ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஏ தில் ஹை முஷ்கில்' படத்தை வெளியிட மத்திய அரசு ஆதரவு!

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த "ஏ தில் ஹை முஷ்கில்' என்ற ஹிந்தி திரைப்படத்தை சுமுகமாக வெளியிட ஒத்துழைப்பு அளிப்பதாக மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் உறுதி அளித்துள்ளன.
ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஏ தில் ஹை முஷ்கில்' படத்தை வெளியிட மத்திய அரசு ஆதரவு!

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த "ஏ தில் ஹை முஷ்கில்' என்ற ஹிந்தி திரைப்படத்தை சுமுகமாக வெளியிட ஒத்துழைப்பு அளிப்பதாக மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் உறுதி அளித்துள்ளன.

இந்தப் படத்தை வெளியிட மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்குள் படத்தை திரையிட மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் அப்போது கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அதனை ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொண்டதாகவும், படம் வெளியாவதற்கு 100 சதவீத ஒத்துழைப்பைத் தருவதாக உறுதியளித்ததாகவும் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார். இதேபோல், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸூம் திரைப்படம் வெளியாவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக கரண் ஜோஹரிடம் உறுதியளித்துள்ளார்.

ரண்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் "ஏ தில் ஹை முஷ்கில்'. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபவாத் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்பட்டத்தை வெளியிட ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படும் எந்தப் படத்தையும் இந்தியாவுக்குள் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் தீபாவளிக்கு திரையிடத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இத்தகைய எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதன் இயக்குநர் கரண் ஜோஹர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் கூறியதாவது:

"ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு உதவுமாறு ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பைத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவதாக மகாராஷ்டிர மாநில அரசும் உத்தரவாதம் அளித்துள்ளதால், திட்டமிட்டபடி திரையரங்குகளில் "ஏ தில் ஹை முஷ்கில்' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முகேஷ் பட்டும் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com