கேரள லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: விசாரணைக்கு உத்தரவு

கேரள மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபியின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கேரள மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபியின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து குற்றவியல் போலீஸ் (கிரைம் பிராஞ்ச்) விசாரணைக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபி ஜேக்கப் தாமஸ் புகார் அளித்துள்ளார். அதேபோல், முதல்வர் பினராயி விஜயனுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், தாம் பதவி விலகுவதற்கு அனுமதிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரம் திங்கள்கிழமை எதிரொலித்தது. தாமஸின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து பேரவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விவாதிக்கக்கோரி காங்கிரஸ் கூட்டணி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: ஜேக்கப் தாமஸ் எந்தவிதமான குற்றச்சாட்டையோ அல்லது புகாரையோ தெரிவிக்கவில்லை. தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், மின்னஞ்சல் இடைமறிக்கப்படுவதாகவும் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் குறித்து காவல்துறை தலைவரின் கவனத்துக்கு அவர் கொண்டு வந்துள்ளார். இதில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு தொடர்பான விவகாரத்தில் தொலைபேசிகளை உளவு அமைப்புகள் ஒட்டுக்கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அவ்வாறில்லாமல் சட்டவிரோதமாக தொலைபேசியை ஒட்டுக்கேட்பதோ, இடைமறிப்பதோ குற்றமாகும். இதுதொடர்பான விதிகளை யாரும் மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து கிரைம் பிராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்துவார்கள். பதவி விலக விருப்பம் தெரிவித்து தாமஸ் எந்த கடிதத்தையும் அளிக்கவில்லை. தனது கருத்துகளை மட்டுமே அவர் தெரிவித்துள்ளார். அவரைப் போன்ற திறமையான அதிகாரி பணியில் நீடிக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும் என்றார் பினராயி ராயன்.
முன்னதாக, சட்டப்பேரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "இந்த விவகாரம் குறித்து சிபிஐ போன்ற மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும்' என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், "அரசுக்கு தெரிந்தே தாமஸின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது' என்றார்.
எனினும், சட்டப்பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு பேரவைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com