உளவு பார்த்த விவகாரம்: தேடப்பட்டு வந்த ஜோத்பூர் நபர் கைது

இந்தியப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களை உளவு பார்த்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சோஹிப் என்பவரை ஜோத்பூர் அருகே போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சோஹிப்பை தில்லி குற்றப்பிரிவு காவல் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துவரும் போலீஸார்.
கைது செய்யப்பட்ட சோஹிப்பை தில்லி குற்றப்பிரிவு காவல் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துவரும் போலீஸார்.

இந்தியப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களை உளவு பார்த்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சோஹிப் என்பவரை ஜோத்பூர் அருகே போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தானைச் சேர்ந்த மெளலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கீர் ஆகியோரின் உறுதுணையுடன் அவர் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான ஜோத்பூரைச் சேர்ந்த சோஹிப் என்பவர் தலைமறைவானதால், அவரை போலீஸார் தேடி வந்தனர். இதற்கு நடுவே, வெளியுறவுச் சட்ட விதிகளின்படி, மெஹமூத் அக்தரை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த சோஹிப், ஜோத்பூர் அருகே பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வியாழக்கிழமை இரவு அவரைக் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) வாங்கித் தரும் முகவராக சோஹிப் செயல்பட்டுள்ளார். அதன் வாயிலாக பல்வேறு தகவல்களை திரட்டிய சோஹிப், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன? என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து மெஹமூத் அக்தரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சோஹிப், தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 11 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார் என்றார் அவர்.
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மெஹமூத் அக்தர் உளவு பார்த்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத், மகாராஷ்டிரம், கோவா மட்டுமன்றி நாட்டின் மேற்கு கடற்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகள் குறித்த விவரங்களை மெஹமூத் அக்தர் தலைமையிலான குழு திரட்டியுள்ளது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, கடல் வழியே பயங்கராதிகளை இந்தியாவுக்கு ஊடுருவ வைக்கத் திட்டமிட்டிருக்கலாம்.
மும்பையில் நடத்தியதைப் போன்ற பயங்கரவாதத் தாக்குதலை மீண்டும் அரங்கேற்றும் திட்டமாகவும் இது இருக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com