திரைப்படம், தொலைக்காட்சியால் இந்தியா- பாகிஸ்தான் உறவு வலுப்படும்

திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டு போன்றவை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் சக்தி கொண்டவை
திரைப்படம், தொலைக்காட்சியால் இந்தியா- பாகிஸ்தான் உறவு வலுப்படும்

திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டு போன்றவை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் சக்தி கொண்டவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.
இந்திய தொலைக்காட்சிகளுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்ததை அடுத்து, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், விளையாட்டும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் சக்தி கொண்டவை.
பாகிஸ்தான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா மீண்டும் தொடங்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இரு நாடுகளிலும் திரைப்படக் கலைஞர்களுக்குத் தடை விதிக்கக் கூடாது. ஏனெனில், அவர்கள், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் தூதர்களைப் போன்றவர்கள். அதனால்தான், நமது அண்டை வீட்டாரை நாம் தேர்வுசெய்ய முடியாது என்று பாகிஸ்தான் உடனான உறவு குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி கூறுவார்.
இந்தியாவில் பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை விதிக்கும் விவகாரத்தில், நான் ஹிந்தித் திரையுலகுக்கு ஆதரவு அளிக்கிறேன்.
பாகிஸ்தான் உடனான எந்தவொரு உறவுக்கும் தடை விதிக்காமல், பாகிஸ்தான் கலைஞர்களுக்கு மட்டும் தடை விதித்து, அவர்களைத் தண்டிக்க முற்படுவது ஏன்? என்று திக்விஜய் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளுக்கும் வெள்ளிக்கிழமை முதல் முழுமையான தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் ஊடகக் கட்டுப்பாட்டு ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. தடையை மீறி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வோரின் உரிமம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com