"பயங்கரவாதத்தால் உயிரிழப்பு அதிகம் நிகழும் 3-ஆவது நாடு இந்தியா'

பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் உள்ளிட்டவற்றால் அதிகம் உயிரிழப்பை சந்திக்கும் மூன்றாவது நாடு இந்தியா என்று உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் உள்ளிட்டவற்றால் அதிகம் உயிரிழப்பை சந்திக்கும் மூன்றாவது நாடு இந்தியா என்று உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர் நந்தினி சுந்தர் உள்ளிட்ட பலரை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிடக் கோருவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
இந்தியாவில் நக்ஸல் ஆதிக்கம் அதிமுள்ள சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும், பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் அதிக அளவு உயிரிழந்து வருகின்றன.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள சிரியா, இராக் உள்ளிட்ட பகுதிகள், போகா ஹராம் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து, பயங்கரவாதம், நக்ஸல், மாவோயிஸ்ட், பிரிவினை இயக்கங்களால் அதிக உயிரிழப்பை இந்தியா சந்தித்து வருகிறது.
பயங்கரவாதத் தாக்குதல்கள், பிரிவினைவாதம் இயக்கங்கள் நடத்தும் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் உயிரிழப்போர் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.
பயங்கரவாதத்தையும், நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளையும் ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதே நேரத்தில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நந்தினி சுந்தர் உள்ளிட்ட பலர், சத்தீஸ்கர் போன்ற நக்ஸல் ஆதிக்கமுள்ள பகுதியில் தங்கியிருந்து அந்த இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
நக்ஸல்களின் ஆதிக்கம் குறைந்துவிடக் கூடாது என்பதுபோல அவர்களது செயல்பாடுகள் உள்ளன. அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டு அங்கு பிரச்னையைத் தூண்டிவிடும் காட்சிகள் அடங்கிய சி.டி. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அரசு விரும்புகிறது. எனவே, பிரச்னையைத் தூண்டுவோர்கள் சத்தீஸ்கரில் இருந்து வெளியேற உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com