ரூபாய் நோட்டுகள் வாபஸ் குறித்து அருண் ஜேட்லிக்கு முன்பே தெரியும்: பியூஷ் கோயல்

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அரசின் நடவடிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முன்பே தெரியும் என்று எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகள் வாபஸ் குறித்து அருண் ஜேட்லிக்கு முன்பே தெரியும்: பியூஷ் கோயல்

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அரசின் நடவடிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முன்பே தெரியும் என்று எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கே தெரியாமல் இருந்தது என்று ஒரு சாரார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:
நாட்டின் நிதியமைச்சர் என்ற முறையில், பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவது குறித்து அருண் ஜேட்லிக்கும் முன்கூட்டியே நன்றாகத் தெரியும்.
எனினும், மிக வெளிப்படையாகப் பழகக் கூடிய அவரால் அந்த விவகாரத்தை அனைவரிடமிருந்தும் எப்படி மறைக்க முடிந்தது என்பதுதான் ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பிறகு எங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நாட்டுக்குத் தேவையான ரகசியத்தை உறுதியுடன் பாதுகாப்பதுதான் உயர்ந்த தலைவர்களின் மிகச் சிறந்த பண்பாகும்.
கடுமையான நடவடிக்கை: ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேர்மையானவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பயன்படுத்தி, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான ஆலோசனைகளை கடந்த 22 நாள்களாக பட்டயக் கணக்காளர்கள் வழங்கி வருவதாக வரும் தகவல் வருத்தத்தை அளிக்கிறது.
நேர்மையாளர்களுக்கான சலுகைகளை தவறாகப் பயன்படுத்த உதவும் அதுபோன்ற நிபுணர்கள், வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான சட்டம் பாயும்.
இந்த விவகாரத்தில் அரசு இரும்புக் கரம் கொண்டு செயல்படும்.
ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையின்போது 50 நாள்களுக்கு மக்கள் அவதியுற வேண்டியிருக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.
இந்த நடவடிக்கையால் தற்போது பொருளாதாரம் சரிவைச் சந்தித்தாலும், ஓரிரு மாதங்களில் நிலமை சரியாகிவிடும்.
நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றி பெறும். பஞ்சாபிலும் அகாலி தளம் - பாஜக கூட்டணியே வெற்றியடையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com