சிபிஐ இயக்குநர் தேர்வில் இழுபறி நீடிப்பு: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மோதல் எதிரொலி

சிபிஐ இயக்குநர் தேர்வில் இழுபறி நீடிப்பு: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மோதல் எதிரொலி

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி அனில் குமார் சின்ஹா வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார்.

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி அனில் குமார் சின்ஹா வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்பதவிக்கு புதிய அதிகாரியை நியமிப்பதற்காக லோக்பால் குழு கூடாததால் தலைவர் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நிலைமையைச் சமாளிக்க சிபிஐ இயக்குநர் பதவியை அதன் உயரதிகாரியும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ராகேஷ் அஸ்தானா, கூடுதலாக மூன்று மாதங்களுக்குக் கவனிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வு விவகாரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின்படி, சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான லோக்பால் குழு கூடி தேர்வு செய்ய வேண்டும். இக்குழுவில் மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற மக்களவையில் அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட முதலாவது எதிர்க்கட்சியின் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்நிலையில், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்க நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்யும் போதெல்லாம், அதில் பலரது பெயருக்கு ஒப்புதல் வழங்காமல் நீதிபதிகளின் பட்டியலை மத்திய அரசு திருப்பி அனுப்பி வருகிறது.
மேலும், நீதிபதிகள் தேர்வுக் குழு முறை வெளிப்படையாக இல்லை என்பதால் அதைக் கலைத்து விட்டு தேசிய நீதித் துறை ஆணையத்தை நியமிக்க விரும்பிய மத்திய அரசு, அதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்தது. அதை சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கும் இடையிலான உறவில் இருந்த விரிசல் அதிகமானது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் போதெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு மத்திய அரசு ஆளாகி வருகிறது.
கூட்டம் ஒத்திவைப்பு: இந்நிலையில், சிபிஐ இயக்குநர் தேர்வுக்காக லோக்பால் குழுக் கூட்டம் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் நவம்பர் 29-ஆம் தேதி தனது பிகார் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தில்லிக்கு அதே நாள் மாலையில் திரும்பினார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வராததால் லோக்பால் குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பதவிக் காலம் நிறைவு பெற்ற அனில் குமார் சின்ஹாவுக்கு அடுத்தபடியாக அப்பதவிக்கு யாரை நியமிப்பது என்ற குழப்பம் நிலவியது. இதையடுத்து, தாற்காலிகத் தீர்வாக, சிபிஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிடம் இயக்குநர் பொறுப்பை மத்திய அரசு அளித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை நண்பகலில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சிபிஐ இயக்குநர் பொறுப்பை ராகேஷ் அஸ்தானா கூடுதலாகக் கவனிப்பார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சில நிமிடங்களில் சிபிஐ தலைமையகத்தில் புதிய பொறுப்பை ராகேஷ் அஸ்தானா ஏற்றுக் கொண்டார்.
தலைமைகளுக்கு நெருக்கம்: 1984-ஆம் ஆண்டு குஜராத் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா. இவருக்கும், அனில் குமார் சின்ஹாவுக்கும் இடையிலான சிறப்பு இயக்குநர் பதவியை ஆர்.கே.தத்தா கவனித்து வந்தார்.
அவரைத் திடீரென்று மத்திய உள்துறை சிறப்புச் செயலராக மத்திய அரசு புதன்கிழமை நியமித்தது.
இதன் மூலம் சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதி பெறும் ஆறு பேர் அடங்கிய அதிகாரிகள் பட்டியலில் இருந்து ஆர்.கே.தத்தா பெயர் நீக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்த நிலையில் இருக்கும் கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிடம் இயக்குநர் பொறுப்பு தாற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது, அந்த மாநில காவல் துறையில் ராகேஷ் அஸ்தானா ஐ.ஜி.யாகப் பணியாற்றினார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் ஆரம்பகால விசாரணையை இவரது தலைமையிலான புலனாய்வுக் குழுதான் விசாரித்தது. குஜராத் மாநிலத்தின் வதோதரா, சூரத் நகர ஆணையராகவும் பணியாற்றிய இவர், கடந்த ஏப்ரலில் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com