பொருளாதாரச் சிக்கல்களுக்கு மோடியே பொறுப்பு

"உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கல்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பொறுப்பாவார்''
பொருளாதாரச் சிக்கல்களுக்கு மோடியே பொறுப்பு

"உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு நாட்டில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதாரச் சிக்கல்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பொறுப்பாவார்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றது, மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு அல்ல. அது, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவாகும்.
இதுதொடர்பான விவாதத்தின்போது, நாடாளுமன்றத்தில் அவர் இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற அவை நிகழ்வுகளில் அவர் பங்கேற்காமல் இருப்பது ஏன்?
மாநிலங்களவையில் பிரதமர் அலுவலகம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நேரத்தில் கூட அவர் அவையில் இல்லை. அவர் அவைக்கு வருவதைத் தவிர்த்து வரும் அவர், அரசின் கொள்கை முடிவுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நாடாளுமன்ற விதிகளையும், நடைமுறைகளையும் அவர் தொடர்ந்து மீறி வருகிறார்.
இந்த நிலையில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இது, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதால், மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரியிடம் நோட்டீஸ் அளித்திருக்கிறேன். இதற்காக, நாடாளுமன்ற உரிமை மீறல் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.9) நடைபெறவுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்போது அவையில் பிரதமர் இருக்க வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் கூறவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.
இதற்கு முன், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றபோது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விவாதத்தில் பங்கேற்று, கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஆனால், பிரதமர் மோடியோ அவைக்கு வருவதையேத் தவிர்க்கிறார்.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும்போது, வங்கி வாசல்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், அளவுக்கு அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளுடன் பாஜக பிரமுகர்கள் பிடிபட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் ஆகியவற்றையும் விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com