வங்கி அட்டைகளின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: துரித நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அரசு உறுதி

பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் பற்று அட்டைகள் (டெபிட் கார்டு) குறித்த ரகசியத் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பல்வேறு வங்கி வாடிக்கையாளர்களின் பற்று அட்டைகள் (டெபிட் கார்டு) குறித்த ரகசியத் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கும், பிற வங்கிகளுக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.
"யெஸ்' வங்கியின் ஏடிஎம் நெட்வொர்க் சேவைகளை வழங்கி வரும் "ஹிட்டாச்சி' நிறுவனத்தின் கணினி வாயிலாக பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் பற்று அட்டை தொடர்பான தகவல்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து இணையவழி தகவல் சிதைப்பாளர்கள் (ஹேக்கர்ஸ்) மூலம் இந்தத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் 19 வங்கிகளைச் சேர்ந்த 641 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.1.23 கோடி தொகை திருடப்பட்டுள்ளதாக தேசிய பணப்பட்டுவாடா அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 32 லட்சம் பற்று அட்டைகளைத் திரும்பப் பெறுவதாகவும், முடக்குவதாகவும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்தன. அவற்றில் 26.5 லட்சம் அட்டைகள் "மாஸ்டர்' மற்றும் "விசா' வகையைச் சேர்ந்தவை. 6 லட்சம் அட்டைகள் "ரூ-பே' வகையைச் சார்ந்தவை. இந்தச் சூழலில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்தா தாஸ், தில்லியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வெள்ளிக்கிழமை கூறியதாவது: பற்று அட்டைகளின் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தின் பின்னணி குறித்து வங்கிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்கள் மத்திய அரசுக்குக் கிடைத்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்படும்.
தகவல் திருட்டு குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களது வங்கிக் கணக்குகளை முறைகேடாகக் கையாளாத வகையில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
முன்னதாக, 6 லட்சம் வாடிக்கையாளர்களின் பற்று அட்டைகளை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடக்கியது. மேலும், எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி அறிவுறுத்தியது. இதேபோன்று, பரோடா வங்கி, ஐடிபிஐ, மத்திய வங்கி, ஆந்திர வங்கி ஆகியவையும் பற்று அட்டைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, யெஸ் பேங்க் ஆகியவை பற்று அட்டைகளின் ரகசிய எண்ணை மாற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com