சீனாவைஒட்டிய எல்லைப் பாதுகாப்பில் முதல்முறையாக இந்திய வீராங்கனைகள்

சீனாவைஒட்டிய எல்லைப் பகுதியில், இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவைஒட்டிய எல்லைப் பகுதியில், இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில், கிரேட்டர் நொய்டாவில் அந்தப் படையின் இயக்குநர் கிருஷ்ண செளதரி, செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
இருபாலருக்குமான இந்திய எல்லைக் கண்காணிப்புப் பணிக்காக ஏற்படுத்தப்படும் முகாம்களில் பணியாற்றுவதற்காக பெண்களுக்கு அண்டை நாடுகளுடன் போரிடும் ஆற்றல் குறித்தும், ஆயுதங்களைப் பயன்படுத்தும் விதம் குறித்தும், மலையேற்றம் குறித்தும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 44 வார பயிற்சி அளிக்கப்பட்டது.
அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள இந்திய- திபெத் எல்லையிலும், சில பெண்கள் ஹிமாசலப் பிரதேசம். உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளிலும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளாகும்.
பெண்கள் பணியமர்த்தப்பட்டு வரும் எல்லை முகாம்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8,000 முதல் 14,000 அடி உயரத்தில் உள்ளன. இதில் உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய எல்லையின் கடைசி கிராமமான "மனா' மலையில் உள்ள முகாமும் அடங்கும்.
மேலும் இவர்கள் பணியாற்றவுள்ள இடங்கள் கடுமையான பருவநிலை மாற்றம் கொண்டதாகவும், இந்திய- சீன எல்லை அருகே கடைசியாக உள்ள மலைப் பாங்கான நிலப்பரப்பு கொண்டதாகவும் இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com