ரூபாய் நோட்டு அறிவிப்பு நாட்டையே சீரழித்துள்ளது: ராகுல் காந்தி

ரூபாய் நோட்டு அறிவிப்பு நாட்டையே சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ரூபாய் நோட்டு அறிவிப்பு நாட்டையே சீரழித்துள்ளது: ராகுல் காந்தி

ரூபாய் நோட்டு அறிவிப்பு நாட்டையே சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்திருப்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வியாழக்கிழமை (டிச.8) கருப்பு தினமாக அனுசரித்தனர். இதையொட்டி, நாடாளுமன்றத்துக்கு அவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர்.
பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
அப்போது, அங்குள்ள செய்தியாளர்களிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய அறிவிப்பை தனது துணிச்சலான முடிவு என்று பிரதமர் மோடி கூறிக்கொள்கிறார்.
துணிச்சலான முடிவு சில நேரங்களில் அறிவீனமான முடிவாகவும் ஆகக்கூடும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பானது முழுக்க முழுக்க ஒரு அறிவீனமான நடவடிக்கைதான். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த நாட்டையே சீரழித்துள்ளது.
இந்த நடவடிக்கையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நரேந்திர மோடி சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த விவகாரம் குறித்த விவாதத்தில் கூட அவர் பங்கேற்க மறுக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வராமல் ஒளிந்து கொள்கிறார். ஆனால், நாங்கள் (எதிர்க்கட்சிகள்) அவரை விடமாட்டோம்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அவ்வாறு நடைபெற்றால், பாஜக உறுப்பினர்களே மோடியின் முடிவுக்கு எதிராக வாக்களிப்பாளர்கள். இதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அவர் செவிமெடுப்பதில்லை.
ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகும் முன்னரே இதுதொடர்பாக பாஜகவினருக்கு மோடி தெரியப்படுத்திவிட்டார்.
இதனால்தான், குறிப்பிட்ட நாள்களுக்குள் பாஜகவினரின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான நிலங்களை பாஜகவினர் ஓரிரு மாதங்களுக்குள் வாங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றார் ராகுல் காந்தி.
ஓடி ஒளிவது ராகுல்தான் - பாஜக பதிலடி: இதனிடையே, பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக பாஜக பலமுறை தெரிவித்துவிட்டது. ஆனால், விவாதத்துக்கு அஞ்சி ஓடி ஒளிவது காங்கிரஸும், ராகுல் காந்தியும்தான்.
தன்னைப் பற்றி பரபரப்பான செய்திகள் வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே பொறுப்பின்றி ராகுல் பேசி வருகிறார். அவருக்கு துணிச்சலிருந்தால் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வருவாரா? என ஸ்ரீகாந்த் சர்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com