வங்கிகளில் நீடிக்கும் பணத் தட்டுப்பாடு: பொது மக்கள் அவதி

நாடு முழுவதிலும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் போதிய பண இருப்பு இல்லாததால் மாத ஊதியத்தை எடுக்க இயலாமல் மக்கள் வெள்ளிக்கிழமையும் கடும் அவதிக்குள்ளாகினர்.
வங்கிகளில் நீடிக்கும் பணத் தட்டுப்பாடு: பொது மக்கள் அவதி

நாடு முழுவதிலும் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் போதிய பண இருப்பு இல்லாததால் மாத ஊதியத்தை எடுக்க இயலாமல் மக்கள் வெள்ளிக்கிழமையும் கடும் அவதிக்குள்ளாகினர்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்துக்குப் பிறகே இந்த அறிவிப்பு வந்ததால், அதற்கு முன்னரே பெரும்பாலானோர் தங்களது ஊதியத்தை எடுத்துவிட்டனர்.
ஆனால், நிகழ் மாதத்தைப் பொருத்தவரை, பணத்தை எடுக்க இயலாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய பண இருப்பு இல்லாததைக் காரணமாகக் காட்டி, பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், வீட்டு வாடகை உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்களுக்குக்கூட பணம் கிடைக்காத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், குறைந்த தொகையையாவது ரொக்கமாக எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் அதிக அளவிலான மக்கள் படையெடுத்து வருவதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கேரளத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணம் பெற வசதியாக ரூ.127 கோடியை வங்கிகளுக்கு வழங்குமாறு ரிசர்வ் வங்கியிடம் அந்த மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை வரை ரூ.57 கோடி மட்டுமே ரிசர்வ் வங்கி வழங்கியதாகத் தெரிகிறது.
இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையைத் தர வங்கிகளால் இயலவில்லை. அதுவும் முதலில் வந்த சிலருக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு தொகை வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசை: அதேபோல், ஏடிஎம் மையங்களும் பல மாநிலங்களில் சரிவர செயல்படவில்லை. பணம் இருந்த சில ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் என அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை நீடித்தது.
இதனிடையே, பெட்ரோல் நிரப்பும் மையங்களில் வெள்ளிக்கிழமைக்கு (டிச.2) பிறகு பழைய ரூ.500 செல்லாது என்பதால், பெரும்பாலான பங்க்குளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவற்றில் பல இடங்களில் பழைய நோட்டுகளை வாங்க மறுத்துவிட்டதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com