அக்.4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது.
அக்.4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. மேலும், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீரை அக்டோபர் 1 முதல் 6-ஆம் தேதி வரை கர்நாடக அரசு தினமும் திறந்து விட வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பா சாகுபடிக்காக காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி கர்நாடக அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.
மத்திய அரசு பதில்: அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி ஆஜராகி, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில முதல்வர்கள் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர் குழுவை அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்த யோசனையை தமிழக அரசு தரப்பு ஏற்கவில்லை. இதனால், கருத்தொற்றுமை எட்டப்படவில்லை' என்றார்.
இதையடுத்து, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அமல்படுத்தும் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.
வாதிட மறுப்பு: இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன், தனக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா செப்டம்பர் 29-ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தையும், அதற்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) தாம் எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது, ஃபாலி நாரிமன் "கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்த இயலவில்லை' என மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ஆனால், "உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வரை கர்நாடக அரசு சார்பில் எந்தவொரு வாதத்தையும் நான் முன்வைக்கப் போவதில்லை என்று முதல்வருக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்' என்றார்.
அவரது நிலைப்பாட்டுக்கு பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு தரப்பு வாதத்தை முன்வைக்குமாறு அதன் வழக்குரைஞர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாஃப்டே, "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. இத்தகைய நிலையில் எந்தவொரு வாதத்தையும் தமிழக அரசு முன்வைக்க விரும்பவில்லை' என்றார்.
இறுதி வாய்ப்பு: இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் அக்டோபர் 4 அல்லது அதற்கு முன்பாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாரியத்தில் இடம் பெறும் உறுப்பினர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சனிக்கிழமை (அக்டோபர் 1) மாலை 4 மணிக்குள் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்கள், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் மீதான அடுத்த விசாரணை அக்டோபர் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.
காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடக் கூடாது என கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட, நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரை அக்டோபர் 1 முதல் 6-ஆம் தேதி வரை திறந்து விட கர்நாடகத்துக்கு இறுதி வாய்ப்பை நீதிமன்றம் வழங்குகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை


காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (உள்துறை), ரவிசங்கர் பிரசாத் (சட்டம்), வெங்கய்ய நாயுடு (நகர்ப்புற வளர்ச்சி), உமா பாரதி (நீர் வளம்) ஆகியோர் கலந்து கொண்டனர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-க்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதன் அமலாக்கம் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற வேண்டிய 4 நிபுணர்களின் பெயர்களை சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் தெரிவிக்குமாறு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கர்நாடகத்துக்கு இறுதி எச்சரிக்கை!


காவிரி விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருந்தால், சட்டத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணை முடிவில் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்திய அரசியலமைப்பின் 144-ஆவது விதியில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை மத்திய அரசும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து பின்பற்றாமல் உள்ளது.
காவிரி விவகாரத்தில் கள அறிக்கையை மேலாண்மை வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை தற்போது பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதித்துச் செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செயல்படாவிட்டால், இறுதியில் சட்டத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அனைவரும் அறிவர் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com