மாநிலங்களின் யோசனையை ஏற்காவிட்டால் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேறும் வாய்ப்பு குறைவு

சரக்கு, சேவை வரிகள் சட்ட வரம்பு தொடர்பாக மாநிலங்கள் வலியுறுத்தி வரும் முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், அது தொடர்புடைய சட்டத் திருத்தம் நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்பு குறைவு என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சரக்கு, சேவை வரிகள் சட்ட வரம்பு தொடர்பாக மாநிலங்கள் வலியுறுத்தி வரும் முக்கிய அம்சங்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், அது தொடர்புடைய சட்டத் திருத்தம் நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்பு குறைவு என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் ஐந்தாவது கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் மாநில அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யும் பொருளை அடுத்த மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது, வரி வசூல் செய்யும் நடைமுறை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விவாதித்தது. வரி விதிப்பில் ஒரு பங்கை மாநிலங்களுக்கு தர வேண்டும் என்ற யோசனைக்கு கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன.
191 பிரிவுகள் கொண்ட ஜிஎஸ்டி சட்டத்தில் 61 சட்டப் பிரிவுகள் இதுவரை ஆராயப்பட்டன. இதில் மாநிலங்களுக்கு இடையிலான ஐஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு சமமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை பல மாநிலங்கள் வலியுறுத்தின.
வரி செலுத்துவோர் தங்களைப் பதிவு செய்வது முதல் வரி செலுத்துவது வரை கடைப்பிடிக்க வேண்டிய ஏழு கட்ட நடைமுறை குறித்து கூட்டத்தில் விவாதித்து கருத்தொற்றுமையை எட்டினோம். பல மாதங்களுக்கு முன்பே தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த யோசனைப்படி ரூ.1.50 கோடி வரையிலான வரம்புக்கு உள்பட்ட வரி செலுத்துவோரிடம் மாநிலங்கள் வரி வசூலிக்க வேண்டும். அத்தொகைக்கு அதிகமான வரி வசூல் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற பல மாநிலங்கள் ஆதரித்தன. மத்திய - மாநில அரசுகள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிப்போம்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் 848 பொருள்களுக்கான விற்பனை வரியில் விலக்கு உள்ளது. 12 வகையான வரிகள் அடங்கியது ஜிஎஸ்டி. இதில் விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி ஆகியவை பெரிய வரிகளாகக் கருதப்படுகின்றன. இந்த மூன்று வரிகள் மூலம் நமக்கு ரூபாய் 8 லட்சத்து 48 ஆயிரம் கோடி வசூலாகிறது. இந்த அளவு குறையாமலும் யாருக்கும் வேறுபாடு எழாமலும் பார்த்துக் கொள்ளுமாறு தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆடம்பர பொருள்கள், புகையிலை பொருள்கள் போன்றவற்றுக்கு "செஸ்' விதிப்பது, அந்த வரி மூலம் வசூலாகும் தொகையை, இழப்பீடு நிதியத்தில் செலுத்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. அத்தொகை தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் பேசப்பட்டது. இந்த இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக அமையும் நிதியத்துக்கு வகை செய்யும் தனிச் சட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேற்கண்ட விவகாரங்களில் மாநிலங்கள் வலியுறுத்தும் விஷயங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் ஜிஎஸ்டி சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறும். ஆனால், தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், அச்சட்டத் திருத்தம் நிகழ் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்றார் பாண்டியராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com