பிசிசிஐ-மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப்பரிமாற்றத்தை முடக்கியது உச்ச நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (பிசிசிஐ) மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் இடையிலான அனைத்து பணப் பரிமாற்றங்களையும் முற்றிலுமாக முடக்க

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (பிசிசிஐ) மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் இடையிலான அனைத்து பணப் பரிமாற்றங்களையும் முற்றிலுமாக முடக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐ மறுத்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையால் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான பணப் பரிமாற்றத்தைக் கூட நடத்த முடியாது என்பதால் பிசிசிஐ-க்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற மோசடிகளை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி பரிந்துரை அளிக்க லோதா குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. எனினும், அந்தக் குழு அளித்த பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் ஏற்க பிசிசிஐ தயக்கம் காட்டியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிசிசிஐ-மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப் பரிமாற்றத்தை முற்றிலுமாக முடக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பிசிசிஐ-யின் வரவு-செலவுக் கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்ய தனிப்பட்ட முறையில் கணக்காளர்களை நியமிக்குமாறு லோதா குழுவுக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த எவ்வளவு நாள்கள் ஆகும் என்ற விவரத்தை உச்ச நீதிமன்றத்திலும், லோதா குழுவிடமும் வரும் டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலாளர் அஜய் ஷிர்க்கே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து லோதா குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா கூறியதாவது:
எங்கள் குழு அளித்த பரிந்துரையை பிசிசிஐ கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதற்காக உறுதியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது விஷயத்தில் பிசிசிஐ எவ்வாறு நடந்து கொள்கிறது என்று பார்க்கலாம். பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் எங்களுடன் ஆலோசனை நடத்த வந்தால் அதனை நாங்கள் வரவேற்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com