ரூபாய் நோட்டு வாபஸூக்குப் பிறகு ரூ.130 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ரூ.130 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸூக்குப் பிறகு ரூ.130 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, ரூ.130 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதுதவிர, கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.2,000 கோடியையும் பறிமுதல் செய்திருப்பதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிடிபிடி), செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாதச் செயல்களுக்கு கள்ளநோட்டுகள் செல்வதைத் தடுக்கவும், உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் அறிவித்தார். அதையடுத்து, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அவற்றை டிசம்பர் மாத இறுதிக்குள் வங்கிகளில் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்போது, ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. இதனிடையே, கடந்த 27-ஆம் தேதி வரை, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அந்த நோட்டுகள், ரூ.8.45 லட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ரொக்கம் பறிமுதல்: இந்நிலையில், தில்லி, மும்பை, புணே, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.130 கோடி மதிப்புள்ள புதிய கரன்சி நோட்டுகள், நகைகள் ஆகியவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ.2,000 கோடியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, இதுவரை 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 30 சதவீத வழக்குகள் ஏற்கெனவே அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. இதேபோல், மற்ற வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், அவற்றை அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்வதற்கு வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com