற்றின் மூலம் வாங்கப்பட்ட தங்கம், தங்க நகைகள் அல்லது பூர்விகமாக வந்த தங்க நகைகள், தங்கம் ஆகியற்றுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது.
 பூர்விகச் சொத்து உள்பட கணக்கில் காட்டப்படும் வருவாய் மூலம் பெறப்பட்ட தங்கம் அல்லது ஆபரணங்களை யாரும் வைத்திருப்பதற்கு வரம்பு ஏதும் இல்லை. வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகளின்போது ஒரு குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் தலா 500 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருந்தாலோ, திருமணமாகாத பெண்கள் தலா 250 கிராம் வரை வைத்திருந்தாலோ, ஆண்கள் தலா 100 கிராம் வரை வைத்திருந்தாலோ அவை எதுவும் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அவை இருந்தாலும் பறிமுதல் செய்யப்படாது என்று அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com