இந்தியா மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் தாக்கு

பயங்கரவாதத்தின் துணையுடன் இந்தியா மீது பாகிஸ்தான் கோழைத்தனமாக தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது
இந்தியா மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் தாக்கு

பயங்கரவாதத்தின் துணையுடன் இந்தியா மீது பாகிஸ்தான் கோழைத்தனமாக தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
சீனாவையொட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய - திபெத்திய எல்லைப் படையின் 55-ஆவது ஆண்டு விழா, தில்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பாகப் பணியாற்றிய படை வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பாதுகாப்பில் இந்திய - திபெத்திய எல்லைப் படையினரின் பங்கு அளப்பரியது. சீன எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் நடைபெறும் ஊடுருவல்களைத் தடுப்பதிலும், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்களை முறியடிப்பதிலும் இந்திய - திபெத்திய படையினருக்கு நிகர் அவர்கள் மட்டுமே.
குறிப்பாக, நிகழாண்டில் மட்டும் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் 60 சதவீதம் அளவுக்கு முறியடிக்கப்பட்டுள்ளன. வீரத்துக்கும், துணிச்சலுக்கும் பெயர் பெற்ற இந்திய - திபெத்திய எல்லைப் படையால்தான் நமது எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுகிறது. தங்கள் உயிரையும் துச்சமாக எண்ணி செயலாற்றும் துணிச்சல்மிக்க இந்திய - திபெத்திய படை வீரர்களுக்கு நம் நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகளையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் மீது தாக்கு: உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதை நமது அண்டை நாட்டால் (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பயங்கரவாதத்தின் துணையுடன் இந்தியா மீது கோழைத்தனமான தாக்குதலை அந்நாடு நடத்துகிறது. பயங்கரவாதிகளின் பின்னால் நின்றுகொண்டு இந்தியா மீது மறைமுகப் போரைத் தொடுத்து வருகிறது. பயங்கரவாதம் என்பது கோழைகளின் ஆயுதமாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். எந்த நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நமது ராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது இரண்டு மடங்கு பதில் தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
உச்சிப் பதக்கம் அறிவிப்பு: இந்த விழாவில் பேசியபோது, மலை உச்சிகளில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு சார்பில் "உச்சிப் பதக்கம்' விரைவில் வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டு மக்களின் நலனுக்காக இமயமலைத் தொடர்களில் கடுங்குளிரையும், மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பாராட்டும் விதமாக "உச்சிப் பதக்கம்' விரைவில் வழங்கப்படவுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 9 ஆயிரம் அடிக்கும் அதிகமான மலை உச்சிகளில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர், ராணுவ வீரர்கள், இந்திய - திபெத்திய எல்லைப் படையினர், இந்திய - நேபாள எல்லைப் படையினர், இந்திய - பூடான் எல்லைப் படையினர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com