உ.பி.: பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில மக்களை முதல்வர் அகிலேஷ் யாதவ்
உ.பி.: பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில மக்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஸ்டீல் தட்டுகள் மற்றும் தம்ளர்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லக்னௌவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை எழுப்பினார். இதே கோஷத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, எடாவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுப்பினார்.
இதற்கு முன்பு அவர்கள் வேறு ஒரு கோஷத்தை எழுப்பியதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏற்கெனவே, "பாரத் மாதாவுக்கு ஜே' என்று கூறிதான் அவர்கள் தங்கள் பேச்சை முடிப்பது வழக்கம். இப்போது அதை மாற்றி வேறு கோஷத்தை எழுப்புகிறார்கள். எனவே, தேர்தல் பிரசாரம் வரை மதவாதச் செயல்திட்டத்தின்படி அவர்கள் என்னென்ன சொல்லப் போகிறார்களோ? அவர்களிடம் நாம் (மக்கள்) எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வளர்ச்சி என்று பார்த்தால், லக்னௌவுக்கு அப்படி என்ன பெரிதாக செய்து விட்டீர்கள்? என்று பாஜகவிடமும் அதன் தலைவர்களிடமும் கேட்க விரும்புகிறேன். மேற்கொள்ளப்பட்ட பணிகளின் அடிப்படையில் மதிப்பிட்டால், மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி அரசுடன் மத்திய அரசை ஒப்பிடவே முடியாது.
பகுஜன் சமாஜ் கட்சியானது உத்தரப் பிரதேசத்தில் தனது ஆட்சிக் காலத்தில் விலைமதிப்புமிக்க ஏராளமான நிலங்களைப் பறித்தது. அந்த இடங்களில் கட்சித் தலைவர் (மாயாவதி) மற்றும் யானை சிலைகளை அமைத்தது. தனது வாழ்நாளின்போதே தன் சிலைகளை அமைக்கும் சிந்தனையை அவர் எங்கிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் சமாஜவாதி கட்சி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்வார்கள் என்றார் அகிலேஷ் யாதவ்.
"அகிலேஷின் முடிவுகள் குறித்து விசாரணை': இதனிடையே, உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் அகிலேஷ் யாதவ் எடுத்த பல்வேறு பொருளாதார முடிவுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகிலேஷின் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. அவர் மிகப்பெரிய பொருளாதார முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். அவற்றைப் பற்றி விசாரணை நடத்த, பகுஜன் சமாஜ் அரசு அமைந்ததும் உத்தரவிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com