ரூ.85 ஆயிரம் கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் 57 தொழிலதிபர்கள்

வங்கிகளில் ரூ.85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் 57 தொழிலதிபர்கள் உள்ள‌தாக உச்ச நீதிமன்றத்தில்
ரூ.85 ஆயிரம் கோடி வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றும் 57 தொழிலதிபர்கள்

புதுதில்லி: வங்கிகளில் ரூ.85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் 57 தொழிலதிபர்கள் உள்ள‌தாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான பொது நல வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிகளில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கும் 57 தொழிலதிபர்கள் பெற்றது ‌மட்டும் 85 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், அதற்கு குறைவான க‌டன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொகை ஒரு லட்சம் கோடியை தாண்டுமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடன் பெற்ற தொழிலதிபர்களின் பெயர்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுவதில் தயக்கம் ஏன் என்று‌, ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒருவர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார் என்றும், அதில் அவர் எவ்வளவு திருப்பிச் செலுத்தியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஏமாற்றுபவர்களின் ‌விவ‌ரங்களை ஏன் வெளியிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
‌ரிசர்வ் வங்கி நாட்டின் நலனுக்காக பணியாற்ற வேண்டுமே தவிர, வங்கிகளின் நலனுக்காக பணியாற்றக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், ரூ.500 கோடிக்கும் மேல் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாத தனி நபர்களின் பெயர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது குறித்த விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் ரூ.500 கோடி அல்லது அதற்கு மேல் கடன் வாங்கியவர்கள் பெயர்களை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று கூறிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "மக்களின் பணத்தில் பல்லாயிரம் கோடி கடன் பெற்றுக்கொண்டு நிறுவனம் நொடித்துப் போனதாக அறிவித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பறந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால், 20 ஆயிரம் அல்லது ரூ15 ஆயிரம் கடன் பெற்று நொடித்துப் போய் இருக்கும் சிறு ஏழை விவசாயிகளிடம் வங்கிகளின் கடுமையான நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது வாதத்தில் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியலை சமர்பித்தது. 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல், கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து பறந்துபோனார் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com