உ.பி. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: பிரியங்கா காந்தி முதல்முறையாக பங்கேற்பு

உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி முதல்முறையாகப் பங்கேற்றார்.
உ.பி. தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: பிரியங்கா காந்தி முதல்முறையாக பங்கேற்பு

உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி முதல்முறையாகப் பங்கேற்றார். இது அந்த மாநில காங்கிரஸாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் சமாஜவாதி கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ் இடையே நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் ஷீலா தீட்ஷித் முதல்வர் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கிவிட்டது.
எனினும், தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டால் கூடுதல் வாக்குகளைப் பெற முடியும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்பது கட்சியின் மாநிலத் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. ஷீலா தீட்ஷித் இதனை வெளிப்படையாகவே சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். கூட்டத்தில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், ஷீலா தீட்ஷித், பிரசாரக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் ஆகியோருடன் தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி ஆர்வத்துடன் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றது இதுவே முதல்முறை. தேர்தலின்போது சிறிய கட்சிகளான ஆர்எல்டி, அமைதிக் கட்சி உள்ளிட்டவற்றுடன் கூட்டணி வைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார். பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா? என்ற கேள்விக்கு, "இது தொடர்பான முடிவை பிரியங்கா காந்தி விரைவில் எடுப்பார்' என்று அவர் பதிலளித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதி, ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் மட்டுமே பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். உத்தரப் பிரதேசத்தில் அந்த இரு தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com