தலாக் முறை விவாகரத்து ஏற்க இயலாதது: அலாகாபாத் நீதிமன்றம்

முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை மிகவும் கொடூரமானது என்றும் ஏற்க இயலாதது என்றும் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முஸ்லிம்களால் பின்பற்றப்படும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை மிகவும் கொடூரமானது என்றும் ஏற்க இயலாதது என்றும் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இஸ்லாமிய தனிநபர் சட்டத்தைக் காரணம்காட்டி முஸ்லிம் சமூக ஆண்கள் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தவறாகப் பயன்படுத்துவதாகவும், எனவே அதை நீக்க வேண்டும் என்றும் முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகளோ, தங்களது மதச்சட்டத்தின்படி இது சரியானதுதான் என்று வாதிடுகின்றன. இதுதொடர்பாக நாடு முழுவதும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தலாக் விவாகரத்து தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுனீத் குமார் தன்னுடைய தீர்ப்பில் கூறியதாவது:
தலாக் என்ற உடனடி விவகாரத்து என்பது பெண்களுக்கு எதிரானது; திருமண பந்தத்தை இழிவுபடுத்தும் செயலாகும். இந்தியாவில் முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் இந்த நடைமுறை, திருக்குரானில் விதிக்கப்பட்டதற்கும், முகமது நபிகளின் போதனைகளுக்கும் முரண்பாடாக உள்ளது.
மேலும் உடனடி விவாகரத்தானது, பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது.
பணிவற்ற தன்மை, தவறான நடவடிக்கை, இல்லற வாழ்வில் இனிமையில்லாமை ஆகியவை மனைவியிடம் இருந்தால் மட்டுமே ஆண்கள் தலாக் கூறி விவாகரத்து பெறலாம் என்றுதான் இஸ்லாமிய சட்டம் கூறுகிறது. ஆனால் மேற்கண்ட மோசமான காரணங்கள் இல்லாமல் எடுத்ததற்கெல்லாம் தலாக் கூறுவதை மத ரீதியிலோ அல்லது சட்ட ரீதியிலோ எந்த ஆணும் நியாயப்படுத்த முடியாது.
கருத்து வேறுபாடு உள்ள தம்பதிகளை சேர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோற்றுபோகும்போது உச்சக்கட்ட சமயத்தில் மட்டுமே திருமண உறவை முறித்துக் கொள்ள தலாக் அல்லது கோலா என்ற வார்த்தையைப் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.
ஷரியத் சட்டத்துக்கு எதிரானது: இதனிடையே, பாலின உரிமைகள் மறுக்கப்படுவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தெரிவித்தார்.
சார்க் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் தில்லியில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட அக்பர் கூறுகையில், "பாலின சுதந்திரம் இல்லாத எந்த நாடும் வளர்ச்சியடையாது.
திருக்குரானில் கூறப்பட்டுள்ள போதனைகளை நன்கு ஆழ்ந்து படித்தவர்கள், மும்முறை தலாக் கூறும் விவாகரத்து நடைமுறையை சரியானது என்று வாதிட மாட்டார்கள்.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தை சிலர் ஆணாதிக்கத்துக்கு ஆதரவாக திரித்துவிட்டனர். பாலின சமஉரிமை வழங்குவதை யாராலும் மறுக்க முடியாது' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com