வங்கியிலிருந்து ஊதியத்தை எடுக்க பாகிஸ்தான் தூதர்களுக்கு அனுமதி மறுப்பு: இந்தியா மீது குற்றச்சாட்டு

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் தங்களின் ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் தங்களின் ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஊதியம் செலுத்தப்பட்டுவிட்டது. எனினும், தங்களின் ஊதியத்தை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு ஆர்பிஎல் வங்கி அனுமதி மறுக்கிறது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதற்கும், இந்த விவகாரத்துக்கும் தொடர்பில்லை. இருந்தபோதிலும், இந்திய அரசின் உத்தரவின்படியே ஆர்பிஎல் வங்கி இவ்வாறு செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. தூதர்களிடம் இவ்வாறு நடந்துகொள்வது என்பது ஐ.நா.வின் வியன்னா ஒப்பந்தத்துக்கு எதிரானது ஆகும். இந்தப் பிரச்னையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் பிரச்னை ஏற்படலாம் என பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
எனினும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தரப்பில் எந்த பதிலோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை.
தூதரக அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அமெரிக்க டாலரில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது, ரூபாய் நோட்டு விவகாரத்தால் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com