இந்திய ராணுவத்தின் பதிலடியில் இதுவரை 15 பாகிஸ்தான் வீரர்கள் சாவு

ஜம்மு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியத் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 15 பேர்
இந்திய ராணுவத்தின் பதிலடியில் இதுவரை 15 பாகிஸ்தான் வீரர்கள் சாவு

ஜம்மு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியத் தரப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 15 பேர் உயிரிழந்து விட்டனர்.
உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அண்மையில் அதிரடித் தாக்குதல் நடத்தினர். அது முதல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகினர்.
எல்லை கிராமங்கள் மீது தாக்குதல்: இதனிடையே, ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே உள்ள ஆர்னியா மற்றும் ஆர்.எஸ்.புரா ஆகிய பகுதிகளில் உள்ள 29 கிராமங்களுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் காயமடைந்தனர். பல வீடுகள் தரைமட்டமாகின. மேலும், ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.
இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தின் கதுவா, பூஞ்ச், ரஜௌரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும், அவர்களுடன் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ்) இணைந்து இயந்திரத் துப்பாக்கிகள், சிறிய ரக பீரங்கிகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பல்லன்வாலா பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (35) என்பவரும், பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த உஸ்மா (50) என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.
இந்தியா பதிலடி: இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
ராக்கெட் குண்டுகள் மூலமாகவும், அதிநவீன சிறிய ரக பீரங்கிகள் மூலமும் நடத்தப்பட்ட தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தச் சண்டையில் பாகிஸ்தானின் எல்லையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் பூண்டோடு அழிக்கப்பட்டன.
கடந்த 21-ஆம் தேதி முதல் இதுவரை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மறுப்பு: இதனிடையே, இந்திய ராணுவத்தின் பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 15 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல்களை திசைதிருப்பும் நோக்கில் இத்தகைய தவறான தகவல்களை இந்தியா வெளியிட்டு வருவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com