நடவடிக்கைகள் என்ன?

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களின் சிரமங்களைக் களைவதற்காக
நடவடிக்கைகள் என்ன?

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற மக்களின் சிரமங்களைக் களைவதற்காக மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும், பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களிலும் எண்ணற்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ரூபாய் நோட்டு விவகாரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: நம் நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. மேலும், கள்ள நோட்டுகளைக் கண்டறியும் நிபுணத்துவமும் கூட்டுறவு வங்கிகளுக்கு கிடையாது. இதனைக் கருத்தில்கொண்டே, இந்த ரூபாய் மாற்றும் நடவடிக்கைகளிலிருந்து கூட்டுறவு வங்கிக்கு விலக்கு அளிக்கப்பட்டது என முகுல் ரோத்தகி வாதிட்டார். மத்திய அரசின் இந்த வாதத்துக்கு கூட்டுறவு வங்கிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப் பொருளாதாரமே முடங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ரூபாய் நோட்டு மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் களைய, மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இதுகுறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் எவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 5-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com