கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள் இருந்தது
கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில் கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக் கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள், ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள், தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள், பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில் எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா, டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாககத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சித்தராமையா பதவி விலக வேண்டும்

பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான செüதாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com