நீதித்துறைக்கு பூட்டுப்போட விரும்புகிறீர்களா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

நீதித்துறைக்கு பூட்டுப்போட நீங்கள் விரும்புகிறீர்களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நீதித்துறைக்கு பூட்டுப்போட விரும்புகிறீர்களா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

புதுதில்லி: நீதித்துறைக்கு பூட்டுப்போட நீங்கள் விரும்புகிறீர்களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையில்  நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பரஸ்பரம்  குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துக்களாவது:

பல்வேறு உயர நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுகிறது. கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பல நீதிமன்ற அறைகள் நீதிபதிகள் இல்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. இவ்வாறு நீதித்துறைக்கு பூட்டுப்போட நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் இயக்கத்தையும் உங்களால் நிறுத்த முடியாது. கோர்ட்டு அறைகளை மூடி நீதியை விரட்டி விடுகிறீர்கள்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் நிறைய விருப்பு வெறுப்புகள் உள்ளன. இது எந்த ஒருவரின் ஈகோ சம்பந்தப்பட்டதும் இல்ல. இது தனிப்பட்டதும் அல்ல. மாறாக அவதியுறும் நீதித்துறை சம்பந்தப்பட்டது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறுகையில், 'நீதிபதிகள் நியமன தாமதத்துக்கு நடைமுறை குறிப்பாணையை இறுதி செய்யாததும் ஒரு காரணம்' என்று கூறினார்.

அதை காரணம் காட்டி நீதிபதிகள் நியமன நடைமுறைகளை நிறுத்தி வைக்க முடியாது. இந்த குறிப்பாணை இல்லாமல் நீதிபதிகள் நியமன நடைமுறையை செயல்படுத்துவதாக நீங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறீர்கள்.  என்று நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகள் நியமன நடைமுறையில் நிலவி வரும் மெத்தனப்போக்கை கைவிடவில்லை என்றால் பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டம், நீதித்துறை செயலாளர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

நீதிபதிகள் நியமன நடைமுறையில் கூடுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர் பார்க்கலாம் என்று முகுல் ரோஹத்கி பதிலளித்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நவம்பர் 11-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com