மோடியின் தகுதியின்மையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பாதிப்பு: ராகுல் காந்தி சாடல்

பிரதமர் நரேந்திர மோடியின் தகுதியின்மையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மோடியின் தகுதியின்மையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பாதிப்பு: ராகுல் காந்தி சாடல்

பிரதமர் நரேந்திர மோடியின் தகுதியின்மையால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற நடவடிக்கையை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்த ராகுல் காந்தி, வீண் பகட்டுக்காக மோடி அரசியல் செய்து வருவதாகவும் சாடினார்.
தில்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவால் அவர் பங்கேற்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியாவுக்கு இதுவரை கிடைக்காத பிரதமர் தற்போது மோடி ரூபத்தில் நமக்கு கிடைத்திருக்கிறார். மக்களை பாதிப்புக்குள்ளாக்குவதற்கு எந்நேரமும் தயாராக இருக்கும் பிரதமர் இவர். வீண் பகட்டுக்காக மட்டுமே அரசியல் செய்யும் பிரதமர் இவர். இவரைப் போன்ற ஒரு பிரதமரை இதுவரை காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு கொடுத்ததில்லை.
எந்த முன்யோசனையும், திட்டமுமின்றி அவர் கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்குக் கூட வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஏழைகள், அன்றாட உணவுக்கு கூட கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எதற்காக இந்த திட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்? மக்களை துன்பத்தில் உழல விடுவதற்காகவா? உங்கள் நடவடிக்கையால் எந்த செல்வந்தரும் பாதிக்கப்படவில்லையே? வங்கியின் வாசல்களிலும், ஏடிஎம் மையங்களுக்கு முன்பும் நின்று உயிர் நீத்தவர்களில் ஒருவர் கூட செல்வந்தர் இல்லையே?
மக்களுக்கு இத்தனை துன்பங்களை அள்ளிக் கொடுத்துள்ள மோடி, அதுகுறித்து சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த நடவடிக்கை குறித்து மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அவர் தயாராக இல்லை. அண்மையில் காஷ்மீர் பற்றி எரிந்தபோதும் கூட அவர் மௌனமாகதான் இருந்தார்.
மோடியின் கர்வத்தாலும், தகுதியின்மையினாலும் ஒட்டுமொத்த இந்தியாவே இன்று பாதிக்கப்பட்டிருக்கிறது.
கருப்புப் பணத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மோடி உணரவில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் வெறும் 4 சதவீத அளவே கருப்புப் பணம் உள்ளது. மற்ற கருப்புப் பணம் யாவும் தங்கத்திலோ, நிலத்திலோ, வெளிநாட்டுக் கணக்கிலோ முதலீடு செய்யப்பட்டுவிட்டன. இந்த 4 சதவீத கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நாட்டில் 85 சதவீத அளவில் இருந்த ரூபாய் நோட்டுகளை மோடி செல்லாததாக்கி இருக்கிறார். இதனை பெரிய சாதனையாகவும் அவர் கூறிக்கொள்கிறார்.
மோடி தற்பெருமையால் தமக்கென்று ஒரு பிம்பத்தை தாமே உருவாக்கியுள்ளார். தற்போது அந்த பிம்பத்தில் அவரே சிக்கித் தவிக்கிறார். என்றைக்கு அவர் மக்களிடம் சென்று அவர்களின் குரலைக் கேட்கிறாரோ, அன்றைக்குதான் இதிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கும்.
மோடியின் இந்தத் துல்லியத் தாக்குதல் கருப்புப் பணத்தின் மீதானது அல்ல; நாட்டின் பொருளாதாரத்தின் மீதானது. 125 கோடி மக்கள் மீதான இந்த சோதனை முயற்சி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இன்னும் சிறிது நாள்களில் உலக நாடுகளுக்கும் இது தெரியவரும்.
ஒரு பிரதமர் என்ற முறையில் அனைத்து தளங்களிலும் மோடி தோற்றுவிட்டார். உள்நாட்டு விவகாரத்திலும் சரி; பாகிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கை என்றாலும் சரி. மோடியின் தோல்விகள் தொடர்கின்றன.
நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தோளோடு தோளாக காங்கிரஸ் துணை நிற்கும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com