ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் நிரந்தரமல்ல

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது நிரந்தமானதல்ல என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் நிரந்தரமல்ல

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது நிரந்தமானதல்ல என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
பணியின்போது உயிர்நீத்த போலீஸாரை நினைவுகூர்வதற்கான தேசிய தினம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் மெஹபூபா முஃப்தி பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது நிரந்தரமானதல்ல. மாநிலத்தில் அமைதியான சூழலை நாங்கள் உருவாக்குவோம்.
இங்கு பெல்லட் குண்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அரசுக்கு ஆதரவளித்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நமது குழந்தைகள் கேடயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். ஒருவரின் மீது கற்களை வீசியோ, துப்பாக்கியால் சுட்டோ அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கட்டாயப்படுத்த முடியாது. நமக்கு பேச்சுவார்த்தை தேவையென்றால், பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானில் இந்திய ஊடகங்களைத் தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவச் செய்வதில் இரு நாடுகளுக்குமே பங்கிருப்பதால், பாகிஸ்தானும் நமக்கு உதவ வேண்டும். நாம் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து சண்டையிட்டு வருகிறோம். ஆனால், வாகா எல்லையில் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது மாநிலத்தில் ஊடுருவல்களும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்கின்றன. இங்கு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை ஏற்படுத்தினால் மட்டுமே, ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டத்தை சில இடங்களில் தளர்த்த முடியும்.
உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள்தான் அவர்களது வீடுகளை விட்டு வெளியேறி, பயங்கரவாத இயக்கங்களில் சேருகின்றனர்.
துப்பாக்கிச் சூடுகளில் பலியாகக் கூடிய அத்தகைய இளைஞர்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வைத்து, விளையாட்டுச் சாதனங்களை வாங்கிக் கொடுத்து, விளையாட்டுத் துறையிலும் கல்வித் துறையிலும் அவர்களது கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.
""நமது அண்டை நாடுகளை மாற்ற முடியாது. ஆனால், பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவு பேண வேண்டும்'' என்பதே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கையாகும். ஆனால், அதை எப்படி மேற்கொள்வது? அதற்கான முடிவை இந்தியாவில் இருந்தே எடுக்க வேண்டியுள்ளது. அதற்கான சூழலை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் நமக்கு உதவ வேண்டும். போர்ச் சூழல் ஏற்படும் போதெல்லாம் அதன் பாதிப்பு ஜம்மு-காஷ்மீரில் எதிரொலிக்கிறது.
வாஜ்பாயின் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடியும் பின்பற்ற விரும்புவதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறேன்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் பாகிஸ்தானுக்கும் பங்கு உள்ளதால், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை அந்நாடு நிறுத்த வேண்டும்.
வாஜ்பாயின் ஆட்சியில் பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாததோடு, எல்லையில் துப்பாக்கிச் சண்டைகள், பயங்கரவாதம் ஆகியவையும் நிறுத்தப்பட்டன. ஆனால், அந்த முயற்சி தொடரவில்லை என்றார் மெஹபூபா முஃப்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com