மம்தா எதிர்ப்பு எதிரொலி: மேற்கு வங்க சுங்கச் சாவடியிலிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறினர்

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி புகார் தெரிவித்ததை அடுத்து,

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி புகார் தெரிவித்ததை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள சுங்கச் சாவடி ஒன்றிலிருந்து ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை இரவு வெளியேறினர்.
மேற்கு வங்கத்தில் பல்வேறு சுங்கச் சாவடிகளில் மாநில அரசிடம் தெரிவிக்கமாலேயே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
அத்துடன், கொல்கத்தாவில் தலைமைச் செயலகம் அருகே உள்ள சுங்கச் சாவடியில் இருந்து ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படும் வரை அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மம்தாவின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் அலுவலகத்துக்கு அருகே உள்ள சுங்கச் சாவடியில் இருந்து ராணுவ வீரர்கள் வெளியேறினர். அங்கு அவர்கள் தங்குவதற்காக தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரமும் நீக்கப்பட்டது. இதுதொடர்பாக ராணுவத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவர் தலைமைச் செலகத்திலேயே வியாழக்கிழமை இரவு முழுவதும் தங்கினார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஒரு சுங்கச் சாவடியில் இருந்து வேண்டுமானால் ராணுவ வீரர்கள் சென்றிருக்கலாம். ஆனால், 18 மாவட்டங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் அவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் நடப்பது ராணுவ ஆட்சியா?' என்றார்.
ராணுவம் மறுப்பு: முன்னதாக, மக்கள் பீதியடையும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்காக நடத்தப்படும் வழக்கமான நடைமுறைதான் இதுவென்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக ராணுவத்தின் கிழக்குப் பிராந்திய பிரிவு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "மேற்கு வங்க காவல் துறையின் ஒத்துழைப்புடன்தான் சுங்கச் சாவடிகளில் வழக்கமானநடைமுறையில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவிக்கபட்டுள்ளது.
எனினும், இந்தக் கூற்றை மேற்கு வங்க காவல் துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா நகர காவல் துறை சுட்டுரைப் பதிவில், "போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காவும் சுங்கச் சாவடிகளில் ராணுவத்தை குவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மலிவான அரசியல்-வெங்கய்ய நாயுடு: இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சுங்கச் சாவடிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி மலிவான அரசியிலில் ஈடுபடுகிறார் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ராணுவம் குறித்து கருத்து தெரிவித்து தேவையில்லாத சர்ச்சையை மம்தா பானர்ஜி ஏற்படுத்துகிறார்' என்றார்.
இதற்கிடையே, ராணுவ வீரர்களை சுங்கச் சாவடிகளில் நிறுத்திவைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள அந்த மாநில ஆளுநர் மாளிகை முன்பு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களும், மாநில அமைச்சர்களும் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com