அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மை: பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அரசு சார்பில் அளிக்கப்படும் அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பரீதியாக அங்கீகாரம் வேண்டுமென்ற கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு

அரசு சார்பில் அளிக்கப்படும் அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பரீதியாக அங்கீகாரம் வேண்டுமென்ற கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்பட பல்வேறு அடையாள அட்டைகள் அரசின் பல்வேறு துறைகளால் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும், ஏமாற்றுப் பேர்வழிகளும் இதுபோன்ற பல்வேறு போலியான அடையாள அட்டைகளைத் தயாரித்து மக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருவது நாள்தோறும் செய்தியாகி வருகிறது. முக்கியமாக போலி அடையாள அட்டைகள் மூலம் சிம் கார்டுகளை வாங்கி தவறாகப் பயன்படுத்துவது, சிபிஐ அதிகாரிகள், வருமான வரித் துறையினர் என போலி அடையாள அட்டைகளைக் காண்பித்துக் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ரவி கிரண் சிங் என்பவர் பொது நலன் மனு தாக்கல் செய்தார். அதில், அரசின் பல்வேறு துறைகளும் பொதுமக்களுக்கு பல்வேறு அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது. ஆனால், இவற்றில் எதுவும் தொழில்நுட்பரீதியாக நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை. மேலும், காலாவதியான, ரத்தான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதும்,
அரசுத் திட்டங்களின் பயனடைவதும் தொடர்கிறது. இவற்றைத் தடுக்க தொழில்நுட்பரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், எல். நாகேஷ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அடையாள அட்டைகள் தொடர்பாக மனுதாரர் கூறியுள்ள விஷயங்களை மத்திய அரசு பரீசிலிக்க வேண்டும். அதேநேரத்தில் இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com