விமானப் போக்குவரத்துத் துறையை விரிவாக்க முக்கியத்துவம்: பிரதமர் மோடி

முந்தைய அரசுகளை போலில்லாமல், விமானப் போக்குவரத்துத் துறையை விரிவுபடுத்த தனது அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத் திறப்பு விழாவில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கிறார் முதல்வர் விஜய் ரூபானி. உடன், குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலி, மத்திய விமான
குஜராத் மாநிலம், வதோதராவில் ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத் திறப்பு விழாவில், பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்கிறார் முதல்வர் விஜய் ரூபானி. உடன், குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலி, மத்திய விமான

முந்தைய அரசுகளை போலில்லாமல், விமானப் போக்குவரத்துத் துறையை விரிவுபடுத்த தனது அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், வதோதராவில் சுமார் ரூ.160 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை சனிக்கிழமை அவர் திறந்துவைத்தார். இது, நாட்டிலேயே இரண்டாவது "பசுமை' விமான நிலையமாகும். இதன் திறப்பு விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: விமானப் போக்குவரத்துத் துறையை பொருத்தவரை, முந்தைய அரசுகளிடம் எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லை.
அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது?, பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? சாதாரண மக்களுக்கும் விமானப் பயணத்தை சாத்தியமாக்குவது எப்படி? என்பது போன்ற சிந்தனைகளே இன்றி முந்தைய அரசுகள் செயல்பட்டுள்ளன. ஆனால், எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, விமானப் போக்குவரத்துத் துறைக்கான ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்பட்டது. இத்துறையை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
முதல் ரயில்வே பல்கலைக்கழகம்: நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளும் போக்குவரத்து மூலமும், தகவல் தொழில்நுட்பம் மூலமும் இணைக்கப்படுவது தவிர்க்க இயலாத தேவையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வதோதராவில் நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவு செய்துள்ளோம். இந்த நடவடிக்கையால், பல நூற்றாண்டுகளுக்கு பயன் கிடைக்கும்.
அதேபோல், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து மிகவும் அவசியமாகிறது. சிறப்பான விமானப் போக்குவரத்து இருந்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
ரூ.2,500க்கு விமானப் பயணம்: நாட்டிலுள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தினால், நாட்டின் வளர்ச்சியை புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்லலாம். அதனடிப்படையில், பிராந்திய விமானச் சேவை இணைப்புத் திட்டம் (உடான்) செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், உள்நாட்டில் 500 கி.மீ. தொலைவுக்குள்பட்ட விமானப் பயணங்களை அதிகபட்சம் ரூ.2,500 கட்டணத்தில் மேற்கொள்ள முடியும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான நிலையம்: கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், "பசுமை' விமான நிலையமாக வதோதரா விமான நிலைய முனையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வதோதரா, வாராணசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். பின்னர், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். பிரதமராக பதவியேற்ற பின், இப்போது முதல்முறையாக அவர் வதோதராவுக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com