மோடி பதவி விலக வேண்டும்: மம்தாபானர்ஜி

"அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரிடருக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்'
மோடி பதவி விலக வேண்டும்: மம்தாபானர்ஜி

"அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பேரிடருக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சாதாரண மக்கள் அலைக்கழிப்புக்கும், மிகுந்த வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு மக்கள் இன்னல்களை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்.
இவை அனைத்துக்கும் பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டு மக்களுக்கு தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
அத்துடன், தனது பதவியையும் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். பிரதமர் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக உரிமை இல்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை காரணமாக கருப்புப் பணம் மீட்கப்படவில்லை. அதேநேரம், சாதாரண மக்கள் நல்ல வழியில் சேர்ந்து வைத்திருந்த பணம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றச் சென்றபோது இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
விவசாயம், வியாபாரம் போன்றவையும் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டார். இது சர்வாதிகாரத்தனத்தை காட்டுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், முறைசாரா தொழிலாளர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
ஒருவேளை இந்தச் சூழலில் நான் பிரதமராக பதவி வகித்திருந்தால், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பேன்.
இந்த துரதிருஷ்டவசமான சோதனைக் காலம் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
பணத்தை எந்தவித தடங்கலும் இன்றி மக்கள் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு நாடாளுமன்றம் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறோம் என்று அந்த அறிவிப்பில் மம்தா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com